PUBLISHED ON : நவ 04, 2012

அந்தரங்க ஆபத்து... உஷார்!
சமீபத்தில், எனக்கு வந்த, 'இ-மெயில்' மூலமாக, மொபைல் போன் பற்றிய பயன்களும், அவற்றை, முறை தவறி பயன்படுத்தும் தகவல்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. அதற்கு உதாரணமாக, அந்த மெயிலில் இருந்த செய்தியை அப்படியே தருகிறேன்: பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கண்ணாடி முன், நிர்வாணமாக நின்று, தன்னைத் தானே மொபைல் போனில் படம் எடுத்துள்ளார்; பின், அதை அழித்தும் விட்டிருக்கிறார். ஆனால், தற்போது அந்த மாணவியின் நிர்வாண படத்தை, உலகம் முழுவதும், பலர், இணைய தளத்தில் பார்த்துள்ளனர்.
இதற்கு காரணம், மொபைல் போன் மற்றும் வீடியோ கேமராவில் எடுக்கப்பட்டு, அழிக்கப்படும் படங்களை, திரும்ப பெற முடியும் என்ற விஷயம், அந்த மாணவிக்கு தெரியாமல் போனது தான். இதனால், இன்று அவர், அவமானத்துக்கு உள்ளாகியுள்ளார். இன்று, அரசன் முதல் ஆண்டி வரை, மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை பயன்படுத்துகின்றனர். அவர்களில் அத்தனை பேருக்கும், மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் பற்றி, முழுவதுமாக தெரிந்திருக்குமா என்பது சந்தேகம் தான்!
அதிலும், தங்கள் மொபைல் போனில் எடுக்கப்பட்டு, பின் அழிக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ, 'கிளிப்பிங்'களை, மீண்டும் பார்க்க முடியும் என்ற விஷயம், அவர்களுக்கு புதிதாகவும், அதிர்ச்சி தரக் கூடியதாகவும் இருக்கும்.
இந்த விஷயம் தெரியாமல், பலர், தங்கள் படுக்கை அறை காட்சிகளை, மொபைல் போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து, ரசிக்கின்றனர்; பின், அழித்தும் விடுகின்றனர். என்றாவது, மொபைல் போனோ, டிஜிட்டல் கேமராவோ பழுதடைந்து, அதை சரி செய்ய சர்வீஸ் சென்டர்களில் கொடுக்கும் போது தான், விபரீதம் அரங்கேறுகிறது.
அழிக்கப்பட்ட படங்களை, திரும்ப பெறும் வசதி கொண்ட, பல, 'ரெகவரி சாப்ட்வேர்'கள் உள்ளன. ஆர்வக் கோளாறால், சர்வீஸ் சென்டர் ஆட்கள், (அனைவரையும் கூறவில்லை) இந்த சாப்ட்வேர் உதவியால், 'சென்சார்' செய்யப்பட்ட படங்களை பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
மனசாட்சி இல்லாதவர்கள், பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், உடனே, அப்படங்களை, சில இணைய தளங்களுக்கு விற்று விடுகின்றனர் அல்லது சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி, பணம் சம்பாதிக்க முயற்சிப்பர். விஷயம் அம்பலமானதும், புலம்புவதில் பலனில்லை. எத்தனை பேர் புகார் கொடுக்க முன் வருவர்? எனவே, இளம் பெண்கள், தங்களுடைய மொபைல் போனிலோ, டிஜிட்டல் கேமராவிலோ, மேற்கூறியது போன்ற நிர்வாண படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களையும், படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது.
முன் ஜாக்கிரதை முத்தம்மாவாக இருப்பது, புத்திசாலித்தனம்!
— கே.யமுனா, சிவகாசி.காப்பி பூனைகள்!
நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். 'டிவி'க்கு, பிரபல தனியார் நிறுவனத்தின், டி.டி.எச்., கனெக்ஷன் கொடுத்திருந்தார். இந்தி சானல் ஓடியது. சானல் மாறும் போது கூட, தமிழ் சானல்களுக்கு மாறாமல், மற்ற இந்தி சானல்களுக்கு மாறினார். 'தமிழ் சானல்களின் மீது உங்களுக்கு என்ன கோபம்?' என வினவினேன்.
