PUBLISHED ON : அக் 27, 2013

வருடத்திற்கு, ஒரு முறை மட்டும் நடைபெறும் குற்றால டூர், ஒரே ஒரு வருடம் மட்டும், இரண்டு முறை நடைபெற்றது. அது, கடந்த, 92-ம் வருடம் என்றும், இரண்டாவது முறை நடைபெற்ற குற்றால டூரில், வாசகர்கள் அந்துமணியை அடையாளம் கண்டு, சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், அந்த வாய்ப்பு என்ன ஆனது என்பதை, இந்த வாரம் எழுதுவதாக சொல்லியிருந்தேன்.
அதற்கு முன், '92-ம் வருடத்தின் முதல் டூரில், நடந்த சுவாரசியங்களை சொல்லி விடுங்கள்...' என்று, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசந்தர்- விஜயலட்சுமி தம்பதி, கேட்டுக் கொண்டனர்.
இவர்கள் கலந்துகொண்டதே, ஒரு வியப்பான விஷயம். இந்த தம்பதிகள் வீட்டில், வாடகைக்கு குடியிருந்தவர் வாரமலர் வாசகர். அவர்தான், 'மேடம்... நான், ஒரு குற்றால டூர் கூப்பன் போட்டுருக்கேன், நீங்க ஒரு கூப்பனை உபயோகப் படுத்துங்களேன்...' என்று, கொடுத்திருக்கிறார்.
'எனக்கெல்லாம் அந்த அதிர்ஷ்டம் இல்லீங்க...' என்று சொல்லி, மறுத்திருக்கிறார் விஜயலட்சுமி. 'அப்படி சொல்லாதீங்க...' என்று சொல்லி, வற்புறுத்தி, கூப்பனை போடச் செய்திருக்கிறார். அந்த கூப்பன்தான் அதிர்ஷ்ட கூப்பனாகியது.
விஜயலட்சுமி தன் கணவர் பாலசந்தருடன் டூரில் கலந்து கொண்டார். அந்த வருடம் மட்டும், மூன்று விஜயலட்சுமிகள் கலந்து கொண்டனர். இவர், வில்லிவாக்கம் விஜயலட்சுமி. இன்னொருவர், விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, மற்றொருவர், பவானியிலிருந்து வந்த விஜயலட்சுமி. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், வில்லிவாக்கம் விஜயலட்சுமியை, கூப்பன் போடச்சொல்லி வற்புறுத்தி, வாரமலர் இதழைக் கொடுத்தவர் பெயரும் விஜயலட்சுமிதான்.
'விஜயலட்சுமி மேடம்' என்று கூப்பிட்டால் போதும், 'என்ன சார்...' என்று கேட்டு, மூன்று பேரும் வந்து நிற்பர். 'சரி, இப்போது, நீங்கள் எல்லாம் தினமலர் குடும்பத்தில் ஒருவராகி விட்டீர்கள். ஆகவே, உங்களை வீட்டில் எப்படி கூப்பிடுவர் என்று சொல்லுங்கள். அப்படியே, நாங்களும் கூப்பிடுகிறோம். இதனால், பெயர் குழப்பம் வராது...' என்று சொன்னவுடன், மூன்று பேருமே, ' எங்களை, 'விஜி' என்றுதான் கூப்பிடுவர்' என்று சொல்லி, மேலும் என்னை குழப்பினர்.
பிறகு வேறு வழியில்லாமல், ஊர் பெயரை சேர்த்து, வில்லிவாக்கம் விஜயலட்சுமி, விரிஞ்சிபுரம் விஜயலட்சுமி, பவானி விஜயலட்சுமி என்று அழைக்க ஆரம்பித்தோம். நல்லவேளை, மூன்று விஜயலட்சுமிகளும் ஒரே ஊரில் இருந்து தேர்வாகவில்லை. அப்படி தேர்வாகி யிருந்தால், செம காமெடியாக இருந்திருக்கும்.
அந்த வருடம், ஓட்டல் தமிழ்நாடு சார்பில், பழைய குற்றாலம் போகும் பாதையில் உள்ள தண்ணீர் தேக்கத்தில், உல்லாச படகு விடப்பட்டது. (இப்போது அந்த படகு குழாம் ஐந்தருவிக்கு மாற்றப்பட்டு விட்டது)வாசகர்கள் அனைவரும், அவரவர் துணையுடன், படகுகளில் அனுப்பப்பட்டனர். பாலசந்தர் தம்பதி கிட்டத்தட்ட புதுமணத்தம்பதிகள் என்பதால், அவர்கள் மட்டும், வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட, விசேஷ படகில் அனுப்பப்பட்டனர். இதில், அவர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி.
