பசுமை நிறைந்த நினைவுகளே.... (3) - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்!
பசுமை நிறைந்த நினைவுகளே.... (3) - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்!
PUBLISHED ON : செப் 15, 2013

குற்றாலத்தில், ஆடி மாத சீசன் பிரமாதமாக இருக்கும். சொல்லி வைத்தாற் போல அருவிகளில், தண்ணீர், ஒரே சீராக கொட்டும். வெயில் அடிக்கும்... ஆனால், கொஞ்சம் கூட உரைக்காது. வெயில் அடிக்கிறதே என, நினைத்து முடிக்கும் முன், மேகங்கள் கூடி, பன்னீர் தெளித்தது போல, சாரல் அடிக்கும். சாரலில் நனைந்து விட்டோமே என்று எண்ணுவதற்குள், தென்றல் வீசி, நனைந்த நம் கேசத்திற்குள் புகுந்து, காய வைத்து விடும்.
இப்படி, சாரலும், தூறலுமாக ரம்மியமாக காணப்படும் குற்றாலத்திற்கு, தமிழகத்திலுள்ள அத்தனை பெரிய வியாபாரி களும், குடும்பத்தோடு வந்து விடுவர். காரணம், ஆடி மாதம் என்பது,அப்போது, ஆகாத மாதமாக இருந்தது. ஆனால், இப்போது நிலமையே வேறு. ஆடி மாத தள்ளுபடியின் போது நடக்கும் வியாபாரம் தீபாவளி,பொங்கல், புத்தாண்டுகளில் கூட நடப்பது இல்லை. ஆகவே, 'ஆள் வராத கடையில், எதற்கு வெட்டியாய் டீ ஆத்த வேண்டும்... அதற்கு
பதிலாக, குடும்பத்தோடு, குற்றாலத்தில் சந்தோஷமாக இருந்துவிட்டு வருவோமே...' என்று, வந்து விடுவர்.
வருபவர்கள் குறைந்தது பத்து நாள், இருபது நாள் தங்கி விடுவர். ஓட்டல்களைவிட, வீடுகளும், குடில்களுமே அப்போது பிரபலம். நிறைய சினிமா படங்களில் இடம் பிடித்துள்ள, மெயினருவி பக்கம் உள்ள, 'தளவாய் ஓட்டல்' வி.ஐ.பி.,க்கள் தங்கும் ஓட்டலாக இருந்தது. அதை விட்டால், சாதாரண மக்களுக்கு இருந்த ஒரே விடுதி, குற்றாலம் நகரியத்தால் கட்டப்பட்டிருந்த, குற்றாலம் நகரிய விடுதிதான்.
இது, அரசுக்கு சொந்தமான விடுதி என்பதுடன், பத்து மாதம் சீசன் இல்லாததால், பராமரிக்கப்படாமல் இருக்கும் இவ்விடுதி, எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!
இப்படிப்பட்ட மகத்துவமிக்க நகரிய விடுதியில் தான், வேறு வழியில்லாமல், அப்போது தங்கினோம். அருவிகளில் தண்ணீர் கொட்டினாலும், விடுதி குழாய்களில் தண்ணீர் வராது. கேட்டால், 'அதுதான் அருவியில வருதுல்ல...' என்பர். 'ஐயா சாமி... பல் விளக்கணும்; மத்த காரியம் எல்லாம் இருக்குல்ல...' என்றால், 'ஓ...அது வேற இருக்கா...அப்ப மத்த காரியங்கள் நடக்கும் போது சொல்லுங்க... மோட்டார் போட்டு விடுறோம்...' என்பர்.
இப்போது போல் அப்போது, மொபைல் போன் வசதி கிடையாது. விடுதியில், 'இன்டர்காம்' வசதியை, நினைத்தே பார்க்க முடியாது. இந்நிலையில், டூரின் இரண்டாவது நாள், அதிகாலையில், நான் தங்கியிருந்த அறைக் கதவு, தடதடவென வேகமாக தட்டப்பட்டது. வெளியில் வந்து பார்த்தால், வாசகர்கள், பற்பசை படிந்த வாயுடன், 'தண்ணீர் வரலை' என்றனர். ஓடிப்போய் விடுதி காப்பாளரிடம் சொன்னதும், மோட்டார் ரூம் சாவியை கொடுத்து, 'நீயே போட்டுக்க...' என்றார்.
மோட்டாரைப் போட்டதும், 'ரொம்ப வயசாயிடுச்சு... முடியல' என்பது போல, திணறி திணறி ஓடியது. ஆனாலும், இதை எல்லாம் சிரமமாக எடுத்துக்கொள்ளாமல், அந்த நேரத்தில் நிகழ்ந்த காமெடி கலாட்டாக்களையும், குறும்புகளையும் ரசித்து அனுபவிக்கவே செய்தோம்.