அதற்கு அவர், நம்பர் ஒன் இந்தி சானலின் பெயரை கூறி, 'அந்த சானலில் வரும் நிகழ்ச்சிகளை தான், தமிழ் சானல்களில் எல்லாம் காப்பியடிச்சு ப்ரோக்ராம் பண்றாங்க. காப்பிகளை பார்ப்பதற்கு பதிலா, ஒரிஜினலை பாத்திட்டு போலாமே...
'தவிர, இந்தி வெறுப்பை, ஓட்டுப் பொறுக்கிகள், ரெண்டு தலைமுறைக்கு விதைச்சிட்டாங்க. பிள்ளைகளாவது இந்தி சானல்களோட நட்பாகி, இந்தி கத்துக் கட்டுமே... பிள்ளைகள் தமிழகப் பிள்ளைகளாய் தனித்துகிடக்காமல், இந்திய பிள்ளைகளாக சகலவிதத்திலும் உயர்ந்து நிக்கட்டுமே...' என்றார்.
அவர் சொன்னது சரிதான். நானும் 'காப்பி கேட்' சானல்களை கட் பண்ணிவிட்டு, இந்தி சானல்களுக்கு தாவி விட்டேன்!
— தங்க.திராவிட செல்வன், திருவாரூர்.இது போல செய்து காட்டுங்களேன்!
சென்ற வாரம், என் மகள் பணிபுரியும் தொழிற்சாலையில், ஒரு சுற்றறிக்கை தயார் செய்து, அதில், 'ஞாயிறு காலை நம் ஆலையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, எல்லாரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்...' என, கையெழுத்து பெற்றுக் கொண்டனர். என்ன நிகழ்ச்சி என்றே தெரியாமல், எங்களைப் போலவே நிறைய பேர் அங்கே கூடியிருந்தனர்.
ஆலையின் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில், நூற்றுக்கணக்கானோரை சுற்றி அமரச்செய்து, நடுவில் தீ மூட்டினர். பின், சில அதிகாரிகளின் ஆலோசனைப் படி, தீயை எப்படி அணைப்பது, தீ பரவுவதை எப்படி தடுப்பது, தீயிலிருந்து எப்படி தப்பிப்பது போன்றவற்றை, செயல்முறை விளக்கமாக நடத்திக் காட்டினர்.
அதோடு, ஆலைகளில், அ<லுவலகங்களில், வீடுகளில், மின் கசிவால் தீ பரவினால் எப்படி அணைப்பது, பிளாஸ்டிக் ரசாயனப்பொருட்கள் எரிந்தால் எவ்வாறு அணைப்பது போன்ற பல்வேறு செய்முறைகளில், விளக்கமாக சோதனை காட்சிகள் நடத்திக் காட்டப்பட்டது. அதற்கான முதலுதவி நடவடிக்கைகளும் அரங்கேறின.
முடிவில், எல்லாருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது. எதிர்பாராத இந்நிகழ்ச்சியை காணவந்த ஊழியர்களின் குடும்பத்தினர், வியந்து பாராட்டியதோடு, தற்காப்பு நடவடிக்கையை கற்றுக்கொண்ட திருப்தியில் சென்றனர். இதற்காக, ஆயிரக்கணக்கில் பணமும் செலவழித்து, பயனுள்ள நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது, பயனுள்ளதாக இருந்தது.
பல ஆலை, அலுவலகங்களில் தீ அணைக்கும் கருவியை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாமல் இருப்பதே, பெரும் பொருட்சேதத்திற்கும், உயிரிழப்பிற்கும் காரணம் என்பதும், எங்களுக்கு புரிந்தது. இதுபோல, மற்ற நிறுவனங்களும், குறைந்தபட்சம் தங்களது ஊழியர்களுக்காவது பயிற்சி அளிக்க முன் வருமா?
