தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?

சமீபத்தில், என் நண்பர், தன் பெண்ணிற்கு, பி.காம்., படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது என்று, சந்தோஷத்துடன், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். சில நாட்களுக்கு முன், அவரது வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. நண்பர் மிகவும் சோகமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், மனதை அதிர வைத்தது.

நண்பரின் மகள், முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை, பெண்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே படித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட, அவரது சக பெண் ஊழியர்கள், 'அய்யே... உனக்கு ஒன்றுமே தெரியாதா... ஏதாவது மாலுக்கு போயிருக்கிறாயா... மாமா, மாமா பையன் போன்றவர்களுடன், 'பைக்'கில் வெளியில் சென்றுள்ளாயா...' எனக் கேட்டும், யூ-டியூபில் மோசமான வீடியோவை போட்டுக்காட்டி, 'இது போல பார்த்திருக்கிறாயா, உன் அண்ணனின் நண்பர்களை தொட்டு பேசியிருக்காயா...' எனக் கேட்டு, சீண்டி, கிண்டல் செய்துள்ளனர்.

இதை விட கொடுமை, சில பெண்களின் தாயாருக்கு, தங்கள் பெண்ணுக்கு ஆண் நண்பர் உள்ள விவரம் தெரியுமாம். மேலும், அம்மாவிடம் சொல்லிவிட்டே சினிமாவிற்கு செல்வதாகவும் கூறியுள்ளனர்.

இதனால், மிகவும், 'அப்செட்' ஆன அந்தப் பெண், பெற்றோரிடம் தயங்கி தயங்கி, இந்த விவரங்களை கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், ஒரு வித தாழ்வு மனப்பான்மையுடனே இருந்துள்ளார். அவரை, மருத்துவரிடம் அழைத்து சென்று, கவுன்சிலிங் அளித்து, தற்போது குணமாகி வருவதாகவும், பத்தொன்பது வயதிலேயே, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டதாகவும், நண்பர் தெரிவித்தார். இதை கேட்டு, மிகவும் வேதனை அடைந்தேன்.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி என, இதனால் தான் கூறினர் போலும்!

— ராமச்சந்திரன், பீளமேடு.

தோழி போட்ட போடு!

எம்.காம்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்த என் தோழிக்கு, சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மாப்பிள்ளையும், பெரிய படிப்பு படித்திருப்பார் என்று எண்ணி, மாப்பிள்ளையின் படிப்பு பற்றி விசாரித்தேன். அவள் சொன்ன பதில், என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மாப்பிள்ளை, ரயில்வேயில், நல்ல வேலையில் இருந்தாலும், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்!

'உன்னை விட, குறைவாக படித்தவரை மணக்க, எப்படி சம்மதித்தாய்?' என்று கேட்டதற்கு, 'வருங்காலத்தில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், தன்னை காப்பாற்றிக் கொள்ள உதவும் ஆயுதமே படிப்பு. அவர், நல்ல வேலையில் உள்ளார். என் அளவு படிப்பில்லாவிட்டால் என்ன? என்னை கண் கலங்காமல் வைத்துக் கொள்வார் என, நம்புகிறேன். அதற்கு மேல் தகுதி வேண்டுமா...' என்றாளே பார்க்கலாம்! படித்த பெண்கள் அனைவரும், இது போல செய்யத் துணிவரா?

— எம்.பார்வதி, திண்டுக்கல்.

பிரிட்ஜ் தயாரிப்பாளர்களே...

நண்பரின் வீட்டுக்கு, ஒரு நண்பகலில் சென்றிருந்தேன். விருந்தினரை உபசரிக்கும் பொருட்டு, அவரது வீட்டு வரவேற்பறையில் இருந்த பிரிட்ஜிலிருந்து, ஜூஸ் எடுத்து வந்தார். அந்த பிரிட்ஜின் கோலத்தைப் பார்த்ததும் பகீரென்றது. ஆம், அதன் தட்டையாக இருந்த மேற்பரப்பின் மீது, சாப்பிட்ட தட்டு, தலை வாரிய சீப்பு, தேங்காய் எண்ணெய் குப்பி, குளியல் சோப்பு, மாத்திரைகள், ஒரு கீரைக்கட்டு ஆகியவை பரப்பி வைக்கப்பட்டிருந்தன. நண்பரின் மனம் நோகக் கூடாதே என்று ஜூசை வாங்கி, ஜலதோஷம் என்று கூறி, நாசூக்காக குடிக்காமல் தவிர்த்தேன்.

