தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 03, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவுரை வழங்க வேண்டியவர்களே அபகரிக்க நினைக்கலாமா!

தமிழக அரசின் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு பயிலும் என் தம்பி, அவனுக்கு வழங்கிய இலவச மடிக்கணினியை வீட்டுக்கு எடுத்து வந்து, எங்களிடம் காண்பித்து மகிழ்ந்தான். 15 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புடைய, அந்த மடிக்கணினியை பத்திரமாக வெளியில் எடுத்துச் செல்வதற்கு, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உறுதியான லெதர்பேக்கையும் உடன் வழங்கியிருந்தனர். இவற்றை பெற்றோருடன், நானும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த போது, என் தம்பி, அப்பா நாங்கள் மடிக்கணினி வாங்கி வந்தவுடன், எங்களுக்கு வகுப்பு எடுக்கும் சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும், 'ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ரூபாய் தருகிறோம், உங்கள் கணினியை எங்களுக்கு விற்று விடுகிறீர்களா?' என்று கேட்டனர், என அவன் சொல்ல, நாங்கள் அதிர்ச்சியானோம். கணினியின் சிறப்பையும், தேவையையும் மாணவர்களுக்கு அக்கறையுடன் சொல்லி, நல்லதொரு எதிர்கால வாழ்வுக்கு கணினி இன்றியமையாதது என்ற அறிவுரை வழங்க வேண்டிய பொறுப்பு மிக்க ஆசிரியர்களே... இப்படி மாணவர்களிடம் பணத்தாசை காட்டி, அவர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கணினியை பறிக்க நினைக்கலாமா?

ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்.


வேண்டாமே இந்த விபரீதம்!

நான் சமீபத்தில், திருத்தணியில் இருந்து மின்சார ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு சென்றேன். அங்கு பணிகளை முடித்து விட்டு, மாலை, 5 மணிக்கு சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மின்சார ரயிலில் பயணம் செய்தேன்.

நான், மூன்று பேர் உட்காரும் சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்தேன். என் எதிர் சீட்டில், 18 வயதில் உள்ள இரு இளம்பெண்களும், 22 வயதுள்ள ஒரு வாலிபனும் உட்கார்ந்தனர். மின்சார ரயில் புறப்பட துவங்கியது முதல் அரக்கோணம் ரயில் நிலையம் வரும் வரை, சுமார், 2 மணி நேரமும், அந்த வாலிபரும், இரு பெண்களும் விளையாடிக் கொண்டே வந்தனர்.

அதாவது, இளம்பெண்கள் போட்டி போட்டு முத்தம் கொடுப்பது, கையால் அடிப்பது, தொடை யில் கிள்ளுவது போன்ற சின்ன, சின்ன சில்மிஷங்களில் வாலி பரும், இரு பெண்களும் ஈடுபட்டனர். இச்செயல்களை சகிக்க முடியாத சில நபர்கள் வேறு சீட் பிடித்து அங்கே சென்று விட்டனர்.

ரயிலில் அதிகளவில் பயணம் செய்யும், பொதுமக்கள் மத்தியில், இது போன்ற செயல்களால் சிலர் வெட்கப்படுகின்றனர். குறிப்பாக அப்பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகள் முகம் சுளித்தனர். இக்காட்சியை அந்த இளம்பெண்களின் பெற்றோர் அல்லது உறவினர்கள் பார்த்திருந்தால், அப் பெண்களின் நிலை என்ன? இனியாவது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பஸ், ரயில் போன்றவற்றில் பயணம் செய்யும் போது, நாகரிகமாக நடந்து கொள்ளலாமே!

பி.நாராயணன், திருத்தணி.

தனியார் கல்லூரிகள் திருந்துமா?

சமீபத்தில் நடந்த திருமண விழாவில், எங்கள் தூரத்து உறவினர் குடும்பத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அவர்கள் மகள், அந்த வருடம் தான், பி.இ., படித்து முடித்தது, ஏற்கனவே எனக்கு தெரியும். அதனால், 'இப்போது என்ன செய்கிறாய்?' என்று விசாரித்தேன். அதற்கு அவள், மகாபலிபுரம் போகும் வழியில் இருக்கும், ஒரு தனியார் கல்லூரியில் சனி, ஞாயிறு மட்டும், எம்.இ., படிப்பதாகவும், திங்கள் முதல் வெள்ளி வரை, அதே கல்லூரியிலேயே, பி.இ., படிப்பவர்களுக்கு லெக்சரர் ஆக இருப்பதாகவும், பெருமையுடன் கூறினாள்.

எனக்கு பலத்த அதிர்ச்சி. ஏனென்றால், அவள் பி.இ., படிக்கும் போது, பல பாடங்களிலும், 'அரியர்ஸ்' வைத்து, பின் மறுபடியும் எழுதி தேர்ச்சி பெற்றாள். அதுவும், சுமாரான மதிப்பெண்ணே பெறும் மாணவி என்பது, அவள் அப்பா புலம்பி, நான் அறிந்த உண்மை.

அப்படிப்பட்டவளுக்கு, எம்.இ., பகுதி நேரம் படித்துக் கொண்டிருக்கையிலேயே, பி.இ.,க்கு பாடம் நடத்தும் லெக்சரர் வேலையை கொடுத்தால், அவள் வகுப்பு எடுக்கும் தரம் எப்படியிருக்கும்; அதைக் கேட்டு உருவாகும் நாளைய பொறியாளர்கள், எப்படி இருப்பர்?

எவ்வளவோ தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் வேலையற்று இருக்கும் போது, இந்த மாதிரி கத்துக்குட்டிகளை, தனியார் கல்லூரிகள் நியமிப்பது எதற்காக? அந்த கல்லூரிகளில் படிப்பின் தரம் எப்படியிருக்கும்?

இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, தனியார் கல்லூரிகள், மலிவு சம்பளத்திற்கு கிடைக்கின்றனர் என்பதற்காக, தகுதியற்றவர்களை நியமிப்பதை நிறுத்துமா?

இதற்கு, அரசு கட்டுப்பாடு விதிப்பது, வருங்கால இளைஞர் சமுதாயத்திற்கு நல்லது.

வி.ஜி.ஜெய்ஸ்ரீ, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us