— கே.நாகலிங்கம், தஞ்சை. உ.பா., விபரீதம்!
நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும் இரவு நேர பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்து, கோவில்பட்டியை அடைந்தபோது, எனக்கு முன்சீட்டில் சிறு சலசலப்பு. ஜன்னல் ஓரம் சாய்ந்து தூங்கியபடி இருந்த தன் கணவனை, எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் ஒரு பெண்.
'கோவில்பட்டி வந்திருச்சு... எந்திரிங்க... எறங்கணுமுல்லா...' என, அவனைத் தட்டித்தடவி, உலுக்கி, குலுக்கி எழுப்ப முயன்றும், அவன் அசைந்தானே தவிர, விழித்தெழவில்லை.
கிட்டத்தட்ட மூன்று மணி நேர இரவுப் பயணம் என்பதால், அப்பெண் சொல்ல சொல்ல கேட்காமல், உ.பா., அருந்திவிட்டு, அவள் கணவன் பேருந்தில் ஏறியதாகவும், இறங்க வேண்டிய கோவில்பட்டி வந்தும், உ.பா., உபயத்தால், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவனை எழுப்ப முடிய வில்லை எனவும், அப்பெண்ணிடம் விசாரித்த போது தெரிந்தது.
சக பயணியரும், நடத்துனரும், அப் பெண்ணையும், அவள் கணவனையும் திட்ட, அவள் செய்வதறியாது அழ ஆரம்பித்தாள்.
நானும் என்னோடு வந்த நண்பர்களும், அந்த உ.பா., ஆசாமியை குண்டுக்கட்டாகத் தூக்கி, சாலை ஓரம் கிடத்தி விட்டு கிளம்பினோம். இரவுப் பயணம் என்றாலே, உ.பா., அருந்திவிட்டு பேருந்து அல்லது ரயிலில் ஏறும் பழக்கம், உ.பா., ஆர்வலர்களிடம் உள்ளது. ஆர்வக் கோளாறால் அதிகம் அருந்தி விட்டு, இப்படி நடந்து கொள்வது படுகேவலமானது. பயணத்தின் போது உ.பா., அருந்துவதை தவிர்க்கலாமே!
— எம்.பதூர் முகமது, நாகர்கோவில்.மருத்துவரிடம் செல்லும் போது...
குழந்தை நல மருத்துவரிடம், லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்தபோது நடந்த சம்பவம்...
ஒரு நாள், வயதான பெண் ஒருவர், பிறந்து இருபதே நாட்கள் ஆன குழந்தைக்கு, உடல் நிலை சரியில்லாமல் அழைத்து வந்திருந்தார். துணைக்கு யாரும் வரவில்லை. இருப்பினும், டாக்டர் வரும் நேரத்திற்கு, இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து, காத்திருந்தார்.
ஒரு மணி நேரம் கடந்ததும், குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தை காய்ச்சலில் அழுகிறது என முதலில் நினைத்தோம். தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், அந்த பெண்மணியிடம் விசாரித்தோம்.
'டாக்டர் வந்த உடனே, முதல் ஆளாக குழந்தையை காட்டி விட்டு வந்துடலாம் என நினைத்து, புட்டிபாலும் இல்லாமல், தாயும் இல்லாமல் வந்தேன். வந்த இடத்தில், இப்படி ஆகி விட்டது...' என்றார் வருத்தமாக.
நல்ல வேளையாக, நான், அப்போது ஏழு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவளாக இருந்தேன். உடனே அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, அதன் பசியாற்றி னேன். குழந்தை, பாலை குடித்துவிட்டு, தூங்கிவிட்டது. பின், மருத்துவர் வரவும், சிகிச்சை பெற்று சென்றார்.
தாய்மார்களே... நீங்கள் எங்கு சென்றாலும், தாயும், சேயும் சேர்ந்தே செல்லுங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், புட்டிபால் எடுத்துச் செல்லுங்கள்.
— எம்.எஸ்.தமீனா ஷஹீது, கீழக்கரை.
