தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 15, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நண்பர் ஒருவர், வங்கி அதிகாரி. கவிஞர் கண்ணதாசனின் அதி தீவிர ரசிகர். கண்ணதாசனைப் பற்றி எந்தத் தகவல் கேட்டாலும், புட்டுப் புட்டு வைப்பார். அவரது கல்லூரி விழாவில், ஒரு முறை கண்ணதாசன் பேசினாராம்... அன்று அப்படியே நினைவு கூர்ந்தார்...

நல்ல கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு நிறைய உண்டு. இருந்தும் என்ன செய்ய... 'செக்சை அப்படியே பிழிந்து கொடு...' என்று தான் எல்லா தயாரிப்பாளர்களும் பேச்சை ஆரம்பிக்கின்றனர்.

ஒரு முறை மேல் கச்சையும், ஜட்டியும் மட்டுமே அணிந்த ஒரு பெண்ணை, என் முன் நிறுத்தி, 'ம்... எழுது பாட்டை...' என்று கூறினர். எனக்கோ எரிச்சல்... அந்தப் பெண்ணை பார்க்க சகிக்கவில்லை. இந்த லட்சணத்தில் எங்கிருந்து பாட்டெழுத...

'ஆண்டவன் படைத்த உடம்பு தானே... ஆடை என்ன அவசியமா...' என்று, எழுதி விட்டேன்.

'இப்படி எழுதிட்டீர்களே சென்சார் அனுமதிக்குமா' என்று, தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார். 'உங்கள் படத்தை அனுமதிக்கிற சென்சார், என் பாட்டையும் நிச்சயம் அனுமதிக்கும்...' என்று சொல்லி அனுப்பினேன்...

— இப்படி பேசினாராம் கவிஞர்.

இப்போ வரும் பாட்டுகளைக் கேட்டால், என்ன சொல்லியிருப்பாரோ கவிஞர்!

***

அன்று ஒரு தொலைபேசி அழைப்பு... பேசியவர், கல்லூரி மாணவி. விடுமுறையில் தன் சகோதரி வீட்டிற்கு, சென்னை வந்திருப்பதாக கூறியவர், அவசியம் என்னைப் பார்க்க வேண்டுமென கூறினார்.

'கல்லூரி மாணவி ஆயிற்றே... உஷாராக இருக்க வேண்டும்... ஏடாகூடமான கேள்விகள் கேட்டு, மிரள வைத்து விடுவார்...' என, மனதில் எச்சரிக்கை மணி அடித்தது. நாசூக்காக மறுதலிக்க முயன்றும் தோற்றேன்.

நேரில் வந்தார். செமி - அர்பனேட்டுகளுக்கே உரிய ஆடை அலங்கார தோற்றம். கனகாம்பரமும், மல்லியும் சேர்த்துச் சூடி இருந்தார். (இந்த சென்னை பட்டணத்தில் கனகாம்பரத்தை எங்கே தேடிப் பிடித்தாரோ) நெற்றியில் மூன்று கலர் பொட்டுகள் பிளஸ் விபூதி.

வெட்கமாக சிறிது நேரம் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். கிராமத்துக்காரர்களுக்கு பவுடர் மோகம் அதிகம். இவரும் அரை டப்பாவைக் கொட்டி கவிழ்த்திருப்பார் போலும். சென்னை வெயிலுக்கு, பவுடர், திரித் திரியாகி, அவர் கழுத்தில் கோலம் வரைந்திருந்தது.

சகஜ நிலைக்கு வந்து, ஊர் கதைகள் பேசியவர், கேள்வி கேட்கும், புதிர் போடும் தைரியத்தை அடைந்திருந்தார்.

'சார்... ரெண்டு கேள்வி கேட்பேன்... விழிச்சுக்கிட்டு பதில் சொல்லணும்...' எனப் புதிர் போட்டார்.

'யம்மோ... நான் இப்ப தூங்கிட்டா இருக்கேன்?' எனக் கேட்டு, 'ஜோக்' சொன்னது போல, நானே சிரித்துக் கொண்டேன்.

கேள்விகளைத் தூக்கிப் போட்டார்...

'முதல் கேள்வி சார்... 1948ல நம்ம பிரதமரின் பெயர் என்ன? ரெண்டாவது கேள்வி... ஒரு காட்டுக்குள் ஒரு நாயால் எவ்வளவு தூரம் ஓட முடியும்? சொல்லுங்க சார் பதிலை...' என்றார்.

முதல் கேள்விக்கான பதிலை பச்சை பாப்பா கூட சொல்லுமே... ரெண்டாவது கேள்வி தான் சிந்திக்க வைத்தது!

'என்ன சார் யோசிக்கறீங்க... சிம்பிள் பதில் சார்...'

'முதல் கேள்விக்கு நேரு என்பது பதில்... ரெண்டாவது...' என இழுத்தேன்.

'முதல் கேள்விக்கான பதிலே தவறு... ரெண்டாவது எங்கே சொல்லப் போறீங்க...' என்றபடியே இரண்டு கேள்விக்கான பதிலையும் அவரே சொன்னார்.

1. 1948ல் நமது பிரதமரின் பெயர் என்ன?

பிறந்தது முதலே மன்மோகன் சிங் தான்; 1948ல் ஒரு பெயர், 2013ல் ஒரு பெயரா இருக்க முடியும்?

2. ஒரு காட்டுக்குள் ஒரு நாய் எவ்வளவு தூரம் ஓட முடியும்?

