
தேவைதானா இது உங்களுக்கு?
சில பிரபல நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு, தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதற்காக, ஒரு நோட் புக்கை கொடுத்து, முகவரி மற்றும் மொபைல் எண்ணை எழுதித் தரும்படி கேட்கின்றனர்.
அழகான இளம் பெண்கள் சிலர், அதை, தங்களுக்கு கிடைத்த பெருமையாக நினைத்து, எல்லா விவரங்களையும் தெளிவாக எழுதிக் கொடுத்து விடுகின்றனர். அப்படி, தன்னுடைய மொபைல் எண் கொடுத்த, எனக்கு தெரிந்த ஒரு இளம் பெண்ணுக்கு, அந்தக் கடையில் வேலை செய்யும் ஒரு ஊழியன், பர்சேஸ் செய்யும் போது, சிரித்துப் பேசிய, அந்த இளம் பெண்ணை தவறாகப் புரிந்து கொண்டு மொபைலில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருக்கிறான். அதோடு, வேண்டாத எஸ்.எம்.எஸ்.,களையும் அனுப்பியிருக்கிறான். இந்த பிரச்னையை பெரும் சிரமப்பட்டு தீர்த்து வைத்துள்ளனர். தேவை தானா... இது உங்களுக்கு?
பெண்களே... நீங்கள், உங்க மொபைல் எண்களை, பொது இடங்களில், எக்காரணத்தை கொண்டும் தராதீங்க! கண்ட இடத்தில் மொபைல் நம்பரை கொடுத்து, எனக்கு அப்படி டார்ச்சர் வந்தது, இப்படி எஸ்.எம்.எஸ்., வந்தது என்று அழுது புலம்புவதில் பிரயோசனம் இல்லை.
— துடுப்பதி ரகுநாதன், கோவை.
ஏன்... அவமானமா?
நான் மருந்துக்கடையில், மருந்து வாங்கிக் கொண்டு இருந்தபோது, ரோட்டில் திடீரென ஒரு சத்தம். ஓடிக் கொண்டிருந்த பைக்கில் இருந்து, எதுவோ கீழே விழுந்து உடைந்த சத்தம். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த பையன், ( 16 - 18 வயசு தான் இருக்கும்) வண்டியை மெதுவாக ஓட்டி, லேசாக திரும்பிப் பார்த்தான். அடுத்த நொடி, முழு வேகத்தில் வண்டியை முடுக்கிவிட்டு, ஓரிரு வினாடிகளில் காணாமல் போனான்.
அது என்னவென்று அருகில் போய் பார்த்த போது... அது, டாஸ்மாக் சரக்கு. பாட்டில் உடைந்து கண்ணாடி சில்கள் ரோட்டில் பரவிக் கிடந்தன. அது, யாருடைய காலிலோ, சைக்கிள், பைக் டயரிலோ ஏறி, பாதிப்பை உண்டாக்குமே என்ற வருத்தம் சிறிதும் இல்லாமல், பறந்து விட்டான் அச்சிறுவன். அருகிலுள்ள வீட்டில் இருந்து, ஒரு பாட்டி துடைப்பம் எடுத்து வந்து, கூட்டி ஓரத்தில் போட்டார்.
போதை பாட்டிலை கடையில் வாங்கும்போது வராத அவமானமும், குற்ற உணர்வும், அது உடைந்த பின், அதை சுத்தம் செய்யும் போது மட்டும், ஏற்பட்டு விடுமா? யாருக்கோ என்னவோ, ஆனால் நமக்கு என்ன என்ற மனப்பாங்கு, இந்த குடிகாரர்களிடம் ஏன் இப்படி பரவிக் கிடக்கிறதோ தெரியவில்லை. பொதுமக்களுக்கு, இன்னல் தராமல் நடப்பது எப்படி என்ற, சாதாரண விஷயம் கூட, ஏன் புரிய மாட்டேங்கிறது!
— ஆ.சிவமணி, புன்செய்புளியம்பட்டி.
மனைவியின், அவஸ்தையைப் புரிந்து கொள்ளுங்கள்!
அண்மையில், என் தோழியை திருமண நிகழ்ச்சியொன்றில் சந்தித்தேன். முகம் வாடி, கண்கள் கலங்கியவாறு காட்சியளித்தவளைக் கண்டு திடுக்கிட்டு, அவளைத் தனியே அழைத்து விவரம் கேட்டேன். சிறிது நேரம் பேசவே முடியாமல், குலுங்கி, குலுங்கி அழுது, பின் பேச ஆரம்பித்தாள்.
'எனக்கு... இது மாதவிலக்கு நேரம், இந்த நாட்களில் எனக்கு கடுமையான வயிற்று வலியும், அதிகமான உதிரப் போக்கும் ஏற்படுவது வழக்கம். இந்த மூன்று நாட்களும் என்னால், எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாது. அதுவும் பேருந்து பயணம் என்றால் கடும் அவஸ்தைதான். ஆனால், என் கணவர் இதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.
அதுமட்டுமல்லாமல், இந்த மாதிரியான நேரங்களில், உறவினர் வீட்டுத் திருமணத்திற்கோ அல்லது வெளியூர் செல்ல வேண்டியிருந்தாலோ என்னையும் உடன் வருமாறு கட்டாயப் படுத்துகிறார். இன்று, இங்கு நடைபெறும் திருமணம் கூட, எங்களுக்கு தூரத்து உறவுதான். இதற்கு, அவர் மட்டும் வந்தால்கூட போதும்.
ஆனால், தனிமைப் பயணம் போரடிக்கும் என்று கருதி என்னையும், இந்த அவஸ்தையோடு, 200 கி.மீ., தூரம் பஸ் பயணம் செய்ய வைத்திருக்கிறார். திரும்பி போக வேண்டும் என்று நினைத்தாலே பயமாயிருக்கிறது. அடிக்கடி வயிற்று வலி மாத்திரைகளையும், மாதவிலக்கை தள்ளிப் போட செய்யும் மாத்திரைகளையும் சாப்பிடுவது ஆபத்து என்று, டாக்டர் சொல்கிறார். நான் என்ன செய்ய...' என்று கூறி, கண்ணீர் விட்டாள்.
அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
கணவன்மார்களே... உங்களது மனைவியின் அவஸ்தையை புரிந்து, நடந்து கொள்ளுங்கள்... உங்களுக்கு லேசாக காய்ச்சல் கண்டாலே மனைவி துடித்துப் போகிறாள், அவளின் அவஸ்தையை நீங்கள் புரிந்து கொண்டால் நல்லது.
— பேச்சியப்பன், சங்கரபாண்டியபுரம்.