இதே போல, மறக்க முடியாத மற்றொரு சம்பவமும் அன்று நடந்தது. காலையில் வெளியில் கிளம்பும் போதே, விடுதியை நிர்வகித்தவர்கள், 'இங்கே குரங்கு தொல்லை அதிகம்... அறையின் கதவுகளை நன்றாக பூட்டிவிட்டு செல்லுங்கள்' என்று கூறினர். வாசகர்களும் கதவை, நன்றாக இழுத்து, காற்று கூட புக முடியாதபடி பூட்டிவிட்டு, இலஞ்சி குமரன் தரிசனம், பாம்பு பண்ணை போன்ற இடங்களை பார்த்துவிட்டு, திரும்பி வந்து, அறையை திறந்தால் ஒரே அதிர்ச்சி...
அறைக்குள் ஒரே குரங்கு பட்டாளம்... கட்டிலில் படுத்தபடியும், வாசகர்கள் வாங்கி வைத்திருந்த ரம்டன், மங்குஸ்தான் பழங்களை ரசித்தபடியும், ஆவக்காய் ஊறுகாயை ருசித்தபடியும், துணிமணிகள் தமக்கு ஒத்துவருமா என்று ஆராய்ந்தபடியும் இருந்தன.
'பூட்டிய அறைக்குள் இவைகள் எப்படி வந்தன' என்று பார்த்தால், அத்தனை ஜன்னல்களும், திறந்து கிடக்கின்றன. பூட்டிய ஜன்னலை, அசைத்து அசைத்து திறக்கும் கலையை, அவைகள், நன்கு கற்று வைத்திருக் கின்றன.
பிறகு, அவைகளை வெளியேற்றபட்ட பாட்டையும், ஜன்னல் வழியாக குரங்குகள் உள்ளே நுழையாமல் இருப்பதற்காக வாசகர்கள் கையாண்ட பல்வேறு வித உபாயங்களையும், அது குறித்த கமென்ட்டுகளையும், ஒவ்வொருவரும் சொல்லி சொல்லி, ரசித்து சிரித்தனர்.
அந்த வருடத்தோடு, குற்றால நகரிய விடுதிக்கு, ஒரு கும்பிடு போட்டோம்!
குற்றாலத்திற்கு வந்தால், 'வாரமலர் வாசகராய் வர வேண்டும்' என்ற எண்ணத்தை தோற்றுவித்த சம்பவம் ஒன்றும், அந்த வருடம் அரங்கேறியது. எல்லாருக்குமே ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, செண்பகா அருவி தான் தெரியும். ஆனால், பழத்தோட்ட அருவியைப் பற்றி நிறைய பேருக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அது, ஏதோ அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் குளிக்கும் அருவி என்றே தெரிந்து வைத்திருந்தனர்.
ஐந்தருவிக்கு போகும் வழியில் உள்ள அந்த அருவியை, ஏக்கத்தோடு பார்த்து செல்வர். கொடி கட்டிய கார்கள் மட்டும், சர் சர்ரென்று, அந்த அருவி நோக்கி போவதை பார்த்தார் அந்துமணி. 'இங்கே, நம் வாசகர்கள் போவதற்கு என்ன செய்ய வேண்டும்...' என்று கேட்டார். 'திருநெல்வேலி போக வேண்டும்... கடிதம் டைப் செய்ய வேண்டும்... கலெக்டர் அனுமதி பெற வேண்டும்... எத்தனை பேர் என்று எழுதி தர வேண்டும்... அந்த கடிதத்துடன், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும்...' என்று, சொல்லிக்கொண்டே சென்றனர்.
அது அத்தனையையும் ஒரே நாளில் செய்து, டூரின் நிறைவு நாளான மூன்றாவது நாளன்று, பழத்தோட்ட அருவியில், வாசகர்கள் மட்டும் குளிக்க ஏற்பாடு செய்தார் அந்துமணி. டூரில் கலந்து கொண்ட வாசகர்களிடம், ' உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவத்தை சொல்லுங்கள்...' எனக் கேட்டால், இன்றைக்கும், பழத்தோட்ட அருவியில் குளித்ததைத்தான் சொல்வர். அதன்பிறகு, சில வருடங்கள், பழத்தோட்ட அருவி என்பது, டூரின் ஹைலைட்டான விஷயமாக இருந்தது. பின், வனத்துறைக்கும், மாவட்ட ஆட்சித்துறைக்கும் ஏற்பட்ட பனிப்போரில், இந்த அருவிக்கு செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டு, இப்போது நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக, தற்போது, அங்கு பழத்தோட்ட பூங்கா ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
'இந்த குற்றால டூரை இன்னும் சுவாரசியமாக்க என்ன செய்யலாம்...' என்று யோசித்த அந்துமணி, அடுத்து நடந்த டூரின் போது, சில அசத்தல் ஐடியாக்களை புகுத்தினார்.
'அது என்ன?' என்பதை, அடுத்த வாரம் பார்க்கலாம்.
— அருவி கொட்டும்.
எல். முருகராஜ்