பாதி தூரம் தான்... அதற்கு பிறகு, 'காட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது...' என்று சொல்ல முடியுமே தவிர, காட்டுக்குள் என்று எப்படி சொல்ல முடியும்?

— கல்லூரி பெண்கள் என்றாலே, 'கடி' தானோ?

'சரி, சார்... உங்களுக்கு எக்கச்சக்க நண்பர்கள் இருப்பர்... உங்கள் நட்பு, அவங்களுக்கு எந்த அளவுக்கு உபயோகமாயிருக்குங்கறதை நீங்க தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா?' எனக் கேட்டார்.

ஆசை இருக்கிறதோ, இல்லையோ... மாட்டிக் கொண்டாகி விட்டதே... மையமாகத் தலையாட்டி வைத்தேன்.

உடனே, தன் கைப்பையிலிருந்து ஒரு நோட்புக்கை எடுத்தார்... கேள்விகளை வீச ஆரம்பித்தார்.

* நீங்க நகைச்சுவையான ஒரு சம்பவத்தை, உங்க நண்பர்கிட்டே சொல்லும் போது, அவர் அதை எப்படி ரசிக்கிறார்?

(அ) தன்னை மறந்து, வாய்விட்டுச் சிரிப்பார். (ஆ) உங்களுக்கு மட்டும் கேட்கும்படி சிரிப்பார். (இ) மெல்லிய புன்முறுவல் பூப்பார். (ஈ) சங்கடத்துடன் நெளிவார்...

'இதில்' எது ஒர்க் - அவுட் ஆகுதுன்னு பாத்து குறிச்சிக்கங்க...' என்று கூறி, அடுத்த கேள்வியை சிதற விட்டார்...

* உங்கள் நண்பரின் வேலை போய் விட்டது...

(அ) அந்தக் கவலையை அவர் மறக்கும் வண்ணம் சமாதானம் சொல்லி அவரை மகிழ்ச்சியாக்குவீங்களா? (ஆ) அவருக்கு வேறு வேலைக்கு முயல்வீர்களா? (இ) 'முயற்சி செய்!' என சமாதானம் செய்வீங்களா? (ஈ) 'வேலையை தொலச்சிட்டியே...' எனக் கண்டிப்பீங்களா?

* விடுமுறை நாளில்...

(அ) உடலுக்கு வலுவூட்டும் விளையாட்டுக்களில் ஈடுபடுவீர்களா? (ஆ) சீட்டு, கேரமா? (இ) 'டிவி'யா? (ஈ) கற்பனையில் மூழ்கி சும்மா உட்கார்ந்திருப்பீங்களா?

* நீங்கள்...

(அ)சுலபமாக பல நட்புகளைத் தேடி, பின்னர் அவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியாதவரா? (ஆ) இதற்கு நேர்மாறா? (இ) இருக்கிறவர்கள் போதுமென எண்ணுவீர்களா? (ஈ) நண்பர்களே கிடையாதா?

'கடைசி கேள்வி உங்களுக்குப் பொருந்தாது எனத் தெரியும்... பரவாயில்லே...' என்றபடி தொடர்ந்தார்...

* உங்களுக்கு சரி சமமானவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கிறது...

(அ)ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவீர்களா? (ஆ) 'நல்லா யோசனை செய்து கொள்...' என்பீர்களா? (இ)'இருக்கிற வேலையை விடாதே!' என்பீர்களா? (ஈ) அவர் வெளிநாடு செல்வதால் உங்களுக்கென்ன ஆதாயம் எனக் கணக்கிடுவீர்களா?

* உங்களுக்கு ஏதோ போட்டியில் கலந்து கொண்டதற்காக பம்பர் பரிசு பணம் கிடைக்கிறது...

(அ) விருந்து, கேளிக்கை என கண்ணை மூடி செலவு செய்வீர்களா? (ஆ) மேலும் மேலும் போட்டியில் கலந்து கொள்வீர்களா? (இ) எல்லா பணத்தையும் சேமித்து விடுவீர்களா? (ஈ) பம்பர் பரிசு அடித்தது பற்றி வெளியே சொல்லாமல் அமுக்கி விடுவீர்களா?

'என்ன சார் விடைகளை, 'டிக்' பண்ணிட்டீங்களா? அ - வுக்கு 10 மார்க், ஆ - வுக்கு 5,

இ - க்கு 3, ஈ - க்கு 0 மார்க்... எங்கே கூட்டுங்கள்...' என்றார். கூட்டினேன்... ஒரு இரட்டைப் படை எண் வந்தது... 'ம்... சொல்லுங்க, எத்தனை வந்திச்சு?'

'நீ விடையைச் சொல்லும்மா...' என்றேன்.

'45 முதல் 60ன்னா, உங்க நண்பருக்கு, நீங்க நல்ல டானிக்; 30 -45க்குள் மெதுவாக குணப்படுத்தும் மருந்து நீங்கள்; 15 -30க்குள்ன்னா, அதிக டோஸ் சாப்பிட்டும் குணமாகாத மருந்து நீங்கள்; 15க்குள்ன்னா, உங்கள் நண்பருக்கு, 'விஷம்' என்ற லேபிள் ஒட்டப்பட்ட பாட்டில் நீங்கள்... நீங்க எந்த, 'கேட்டகிரி' சொல்லுங்க... சொல்லுங்க...' என, வலியுறுத்தினார், நான் கடைசி வரை சொல்லவில்லை...

— நீங்க எந்த கேட்டகிரி? ரகசியமா என் காதிலே சொல்லுங்க!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us