தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 09, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எத்தனை காலம்தான் ஏமாற்றுவரோ!



மற்றவர்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் யோசித்து செயல்படுகின்றனர் என்பதற்கு, நானும், என் நண்பரும் ஏமாந்த கதை ஒரு உதாரணம். நான் ஒரு சீனியர் சிட்டிசன். சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு அரசு கெஸ்ட் ஹவுஸ் அருகில், என் நண்பருக்காக நின்று கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில், இரண்டு டிரைவர்கள் இருந்தனர். ஆட்டோவில், 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் அமர்ந்திருந்தார்.

ஆட்டோ ஓட்டி வந்தவர் என்னிடம் வந்து, 'சார் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா?' என்றான். 'தெரியும்' என்றேன்.

'அவர்கிட்ட கொஞ்சம் பேசுங்க சார். ஆயிரம் டாலர் மாற்ற வேண்டும் என்று சொன்னார். பர்மா பஜார் அழைத்து சென்றோம். அங்கே ஆயிரம் டாலரை வாங்கிக் கொண்டு ஓடி விட்டனர். இப்போது அவரது கையில் பணமில்லை. எங்களுக்கு ஆட்டோ சார்ஜே, 700 ரூபாய் ஆகிவிட்டது...' என்று கூறினர்.

நான் அந்த நபரிடம் ஆங்கிலத்தில் பேசினேன். 'இன்று மாலை, 4.00 மணி பிளைட்டில் சிங்கப்பூர் போக வேண்டும். பல்லாவரத்தில் மனைவியும், குழந்தையும் காத்திருக்கின்றனர். காலையிலிருந்து சாப்பிடவில்லை. இவர்களுக்கு ஆட்டோ சார்ஜ் கொடுக்கவும் பணம் இல்லை. தற்சமயம் என்னிடம் இருப்பது இந்த ரோலக்ஸ் வாட்சும், சோனி ஹான்டிகாம் கேமராவும்தான்...' என்று கூறி, இரண்டுக்கும், பில்லும், அதற்கு டூட்டி கட்டிய ரசீதும் காட்டினார். மொத்தம் 38,000 ரூபாய். 'இதை வைத்துக் கொண்டு, 15,000 கொடுங்கள். நான் ஊர் போய் சேர வேண்டும்...' என்றார்.

'என்னிடம் பணம் இல்லை. அதனால், எனக்கு வேண்டாம். ஏதாவது கடையில் கொடுங்கள், பணம் கிடைக்கும்...' என்றேன்.

இதற்குள் என் நண்பர் வந்து விட்டார். இந்த கதையை கேட்ட அவர், 'ஐயோ நம் ஊருக்கு வந்து கஷ்டப்படுகின்றனரே... அந்த, 4.00 மணி பிளைட் பிடிக்க வேண்டுமே என்ற கவலையில் உதவ முன் வந்தார். அருகிலிருந்த வங்கிக்கு அழைத்துச் சென்று, 15,000 ரூபாய் எடுத்து கொடுத்து, மேலும், அவர் கேட்காமலே, 1,000 ரூபாயும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

அதன்பின், அவரிடம் வாங்கிய ரோலக்ஸ் வாட்ச், சோனி கேமரா இரண்டையும், அவரது நண்பர் கடைக்கு எடுத்து சென்றோம், அதன் மதிப்பறிய. அவர் ரோலக்ஸ் வாட்ச், 1,500 ரூபாய் என்றும், கேமரா, 2,500 ரூபாய் என்றும் கூறினார். இரண்டுமே டூப்ளிகேட்; சைனா மேக் என்றார்.

அதிர்ச்சியில் பேசவே முடியவில்லை. மொத்தத்தில் நண்பருக்கு, 12,000 ரூபாய் நஷ்டம். 'இந்த வயதில் பாடம் கற்றுக் கொண்டதற்கு எனக்கு செலவு, 12,000 ரூபாய்...' என்றார் மனம் தளர்ந்தவராக.

இப்படிப்பட்டவர்கள், இது போன்ற டூப்ளிகேட் பொருட்களுடனும், டூப்ளிகேட் ரசீதுடனும் சுற்றிக் கொண்டுதான் இருப்பர். இளகிய மனம் படைத்தவர்கள் ஏமாந்து விடாமல் இருக்க, எங்கள் அனுபவம் உதவும் என்று நம்புகிறேன்.

— எஸ்.ராமச்சந்திரன், சென்னை.

முன்னெச்சரிக்கை முத்தண்ணா!



அலுவலக வேலையாக, சக அலுவலருடன் புதுச்சேரி சென்றிருந்தோம். ஓட்டலில் ரூம் பதிவு செய்தவுடன், 'லெட்ஜர்ல ரூம் நெம்பர் போடாதீங்க. நான் போய் ரூமை ஒரு தடவை, 'செக்' பண்ணி பார்த்துட்டு வந்துடறேன். பிறகு, ரூம் நெம்பரை என்ட்ரி போடுங்க...' என்று சொல்லி, ரூம்பாயுடன் ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று, சோதித்த பின், 'ஓ.கே., ரூம் நெம்பர் போடுங்க...' என்று சொல்லி, சாவியை வாங்கிக் கொண்டான்.

