PUBLISHED ON : செப் 15, 2013

பொது இடத்தில் வேண்டாமே!
நானும், என் கணவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம். எங்களுக்கு முன், நவநாகரிகமான காதல் ஜோடி ஒன்று, பைக்கில் சென்று கொண்டிருந்தது. பில்லியனில் அமர்ந்திருந்த இளம் பெண், காதலனின் தாடையை பிடித்துக் கிள்ளுவதும், கழுத்தில் முத்தமிட்டு, இரு கைகளால் காதலனின் இடுப்பை இறுக்கமாக அணைத்தும், 'கிச்சு கிச்சு' மூட்டியபடி சென்றாள்.
காதலனோ, சுற்றுப்புறத்தை எல்லாம் மறந்து, காதலியின், 'கிளுகிளுப்பு'களை அனுபவித்தவாறு, பைக் ஓட்டிச் சென்றான்.
'இவர்கள் இப்படி விளையாட்டாக செய்வது, விபரீதத்தில் முடியப் போகிறதே...' என்று, என் கணவர் சொல்லிக் கொண்டிருந்த போதே, அந்த விபரிதம் நடந்து விட்டது.
எங்களுக்கு பின்னால் இருந்து, பைக்கில் வந்த வில்லன் ஒருவன், இளம் ஜோடியின் பைக் அருகில் சென்று, இளம் பெண்ணின் மார்பை அழுத்தி விட்டு, வேகமாக சென்று விட்டான். இதைப்பார்த்த நாங்கள், அதிர்ந்து விட்டோம். அதிர்ச்சியில், உறைந்து போயிருந்தாள் அந்த இளம் பெண். பைக்கை, ஓரமாக நிறுத்தி விட்டான் இளைஞன். அதன் பின், என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
இளம் ஜோடிகளே... உங்கள், பருவ விளையாட்டுகளை, நான்கு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பொது இடத்தில் அரங்கேற்றினால், இப்படிப்பட்ட விபரீதங் கள் நடக்க வாய்ப்புள்ளது. உஷாராக இருந்து கொள்ளுங்கள்.
— கமலா மூர்த்தி, சென்னை.
தவறான, 'அட்வைஸ்' தராதீர்!
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர், அவரின் பக்கத்து வீட்டு பெண்மணியின் பேச்சை, வேதவாக்கு போல் கேட்பார். தன் கணவர் ஏதாவது சொன்னால் கூட, அதை அவ்வளவாக ஏற்பது கிடையாது. சமீபத்தில், அப்பெண்மணியின் வீட்டில் பிரச்னை ஏற்பட, வழக்கம் போல் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பிரச்னையை கூற, 'எத்தனை நாட்கள் தான், கணவர் உன்னிடம் பேசாமல் இருப்பார்... ஒருநாள், கண் முன்னாடியே கிணற்றுக்குள் குதி. அப்பவாவது, உன் மேல் அவருக்கிருப்பது பாசமா அல்லது வேஷமா என்பது புரியும்!' எனக் கூற, அப்பெண்மணியும் அப்படியே செய்து விட்டார்.
கிணற்றில் குதித்த வேகத்தில், தலையில் நன்றாக அடிபட்டு விட்டது. நல்ல வேளை... அப்பெண்மணி யின் கணவர் உயிரை காப்பாற்றி விட்டார். அடுத்தவர்களுக்கு, 'அட்வைஸ்' கூறும், அட்வைஸ் அம்புஜங்களே... மற்றவர் குடும்பத்தில், பிரச்னை வராத மாதிரி, அறிவுரை கூற முடிந்தால் கூறுங்கள்; அதை விடுத்து, இப்படி அபத்தமான (ஆபத்தான) அறிவுரை கூறி, வேதனைக்குள்ளாக்காதீர்!
— எல். சந்திரகலா, போரூர்.
ஆரதவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்யப் போகிறீர்களா?
சமீபத்தில், என் பேரனின் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது, அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு, உணவு தயார் செய்து கொடுத்தோம். அந்த இல்லத்தில் இருந்த பொறுப்பாளரிடம் பேசிக் கொண்டு இருந்த போது, 'இதுபோல் உதவுபவர்கள் எல்லோருமே சாப்பிடும் உணவுப் பொருட்களாகத்தான் கொடுக்கின்றனர்.
'சில சமயம், ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி, இரண்டு, மூன்று குடும்பத்தினர் உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்து விடுவர். அப்போதெல்லாம் உணவு மிஞ்சிவிடும். இதைத் தவிர்க்க, தானமளிக்க விரும்புவோர், முன் கூட்டியே, எங்களிடம் வந்து கேட்டால், எங்கள் இல்லக் குழந்தைகளுக்கு, தேவைப்படும் மருந்துப் பொருட்களை வாங்கித் தரச் சொல்ல முடியும்...' என்றார்.
அவர் கூறியது பயனுள்ளதாக இருந்ததால், அதை நினைவில் வைத்து, அடுத்து வந்த எங்கள் திருமண நாளின் போது, அந்த இல்லம் சென்று, மருந்துப் பொருட்களின், 'லிஸ்ட்' வாங்கி வந்து, எங்களின், 'பட்ஜெட்' பணத்தில் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு மருந்துப் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம்.
இதுபோல் மற்றவர்களும் செய்யலாம் தானே!
— கே. எம். பாருக். சென்னை.