குறைந்த இடவசதியுள்ள பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில், பிரிட்ஜின் மேற்பரப்பு இதுபோன்று தான் பயன்படுத்தபடுகிறது. மேற்பரப்பு அரைக்கோள வடிவத்திலோ, முக்கோண வடிவத்திலோ அமைந்திருந்தால், பிரிட்ஜின் மேற்பரப்பின் மீது தட்டுமுட்டு சாமான்கள் வைப்பது தவிர்க்கப்படும். ஸ்டெபிலைசர் வைப்பதற்கு என, ஒரு சிறிய பகுதியை மட்டும் அதில் தட்டையாக வைக்கலாம். பிரிட்ஜ் தயாரிப்பாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?

— எம்.சத்யநாராயணன், சைதாப்பேட்டை.

படிப்போம், பரிசளிப்போம்!

என் நண்பர் ஒருவர், விபத்துக்குள்ளாகி, முழங்கால் சிதைந்து, இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்க ஹார்லிக்ஸ் மற்றும் பழங்களுக்கு பதிலாக, 'நெப்போலியன் வரலாறு' என்ற புத்தகத்தை வாங்கிச் சென்றேன். உடன் வந்த நண்பர், 'வேணாம்டா... பயன் பெறுகிற மாதிரி ஏதாச்சும் வாங்கிட்டுப் போ... அவன பத்தி நல்லா தெரியும். தினசரி பேப்பரே படிக்க மாட்டான். அவன் படித்ததே, ஒன்பதாம் வகுப்பு வரைதான். புத்தக ஆர்வம் துளியும் இல்லாதவன். அவன், இந்த புத்தகத்த குப்பையில தான் போடுவான்...' என்றார்.

சொன்னவர் கையில் ஹார்லிக்ஸ் இருந்தது. மருத்துவமனை நெருங்க நெருங்க, என் முடிவை முற்றிலும் மாற்றி விட்டார். அந்த பக்கம் பைக்கில் வந்த, என் மாமா பையனிடம், புத்தகத்தை வீட்டில் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு அருகே இருந்த கடையில், ஒரு போன்வீட்டா வாங்கிக் கொண்டேன். நண்பரை சந்தித்து, நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் போது சொன்னேன், 'மாப்ள... உனக்கு, 'நெப்போலியன் வரலாறு' புத்தகம் கொடுக்கலாமுன்னு, நெனைச்சேன். இவந்தான் வேண்டாம் கொடுத்தா குப்பையில போட்டுருவான்னு சொன்னான்...' என்றேன்.

அதற்கான பதில், அவனிடமிருந்து வரவில்லை. அவனின் மனைவியிடமிருந்து வந்தது. 'மெத்த படிச்சவங்கதாண்ணே, புத்தகத்த மதிக்க மாட்டாங்க. புத்தகத்து மேல, லேசா கால் பட்டா கூட, நாங்க தொட்டு கும்புடுவோம். படிப்போட அரும உங்கள விட, எங்களுக்கு தான் நல்லா தெரியும். நெப்போலியனப் பத்தி கொஞ்சம் படிச்சுருக்கேன். முழுசா படிக்கணும்ன்னு ஆசை. இவரு படிக்காட்டி என்ன, நான் படிச்சு சொல்லிட்டு போறேன்...' என்றார்.

நம் அன்பளிப்பு, ஒரு அன்பரை நோக்கி மட்டுமே இருக்கிறது. அவரை சார்ந்தவரை பற்றி, நாம் யோசிப்பதே இல்லை.

ஒவ்வொரு வீட்டிலும், வாசிக்க விரும்புபவர்கள் இருக்கவே செய்கின்றனர். நம் கண்களுக்குத் தான் தெரிவதில்லை. உடனே வீட்டுக்குப் போய், அந்த புத்தகத்தை எடுத்து வந்து, கொடுத்த பின் தான் திருப்தியாக இருந்தது. பரிசளிக்க, புத்தகத்தை விட சிறந்தது எதுவுமில்லை.

— சக.முத்துக்கண்ணன், தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us