PUBLISHED ON : ஜூன் 03, 2012

விமான தளத்தில் டிராலிகள், வரிசை வரிசையாய் கோர்த்து வைக்கப்பட்டிருந்தன. ஓடிப்போய் அவற்றில் ஒன்றை இழுக்க, வர மறுத்தது. அப்புறம் தான் தெரிந்தது, - அருகிலுள்ள பெட்டியில் 5 டாலர் போட்டால்தான், டிராலி ரிலீஸ் ஆகும். அதே போல் ஐந்து டாலர் போட்டதும், பெட்டி ரிலீஸ் ஆயிற்று.
லக்கேஜ் வர வேண்டிய கன்வேயர் பகுதி விசாலமாக இருந்தது. அங்கங்கே பல கன்வேயர்கள். ஒவ்வொரு விமானத்தின் பெயர், நம்பருடன் எலக்ட்ரானிக் போர்டுகள் மின்னின. வெவ்வேறு கன்வேயர்களிடம் கருப்பும், வெளுப்புமாய் பலரும் தென்பட்டனர். ஆனால், இங்கு யாருமில்லை. எந்த லக்கேஜ்களையும் காணவில்லை. இன்னும் வந்திருக்காதோ என்று விசாரித்தால், 'எவ்ரிதிங் ஓவர். வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் ப்ளைட்!' இப்போது என்ன செய்வது? சாதாரணமாய் ஒரு வண்டியில் வரும் சாமான்களை உரியவர்கள் வந்து எடுக்காத பட்சத்தில், கன்வேயரிலிருந்து இறக்கி வைத்து விடுவர்.
அந்த மாதிரி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். ம்கூம்... ஆரம்பத்திலிருந்தே, இந்தப் பெட்டிகள் தலைவலி! நண்பர்களிடம் போன் பண்ணி விசாரிக்கலாம் என்று பார்த்தால், மறுபடியும் சில்லரைத் தட்டுப்பாடு. இவர்கள் எங்கே போய் ஒழிந்தனர்... இன்னும் ஏன் வரவில்லை... யோசித்துக் கொண்டிருந்த போது —
'என்ன தேடறீங்க?'
தமிழ் அதுவும், பழகின குரலாய் ஈர்க்கவே திரும்பிப் பார்த்தால், அட... நண்பர்கள் விஜய், சரவணன். குடும்பத்துடனும், குசும்பலுடனும் அவர்கள், 'ஹாய்...' என்று புன்னகைத்தனர். எல்லாருமே சொல்லி வைத்த மாதிரி அரை டிராயர் மற்றும் டி-ஷர்ட்டில்!
'வந்து... எங்கள் பெட்டிகள்!'
'பூ.... பெட்டிகள்தானே... வாங்க போகலாம்...'
'லக்கேஜ் இல்லாம எப்படி?'
'அதெல்லாம் முன்பே ஏத்தியாச்சு!'
'எங்கே?'
'எங்க காரில்தான்!'
'ஆர் யூ ஜோக்கிங்... நாங்க இல்லாம நீங்க எப்படி எங்க பெட்டிகளை?'
'பேக்கைப் பார்த்தா தெரியாதா.... குவைத் - பிட்ஸ்பர்க்... நேரமாகுது. வாங்க போகலாம். அப்புறம் பார்க்கிங்கிற்கு நிறைய கப்பம் கட்ட வேண்டியிருக்கும்...' என்று வேகமாய் நடக்க ஆரம்பித்தனர்.
லக்கேஜ் பகுதிக்குள் இவர்கள் எப்படி வந்தனர்? விசிட்டர்களுக்கும் அங்கு அனுமதி உண்டாம்!
'விசிட்டர்கள் - யாருடைய பெட்டிகளையாவது எடுத்துப் போய் விட மாட்டார்களா?'
'மாட்டார்கள்... அந்த விதத்தில் ஒரு ஒழுங்கு - நேர்மை இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது...'
கேட்க வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இதே நம்மூரிலும் இப்படி விசிட்டர்கள் லக்கேஜ் பகுதிக்கும் வர முடியும் என்றால்?
முப்பது மணி நேரம் ஏர்போர்ட் காற்றையே சுவாசித்து அலுத்து, நமுத்து வந்ததற்கு, வெளியே வீசிய தென்றல் ஆசுவாசம் தந்தது. வழி நெடுக சாலைகளில், இரண்டு பக்கமும் பசுமைப் புல்வெளிகள்.
அடர்ந்த காடுகள்... அகலப் பாதைகள். மரங்கள் வளைந்து வந்து, சாலைகளை வம்புக்கிழுக்காமல் வலை அடித்திருக்கின்றனர்.
'மரம், செடி, கொடிகளை, எதுக்கு கம்பி வலை போட்டுத் தடுத்திருக்கின்றனர்?'
'இவையெல்லாம் பெரும்பாலும், பாரெஸ்ட்கள்! அவற்றை அரசு பொக்கிஷமாய் பாதுகாக்கிறது. உள்ளே வனவிலங்குகள் நிறைய உண்டு. மான்களும் அதிகம். அவைகள் விவரமில்லாமல் ரோடுக்கு வந்து அடிபட்டுவிடக் கூடாதுன்னுதான்...'
விஜய் சொல்ல, சரவணன், 'மானை இடித்து விபத்து பண்ணினால், இங்கு பெருங்குற்றம். உடன் ஜெயில்தான்...'
ஆனால், இதில் என்ன வினோதம் என்றால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில், மான் வேட்டைக்கு அரசு அனுமதி தருகிறது. ஒருவருக்கு ஒரு மானைச் சுடத்தான் அனுமதி!
