PUBLISHED ON : ஆக 25, 2013

வீண் சந்தேகம் வேண்டாமே!
நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, 'ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...
'எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.
'இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.
'எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.
'என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!
— எஸ்.மாலினி, கோவை.
முரடாக நடந்து கொள்ளாதீர்!
என் நண்பர் வீட்டில், நடந்த சம்பவம் இது. நண்பரின் மகன், தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருக்கிறான். அதனால், அவனை இரவில் கண் விழித்துப் படிக்க சொல்லியிருக்கிறார் நண்பர். ஆனால், மகனுக்கோ கண் விழிக்க முடியாமல், தூக்கம் வந்து விடுகிறது.
அதனால், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, படிக்க சொல்லியிருக்கிறார். பையனுக்கு அதுவும் முடியவில்லை. கோபமுற்ற நண்பர், பக்கெட் தண்ணீரை தூங்கி கொண்டிருந்த மகனின் தலையில் ஊற்றி விட்டார். திடீரென்று, தூக்கத்தில் தண்ணீர் விழுந்ததால், மூச்சு விட முடியாமல் திணறிப் போன பிள்ளைக்கு, பயத்தில் இப்போது, சித்த பிரமையே ஏற்பட்டு விட்டது.
மனநல மருத்துவரிடம், தன் மகனை அழைத்துச் சென்று வருகிறார் என் நண்பர். படிப்பு படிப்பு என்று சொல்லி, குழந்தைகளை ஒரு அளவுக்கு மேல், 'டார்ச்சர்' செய்யாதீர்!
— கே.ராமமூர்த்தி, காஞ்சிபுரம்.
மெகா தொடர்களில், கற்பனை பஞ்சம்!
வெள்ளித் திரைப்பட படைப்பாளிகள் தான், கற்பனை பஞ்சம் காரணமாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, இங்கிலீஷ், பிரெஞ்சு வெவ்வேறு மொழி என்று கதைகளை காப்பி அடித்து, படம் எடுப்பது வாடிக்கை. அந்த நிலைமை, இப்போது சின்னத் திரையிலும் ஊடுருவி உள்ளது.
ஒரு தொடரில், ஒரு கேரக்டர் கலெக்டர் என்றால், அடுத்து ஓரிரு சீரியல்களிலும் கலெக்டர் வருவார். ஒரு சீரியலில், ஒரு கேரக்டருக்கு பக்கவாதம் தாக்கி, வாய் கோணினால், அடுத்த ஒரு வாரத்திற்குள், வேறொரு தொடரின் கதாபாத்திரத்திற்கு பக்கவாதம் வந்து, வாய் கோணும். ஒரு கதையில், ஒரு தம்பதிக்கு அறுபதாம் கல்யாணம் நடக்கிறதா... அடுத்த ஓரிரு வாரங்களில், ஏனைய எல்லாத் தொடர்களிலும், அறுபதாம் கல்யாண நிகழ்ச்சி இடம் பெறும். ஒரு சீரியலில், ஒரு கதாபாத்திரத்திற்கு, 'அபார்ஷன்' ஆனால், அது, மற்ற எல்லா சீரியல்களிலும் தொற்றிக் கொள்ளும். அதே போல மனநோய், குழந்தை திருட்டு, கடத்தல், டாக்டர்கள் மற்றும் நர்சுகளின், 'நேர்மை தவறல்' என்று எல்லா சீரியல்களிலும் தவறாமல் இடம் பெறுகின்றன.
மேலே சொன்னவைகள், ஒன்று அல்லது இரண்டு மாத இடைவெளிகளில் காட்டப்பட்டால், இவ்வளவு கூர்மையாக கவனிக்க நேர்ந்திருக்காது. அடுத்தடுத்து வரும் போதுதான், 'கற்பனை பஞ்சம்' பட்டவர்த்தனமாகத் தெரிய வருகிறது. சின்னத்திரை படைப்பாளிகள், தங்களைத் திருத்திக் கொள்ள முன்வருவரா?
— அ. அஞ்சுகச் செல்வி, சென்னை.