அவனது இந்த நடவடிக்கை, எனக்கு ஆச்சரியமாக இருக்கவே, அவனிடம் இது குறித்து கேட்டேன்... 'அது ஒண்ணுமில்லை மாப்ள... நாம தங்குறது ஒண்ணும் ஸ்டார் ஓட்டல் இல்ல. சாதாரண ஓட்டல் தான். ஒரு முறை, திருச்சியில ஒரு ஓட்டல்ல பாத்ரூம் குழாயை திறந்த போது, துருப்பிடித்த குழாய் உடைந்து, டிரஸ் பாழானது மட்டுமில்லாம, அந்த ஓட்டல்காரங்க, குழாயை, நான் தான் உடைச்சேன்னு சொல்லி, அதுக்கும், 'தண்டம்' வசூலிச்சிட்டாங்க. அதுலேர்ந்து, எந்த ஊருக்குப் போய், எந்த ஓட்டல்ல தங்கினாலும், ரூம்ல எல்லாம் ஒழுங்கா, உருப்படியா இருக்கான்னு, 'செக்' பண்ணிப் பாக்குறதை, வழக்கமா வச்சிருக்கேன்...' என்றான்.

ஓட்டல்களில் ரூம் போடுவதிலும், இவ்வளவு பிரச்னைகள் உள்ளதை நண்பனின் அனுபவம் உணர்த்தியது.

— ந.மகேந்திரவர்மன், மறைமலைநகர்.

நமீதா வேண்டாம் மச்சான்ஸ்!



உற்சாக பானத்தை ஆராதிப்பவன் நான். உ.பா., அருந்திவிட்டு தூங்கும் நாட்களில் எல்லாம், இடுப்பு கைலி நெகிழ்ந்து, நமீதா போல் அலங்கோலமாய் படுத்து கிடப்பேன் போல. இது, என் மனைவிக்கு பழக்கமான காட்சியாக இருந்தாலும், என் 15 வயது மகனின் முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது. பல விதமாய், 'கமென்ட்' அடிக்க ஆரம்பித்தான்.

நானும், கைலியை இறுக்கிக்கட்டி, அய்யம்பேட்டை பாய் போல் இடுப்பில் சுருட்டி விட்டு பார்த்தேன். கைலி மேல் பெல்ட் அணிந்தும் பார்த்தேன்; பலனில்லை. காலையில் கைலி அவிழ்ந்து கிடந்து, 'மச்சான்ஸ்...' என்றது.

கடைசியில் என் நண்பர் ஒருவர் ஐடியா கொடுத்தார். உ.பா., அருந்த பெர்முடா டவுசருடன் போய், அதனுடனேயே அருந்துவது. உ.பா.,விற்கு பின், தொளதொள பைஜாமா அணிந்து தூங்குவது. பெர்முடாவும், பைஜாமாவும் என் மானத்தை காப்பாற்றுகின்றன.

உ.பா., அன்பரே... லுங்கி தவிர்ப்பீர்; தொளதொள பெர்முடா டவுசர் அணிவீர்!

— ஆர்.ஒய்.எம்.பாலகிருஷ்ணன், சாத்தூர்.

உழைப்புத் திருடர்கள்!



உலகம் உருண்டை என்பது, நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன், தொழிலாளர்கள் சிகாகோ நகரில் போராடி, ரத்தம் சிந்தி, உயிர்களை இழந்து, 'எட்டு மணி நேர வேலை...' நேரத்தை வென்றெடுத்தனர். அதுவரை அவர்களை, 12 மணி நேரம் முதல், 16 மணி நேரம் வரை, கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தனர்.

தற்போது தமிழகத்தில், பல தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வெளிநாட்டு கம்பெனிகளில்,

12 மணி நேர வேலை அமலில் உள்ளது. அவர்களுக்கு ஆதரவாகப் பரிந்து பேச, அங்கு தொழிற்சங்கங்களும் கிடையாது.

நண்பரின் மகன், அதுபோன்றதொரு கம்பெனியில் பணியில் இருந்தான். லீவு போடாமல் வேலைக்கு வந்தால், 500 ரூபாய் இன்சென்டிவ். லீவு போட்டால், 500 ரூபாய் கட் என்று ஒப்பந்தம். ஊதியம், 4,000 ரூபாய்.

நண்பரின் மகன், ஒரு ஆண்டாக விடுமுறையே எடுக்காமல், பணிபுரிந்து இருக்கிறான். சம்பளத்தை மட்டும் பிரதி மாதம், 10ம்தேதி கொடுத்து வந்தவர்கள், இன்சென்டிவை இன்னும் சாங்ஷன் ஆகவில்லை என்று தட்டிக் கழித்து வந்தனர்.

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல், தொடர்ந்து எட்டு நாட்கள் லீவு எடுத்துவிட்டு, மீதி, 22 நாட்கள் வேலை செய்து இருக்கிறான். ஆனால், அதற்குரிய சம்பளத்தைத் தராமல், ஒப்பந்தப்படி, 4,000 சரியாகப் போச்சு என்கின்றனராம்!

இந்த உழைப்புத் திருடர்களை என்ன செய்வது?

— வி.லட்சுமணன், மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us