தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 06, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களை ஊக்கப்படுத்துவோம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு, என் தூரத்து உறவினரை சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்த பின், அவரது மகளைப் பற்றி விசாரிக்க எண்ணி, 'பெரியப்பா... பாப்பாவுக்கு கல்யாணம் முடிந்ததா... எப்படியிருக்கா?' என்றேன். இதைக் கேட்டவுடன் அவர், 'இல்லைப்பா... இன்னும் முடியலை. இப்போ தான், வரன் பார்த்துக் கொண்டிருக்கோம். சீக்கிரமே முடிந்து விடும்...' என்றார் உற்சாகமாக.

'திருமணம் முடியவில்லை என்பதை, இவ்வளவு மகிழ்ச்சியாக சொல்கிறாரே...' என புரியாமல், மேலும் சில விவரங்களை பேசிக் கொண்டே நடந்த போது, ஒரு கடை முன் என்னை நிறுத்தி, 'இதுதான் பாப்பா நடத்தி வரும் கடை...' என்றார் பெருமிதமாக.

மேலும், அவரே, 'பாப்பாவுக்கு படிப்பு மேல ஆர்வம் குறைஞ்ச உடனே, நாங்கள் கல்யாணம் செய்திடலாம்ன்னு தான் நெனைச்சோம். அப்போ, அவளுக்காக சேர்த்திருந்த பணத்தை வைத்து, ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஒரு ஜெராக்ஸ் மிஷின் வாங்கிக் கொடுத்தோம். அதை முதலீடாக வைத்து, முன்னேற்றமடைந்து, ரெண்டு வருடத்தில் அவளுக்கு தேவையான நகைகளையும் எடுத்துக்கிட்டா. அதோடு, ரெண்டு பொண்ணுகளுக்கும் வேலை கொடுத்து, நல்லபடியா நிர்வாகம் செய்துக்கிட்டு வர்றா...' என்றார்.

எனக்கு ஆச்சரியம் தாளாமல், என் தங்கை முறையான அந்த பெண்ணையும் பாராட்டி, வாழ்த்திவிட்டு வந்தேன். பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், வளர்ச்சி காண்பதோடு, குடும்பத்தையும் வாழச்செய்து விடுவர் என்பதை, கண் கூடாக பார்த்தேன்.

— எஸ். பூவேந்தரசு, கம்பைநல்லூர்.

தோழி செய்யும் சேவை!

நீண்ட காலமாக, தனியார் பள்ளி ஒன்றில், குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த என் தோழிக்கு, கடந்தாண்டு, கிராமப்புற அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்று வர இயலாததால், அந்த ஊரிலேயே வீடு வாடகைக்கு அமர்த்தி, தங்கி பணியாற்றி வருகிறாள். சமீபத்தில், அவளை சந்திக்க நேர்ந்த போது, அவளது பணி குறித்து விசாரித்தேன்.

பள்ளி நேரம் போக, மீதி நேரம் ரொம்பவும் போரடித்ததாகவும், அதனால், அங்குள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக கணக்கு வகுப்பும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் எடுப்பதாகவும் தெரிவித்தாள். இந்த ஓராண்டு காலத்தில், அந்த கிராம மாணவர்கள் பலரும், கூச்சமின்றி ஆங்கிலத்தில் உரையாட பழகி விட்டதாகவும், இதனால், ஊர் தலைவர் உட்பட, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் பலரும், தோழியை பாராட்டுவதோடு, மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாகவும் கூறினாள். தோழியின் அனுபவத்தைக் கேட்ட எனக்கு, பெருமிதமாக இருந்தது. கிராமப்புறங்களில் தங்கி, ஆசிரியர் பணிபுரிபவர்கள், இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு, மாணவர்களுக்கு உதவலாமே!

— ஜே. சில்வியா எட்வர்ட், திருநெல்வேலி.

ஏமாறாதே... ஏமாற்றாதே!

என் மகள் படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு சென்றிருந்தேன். புராண ஓரங்க நாடகம் ஒன்று நடந்தது. அதில், மாணவ, மாணவியர் உணர்ச்சிகரமாக நடித்தது, தத்ரூபமாக இருந்தது. ஆண்டு விழா முடிந்து, அதில் நடித்த மாணவியரை பாராட்டிய போது தான், ஒரு உண்மை புரிந்தது. நாடகம், ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில், இசை சேர்ப்புடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆசிரியர்களே வசனங்களை பேசியதாகவும், ஆண்டுவிழா மேடையில், மாணவர்கள், வெறுமனே உதட்டை அசைத்து, கை கால்களை ஆட்டியதாகவும் கூறினர். எனக்கு, 'திக்' என்றது.

மாணவர்களின் உண்மையான திறமையை வெளிப்படுத்தி, அவர்களை ஒரு நல்ல கலைஞனாக உருவாக்க வேண்டாமா? மேடையில் தைரியமாக பேசி, கூச்சமும், பயமும் அகன்று, தன்னம்பிக்கை பெற வேண்டாமா? யாரோ வசனம் பேச, மாணவர்கள் உதட்டை அசைக்கும், ஏமாற்றுத்தனத்தை ஆசிரியர்களே கற்றுத் தரலாமா?

— மல்லிகா அன்பழகன், சென்னை.

தானே பேசி நடிப்பதை விட, டப்பிங் வாய்சுக்கு நடிப்பது, சிரமம் சகோதரி. பாட்டுப்பாட, 'டப்பிங்' என இருந்தது. வசனம் பேசவும், 'டப்பிங்' என வந்து விட்ட காலத்தில், பிள்ளைகள் பிழைத்துக் கொள்வர்.

— பொ.ஆ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us