இந்த தம்பதி, இரண்டாவது முறையாக, வெள்ளி விழா குற்றால டூரில், 21 வருடங்கள் கழித்து, மீண்டும் கலந்து கொண்டனர். இடைப்பட்ட காலங்களில், பாலசந்தர், தன் பணியில் மிகவும் முன்னேறியிருந்தார். தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்வதிலும், வாசகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதிலும், இந்த தம்பதிக்கு நிகர் இவர் களேதான்.
முதல் முறையாக, டூருக்கு வந்த போது, தன் இனிமையான சுபாவத்தால், வில்லிவாக்கம் விஜயலட்சுமி, உடன் வந்திருந்த வாசகிகள் பலரின் நட்பையும், அன்பையும் அதிகமாக பெற்றிருந்தார். இதன் காரணமாக, டூர் முடிந்த பின்பு, அது கைபேசி இல்லாத காலம் என்பதால், கடிதம் மூலம், நட்பை தொடர்ந்துள்ளார். அப்போது, அவருக்கு வந்த கடிதங்களை எல்லாம், இப்போதும், பொக்கிஷம் போல பாது காத்து வைத்திருக்கிறார்.
'நீங்களாவது, அந்துமணியை கண்டு பிடித்தீர்களா?'என்று ஆரம்பிக்கும் கடிதம் முதல், 'நாம் இவ்வளவு நெருங்கிய தோழிகளான பின், எதற்கு இந்த நீங்கள், நாங்கள் என்ற வார்த்தை. நீ, நான் என்றே எழுதிக் கொள்வோம்...' என்றெல்லாம் தொடர்கிறது.
அதுமட்டுமில்லாமல், டூரில், தாங்கள் அனுபவித்த விஷயங்களை அணு அணுவாக அசைபோட்டும், 'இது பூர்வ ஜென்ம புண்ணியம்' என்றும், 'வாழ்க்கையில் மறக்க முடியாத இந்த அனுபவத்தை தந்தது வாரமலர் இதழ்' என்றும், இந்த குற்றால டூர் தோழிகள், தங்கள் கடிதங்களில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இவ்வளவு விஷயங்களை சொன்ன வில்லிவாக்கம் விஜயலட்சுமி, இரண்டாவது டூர் முடிந்த பிறகு ஒரு நாள், 'ஒரு விஷயம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...' என்று சொல்லி, ஒரு விஷயத்தை சொன்னார்.
அது என்ன விஷயம், என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.
குற்றாலமும், புலியருவியும்...
பெயர்தான் புலியருவியே தவிர, இந்த அருவிக்கும், புலிக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. ஒரு காலத்தில், தனியார் எஸ்டேட்டிற்குள் இருந்த இந்த அருவியை, அழகுபடுத்தும் விதத்தில், புலியின் தலையை போல் உருவாக்கி, அந்த புலித்தலையின் வாய் வழியாக, தண்ணீர் விழுவது போல ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதன் காரணமாக, இந்த அருவிக்கு, புலியருவி என்று பெயர் வந்தது. பின்னாளில், பெருந்தன்மையுடன் அந்த அருவியை, பொதுச் சொத்தாக்கி விட்டனர்.
குற்றாலம் பஸ் நிலையத்தில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த புலியருவி, குழந்தைகளையும்,பெண்களையும் ரொம்பவே குஷிப்படுத்தும். காரணம், மிக குறைந்த உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால். மற்ற அருவிகளில் குளிக்கும் போது, 'தட தட'வென, தண்ணீர், பிரம்படி போல, முதுகிலும், தலையிலும் விழும். இது பெரியவர்களுக்கு சுகமாக இருந் தாலும், சிறியவர்களுக்கு முதலில் பயத்தையே ஏற்படுத்தும். ஆனால், இந்த புலியருவியில், தண்ணீர் மென்மையாக விழுவதால், குழந்தைகள் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் குளிப்பர். இதன் மூலம், அருவி மீது பயம் போய், பிரியம் ஏற்பட்டு விடும்.மேலும், சிறிய தடாகம்(குளம்) போல, அருவியை ஒட்டி, ஒரு பகுதி உள்ளது. இது சிறுவர்களுக்கு குளித்து கும்மாளமிட ஏற்ற இடம். அத்துடன், அருவியில் இருந்து கொஞ்ச தூரம், ஆறு போல தண்ணீர் ஓடும். இந்த ஆற்றிலும் ஆனந்தமாக, நீச்சல் அடித்து குளிக்கலாம்.
எளிதில் அணுகக்கூடிய இந்த அருவி, குடும்பத்துடன் குளிப்பதற்கு ஏற்ற அருவியாகும்.
***
— அருவி கொட்டும்.
- எல் முருகராஜ்