'வருடம் முழுக்கப் போற்றிப் பாதுகாப்பது சுடத்தானா?'
மரங்களும், தோப்புகளும் குளிர்காலம் ஆரம்பிக்கும் போது, நிறம் மாறுகின்றன. அதன் இலைகள் செம்பழுப்பாகி, பிறகு, உதிர்ந்து விடுகின்றன.
எங்களுக்கு முன்னால், லாரி ஒன்றில் ஆரஞ்சு நிறத்தில் பறங்கிக்காய் போல நிறைய ஏற்றிச் செல்லப்பட, 'இவர்களுக்குப் பறங்கிக்காய்ன்னா ரொம்ப பிடிக்குமா?' என்றேன்.
'அப்படியில்லை... எல்லாம் - வரப்போற, 'ஹலோவின்' திருவிழாவுக்காக!'
'ஹலோவினா... அது என்ன?' என்றதற்கு, அபர்ணாவும், பிரவீணாவும் ஆர்வமுடன் சொன்ன தகவல்கள் வியப்பளித்தன.
'ஹலோவின்' திருவிழா. குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயம் - அக்டோபர் 31ல், இந்த விழா கொண்டாடப் படுகிறது. அறுவடைத் திருவிழா என்றும் சொல்லலாம். துறவிகளுக்கும், மூதாதையர்களுக்கும் நன்றி சொல்லும் வைபவம். பிசாசு - பில்லி, சூனியத்தையும் விரட்டுவதற்காகவும் இது நடத்தப்படுகிறது.
நம்மூரில் பூசணிக்காயின் அருமை, பெருமை, -அதிலுள்ள சத்துகள், கொழுப்பைக் குறைத்து, குடலைச் சுத்தப்படுத்தும் மேன்மை தெரியாமல், அதை திருஷ்டிக்காக உடைக்கிறோம். இங்கே பறங்கிக்காய்!
பூசணியின் மகிமை தெரிந்ததால், அதை உணவுக்கு வைத்துக்கொண்டு, அமெரிக்கர்கள், திருஷ்டிக்கு பறங்கிக்காயைத் தேர்வு செய்து கொண்டாடுகின்றனர் போலிருக்கிறது.
பெரிய, பெரிய ஷாப்பிங் மால்களில் கூட, டிசைன் டிசைனாய் பறங்கிக்காய்களை அடுக்கி வைத்திருக்கின்றனர். அவற்றில் விகாரமாய் படங்கள் வரைந்து மிரட்டுகின்றனர். அதீத கற்பனையுடன் பறங்கிக்காயில் வரைந்து, தங்கள் வீட்டு வாசலில் கட்டி வைக்கின்றனர். அதை பார்த்து, பேய் - பூதங்கள் ஓடிப் போகுமாம்!
அது தவிர, அன்று சிறியவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல், பயமுறுத்தும் வண்ணம் உடைகள் உடுத்தி உலா வருகின்றனர்.
இதில் பசங்களின் அலப்பரை தனி! அவர்களின் ஆரவாரத்திற்கு அளவே இருக்காது.
பறங்கிக்காய்களை வாங்கி, பலவிதமாய் வரைந்து வீடு, வீடாய் ஊர்வலம் செல்வர்.
அங்கு அவர்களுக்குப் பணம் தரணும். சாக்லேட்டுகள், இனிப்புகள்! விகாரமாய் வேஷமிட்டு, பிறரை மிரட்டுவர். பெரியவர்களும் தங்கள் விருப்பப்படி எலும்புக் கூடுகள், பேய் -பிசாசு போல் உடைகளில் டிசைன் செய்து உடுத்தி வந்து, பூச்சாண்டி காட்டுவர்!
கார் பயணத்தின்போது வழியில், மொபைல் ஒலிக்கவே, வாகனம் ஓட்டின சரணவன் எடுத்து பேச ஆரம்பித்தார் - சுற்றிலும் பார்த்துக்கொண்டே. நீண்ட தொலைவிற்கு போலீஸ் தென்படாத துணிச்சல்!
வாகனம் ஓட்டும்போது, மொபைல் பேசக் கூடாது என்ற சட்டம் அங்கும் உண்டு. போலீஸ் பார்க்காதவரை - பிடிக்கப்படாதவரை குற்றமில்லை என்ற மனோபாவம் இல்லாமலில்லை.
அது அலுவலக, விஷயமாயிருக்க வேண்டும். போனில் சம்பாஷனை தொடர்ந்து கொண்டே போக, 'சரவணா... பேசிக்கிட்டே டிரைவிங் வேணாம். ஒண்ணும் அவசரமில்லை. வண்டியை ஓரங்கட்டு...' என்றார் விஜய்.
வண்டி, சர்வீஸ் லேன் பார்த்து ஒதுங்கி நின்று இளைப்பாறிற்று. இரண்டு, மூன்று நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. எங்கிருந்து வந்தனர், எப்படி வந்தனர் என்று தெரியாது!
தலையில் மத்தாப்பு கொளுத்திக் கொண்டு, எங்களுக்குப் பின்னால் போலீஸ் வேன். அது - பாய்ந்து வந்து, வந்த வேகத்திலேயே ரோட்டை சிராய்த்து ஓசை எழுப்பி நின்றது.
அதிலிருந்து போலீஸ், அங்கிள் ஒருவர் வெளியே, 'ஜம்ப்' பண்ணி இறங்கி, எங்களை நோக்கி வேகமாய் வர ஆரம்பித்தார் மிடுக்குடன். எங்களுக்கு உள்ளுக்குள் ஜிவ்!
— தொடரும்
- என்.சி. மோகன்தாஸ்
