PUBLISHED ON : பிப் 03, 2013

ஓய்வுக்கு பின்னும் உழைப்பு!
எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி, அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், தினமும் மதிய உணவு தயார் செய்து, பார்சல் கட்டி, தன் ஸ்கூட்டியில் ஒவ்வொரு அலுவலகமாகப் போய், தேவையானவர்களுக்கு விற்க ஆரம்பித்துள்ளார். நியாயமான விலையில், தரமான உணவாகவும் இருப்பதால், இப்போது நிறைய அலுவலகங்களில், அவருக்கு வாடிக்கையாளர்கள் பெருகி விட்டனர்.
சமாளிக்க முடியாமல், உதவிக்கு ஆள் வைத்திருக்கிறார். இது போக, அலுவலர்கள் விரும்பினால், அவர்கள் வீட்டிற்கே போய் சாப்பாடு கொடுத்துவிட்டு, மாலையில் கேரியரை வாங்கி வருவார். இதனால், மாதந்தோறும் கணிசமான தொகை கிடைக்கிறது.
அவருக்கு வரும் பென்ஷன் பணமே போதுமானதாக இருக்க, இதற்கு என்ன அவசியம் என்று அவரிடமே கேட்டேன்.
'முப்பது ஆண்டுகளுக்கு மேல், அலுவலகம் சென்று வேலை பார்த்த பழக்கம் நின்று விட்டதால், உடலும், மனமும் சோர்ந்து போகும். அதற்கு இடம் கொடுக்காமல், ஏதாவது வேலை செய்யும் போது, உற்சாகம் கிடைக்கிறது. வெளியுலகத் தொடர்பும் கிடைக்கிறது. வாழ்க்கையில் சலிப்பு வராது ...' என்றார்.
ஒரு டிகிரி வாங்கிவிட்டு, அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினர் யோசித்தால், இந்த மாதிரி எவ்வளவோ வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. யோசிப்பார்களா?
— விஜயலட்சுமி, மதுரை.
'ஜிம்'முக்கு போகிறீர்களா?
என் நண்பர், தன் உடல் எடையை குறைக்க, சில நண்பர்கள் ஆலோசனையை கேட்டு, ஜிம்முக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள, 1,600 ரூபாய் பணம் செலுத்தி உள்ளார். காலை 5:00 மணிக்கே பயிற்சி மேற்கொள்ள சென்றார். அங்கு இருக்கும் பல பயிற்சி எந்திரங்களில், ஆர்வக்கோளாறு காரணமாக, எதற்காக பயிற்சி என தெரியாமலே, அதிக நேரம் பயிற்சி எடுத்துள்ளார்.
இப்படி பத்து தினங்கள் தான் சென்று இருப்பார். கை, கால், உடல் வலி ஏற்பட, ஜிம்மிற்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, படுத்த படுக்கையாகி, பின், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
விவரம் அறிந்து, மருத்துவமனைக்கு சென்று, நண்பரை பார்த்தேன். அப்போது தான் விஷயமே தெரிந்தது. பல பயற்சிகளை, ஒரே நாளில், மிக அதிக நேரம் செய்ததன் விளைவு மற்றும் அதே காலக் கட்டத்தில் உணவு கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்து, உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல், இடுப்பு பிடிப்பு, மூட்டுவலி, தசைவலி என, நண்பர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேற்படி விபரீதத்தை, விளைவை பற்றி, மருத்துவர் சொன்ன பிறகே, நண்பர் புரிந்து கொண்டார். இது, உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, ஒரு எச்சரிக்கை. ஜிம்மிற்கு பயிற்சி மேற்கொள்ள செல்லும் இளைஞர்கள், எதற்காக பயிற்சி எடுக்க போகிறோமோ, அந்த பயிற்சியை அளவோடு, உரிய முறையில் செய்ய வேண்டும். குறுகிய நாளிலேயே, பல பயிற்சிகளை மேற்கொண்டால், நண்பர் கதிதான். புரிகிறதா இளைஞர்களே!
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.
செல்போன் விஷமம்!
அரசு அலுவலகம் ஒன்றில், உதவியாளராக பணி புரியும் முப்பது வயது பெண் நான். அவசர தகவல் தொடர்பாக, நான் போன் பேச முயன்ற போது, என் மொபைலில், 'டவர்' கிடைக்க வில்லை. அருகிலிருந்த எங்கள் பிரிவு கண்காணிப்பாளரான, ஐம்பது வயது ஆசாமி, என்னிடம் நம்பர் கேட்டு, தன் போனில் பதிவு செய்து எனக்கு பேசக் கொடுத்தார்.
நான் போன் பேசும் போது, நாசூக்காக எழுந்து வெளியில் சென்று விட்டார். பேசி முடித்த நான், இணைப்பை துண்டிக்க முயன்ற போது தான், அது, 'டச் ஸ்கிரீன்' வகை போன் என்பது தெரிந்தது. அத்தகு மொபைலை பயன்படுத்தி பழக்கம் இல்லாத நான், ஸ்கிரீனை, இரண்டு மூன்று முறை தொட்டு, இணைப்பை துண்டிக்க முயன்றேன்.
அப்போது திடீரென, மொபைல் திரையில், நிர்வாணக் காட்சிகளுடன், படு ஆபாசமான ஒரு வீடியோ காட்சி ஓட, அதைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன். நான் மொபைல் திரையை, 'டச்' செய்து லைனை, 'கட்' செய்ய முயன்ற போது, அது வீடியோ ஆப்ஷனுக்கு போய், அவர் பதிவு செய்து வைத்திருந்த ஆபாசப்படம் இயங்க ஆரம்பித்து விட்டதென புரிந்து கொண்டேன்.
என்ன செய்வது என திகைத்த நான், போனை அப்படியே மேஜை டிராயரில் போட்டு பூட்டி விட்டேன்.
ஆத்திர அவசரத்துக்கு பேசவும், தகவல் தொடர்பு கொள்ளவும் பயன்படுத்தப்படும் மொபைல் போனில், இப்படியா ஆபாச வீடியோவை பதிவு செய்து வைத்துக் கொள்வது? கருமம்டா சாமி!
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
