PUBLISHED ON : மே 06, 2012

மே 6 - அழகர் வைகை வைபவம்!
தீர்த்தயாத்திரை செல்லும் பாக்கியம் நம்மில் எத்தனை பேருக்கு கிடைக்கிறது! 'கங்கையில், வாழ்வில் ஒருமுறையேனும் நீராடு...' என்கின்றனர் பெரியவர்கள். எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், கங்கையே நம்மைத் தேடி வருகிறது! அதிலும், கங்கை நீரை, ஆண்டவனே சுமந்து வருகிறார், நம் மீது தெளிக்கிறார் என்றால், அதை விட பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும்! ஆம்... அழகர் வருகிறார். தீர்த்தம் தெளிக்கிறார், மக்களின் பாவங் களைக் கழுவுகிறார். தவளை கூட, உயர்ந்த பிறவியான மானி டப் பிறப்பை எடுக்கிறது.
நீர் நிலைகளை, உயிரினும் மேலாக பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலி யுறுத்தும் வகையில், பல விழாக்களை முன்னோர் உரு வாக்கினர். அதில் ஒன்று, மதுரை சித்திரை திருவிழா. தன் கல்யாணத்திற்காக, ஒரு நதியை உருவாக்கிய சொக்கநாதர், 'வைகை' என அழகான பெயரிட்டார். வைகுண்டம், கைலாயம் ஆகியவற்றின் முதல் எழுத்தைச் கோர்த்து வைத்த பெயர் அது. புனிதமான அந்த நதியில், தன் பக்தனான சுதபஸ் மகரிஷி, ஒரு சாபத்தால் தவளை ரூபமடைந்து வருந்து வதைக் கண்ட பெருமாள், அவருக்கு சாப விமோசனம் அளிக்க, வைகையில் இறங்கினார். பெருமாளின் திருவடி, வைகையில் பட்டதால், அந்த ஆறு, கங்கைக்கு நிகரான அந்தஸ்தைப் பெற்றது. பாவ விமோசனம் தந்தது.
வாமன அவதாரத்தின் போது, மகாவிஷ்ணு, உலகை அளக்க, தன் திருவடியை தூக்கினார். அது வானுலகை எட்டியது. பெருமாளின் திருவடியைக் கண்ட பிரம்மா, மகிழ்ச்சியுடன் பாதங்களை கழுவி பூஜை செய்தார். அது பெருமாளின் நூபுரம் (கால்சிலம்பு) மீது பட்டு தெறித்தது. அந்தத் துளிகள், பூலோகத்திலுள்ள அழகர்மலை மீது விழுந்து, தீர்த்தமாக மாறியது. இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் மகரிஷி, பெருமாளை நினைத்து தியானத் தில் இருந்தார். அவரைக் காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோப மடைந்த துர்வாசர், 'நீ மண்டூகமாக (தவளை) போ!' என சாபமிட்டார்.
'துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்கவில்லை. விமோசனம் தந்தருள வேண்டும்...' என வேண்டினார். அதற்கு துர்வாசர், 'வேகவதி என்கிற வைகை ஆற்றில், தவளை வடிவிலேயே தவம் செய். பெருமாள் அங்கு வருவார். அவரது திருவடி பட்டதும், உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்...' என்றார். இதனால் தான் அழகர், ஆற்றில் இறங்குகிறார். பக்தர்களின் மனதை களவாடும் பேரழகுடன் திகழ்வதால், 'கள்ளழகர்' எனப்படுகிறார். அதனால், கள்ளனைப் போல் வேடமிட்டு வருகிறார்.
அழகர்கோவில் உருவான வரலாறையும் தெரிந்து கொள்வோம். ஒரு காலத்தில், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில், யாரும் தவறு செய்வதே கிடையாது. இந்தச் சூழலைக் கெடுத்து விட்டான் ஒரு காமுகன். அவன், ஒரு பெண்ணை பலாத்காரம் செய் வதற்காக துரத்தி வரும் போது, தர்ம தேவன் என்பவன், அவனை ஒரே அடியில் வீழ்த்தினான். இதையறிந்த சிவன், 'உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக் கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே, அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன்...' என கூறி, தர்மதேவனுக்கு, 'எமன்' என பெயரிட்டு, ஒரு கொடூர உருவத்தை வழங்கினார். நல்லது செய்யப்போய், 'நம் உருவம் இப்படி ஆகி விட்டதே...' என கவலை கொண்டான் தர்மதேவன்.
'என் உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நான் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாவது அழகாக இருக்க வேண்டும்...' எனக்கோரி அழகர்மலையில் தவம் இருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த அழகு தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சியளித்து, 'என்ன வரம் வேண்டும்?' என்றார். 'நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும். தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தர வேண்டும்...' என்றான். தர்ம தேவனின் வேண்டுகோளின்படி, மகாவிஷ்ணு சுந்தரராஜப் பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால், அழகு. எனவே அழகர் என்ற பெயர் ஏற்பட்டது. அவர் காட்சி தந்த மலை, அழகர் மலை ஆனது. அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்ம தேவனே செய்வதாக ஐதீகம்.
அழகர் வரலாறைப் படித்தவர்கள் பாவ விமோசனம் பெறுவது உறுதி.
***
தி. செல்லப்பா
