தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : அக் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்டர் முன் அமர்ந்திருந்தார் லென்ஸ் மாமா; உடன் நான்!

'உங்க ரொட்டீன் என்ன?' - இது டாக்டர்.

'காலையில ஆபீஸ், மாலையில் வீடு!'

டாக்டரிடமும், வக்கீலிடமும் உண்மையைச் சொல்லி விட வேண்டுமல்லவா... மறைத்தார் மாமா.

நான் சொன்னேன்: டாக்டர்... காலையில் ஏ.சி., காரில் ஆபீஸ் போவார்; ஆபீஸ் ரூம் ஏ.சி., வீட்டில் ஏ.சி., ஆபீஸ் ரூமை அவர் அடைய, மாடிப்படி ஏறுவது ஒன்று தான் அவரின் உடற்பயிற்சி. போட்டோ எடுக்கும் அசைன்மென்டுகளும், எங்க ஆசிரியர் இப்போ அதிகமாக இவருக்கு கொடுப்பதில்லை. அதனால், ஆடி ஓடி, வேலை செய்வதில்லை. இது தவிர, வெண்குழல் வத்தியும், உ.பா., பழக்கமும் உண்டு!

ரத்த பரிசோதனை செய்த டாக்டர், 'உங்களுக்கு கொழுப்பு அதிகமா போச்சு; டெய்லி முக்கால் மணி நேரம் வேகமா நடந்து, உடற்பயிற்சி செய்யணும்! வெண்குழல் வத்தியை சுத்தமா விட்டுடணும்; டெய்லி ரெண்டு, 'பெக்' உ.பா., ஒண்ணும் குத்தம் இல்லே...' என்று கூறி விட்டார்.

உயிர் மீது பயம் வந்து விட்டது லென்ஸ் மாமாவுக்கு. தினமும் மாலை, கடற்கரை கலங்கரை விளக்கம் தொடங்கி, பாரதியார் சிலை வரை, இரண்டு முறை சுற்றி, நடை பயிற்சி செய்கிறார்.

மாமாவுக்குத் தான் கொழுப்பு ஏறிவிட்டது. எனக்கென்ன... நானும் வரவேண்டுமென, 'நச்சு' பண்ணி, என்னையும் உடன் அழைத்து செல்கிறார். முதல் இரண்டு நாள், அலுப்பாக இருந்தாலும், கடற்கரையில், உள் ரோடில் நடக்கும் காட்சிகள், ஆர்வம் கொள்ள செய்தன.

சாலையில், கடற்கரை மணலையும், சாலையையும் பிரிக்க வைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவர் கற்களில், குறிப்பிட்ட இடங்களை, பட்டா போட்டு கொள்கின்றனர் குறிப்பிட்ட ஜோடிகள் சிலர்.

கல்லூரி மாணவிகள் துவங்கி, பணிக்கு செல்லும் பெண்கள், பத்தாவது, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும் சிறுமியர் வரை, தத்தமது காதலர்களுடன், 'டாண்' என, குறிப்பிட்ட நேரத்தில், பைக்கில் வந்து இறங்கி விடுகின்றனர். பைக்கையே, மறைவிடமாக கருதி, வித விதமான, போஸ்களில் அமர்ந்து, ஒருவரையொருவர் தழுவியபடி, மெய் மறக்கின்றனர்.

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்கள் என்றால், சரியாக ஏழரை மணிக்கு, ஜூட் விடுகின்றனர். எட்டு மணிக்கு ஹாஸ்டல் சென்று அடைய வேண்டுமல்லவா! திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற இடங்களிலிருந்து வரும் பெண்கள், தத்தமது வீட்டை, எட்டு மணிக்குள் அடைய, ஏழே முக்கால் மணிக்கு கிளம்பி விடுகின்றனர்.

இதில், ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும் சிறுமியர் தனியே வருவதில்லை; தம்முடைய தோழி ஒருவரையும் உடன் அழைத்து வந்து, துணைக்கு வைத்துக் கொண்டு, தமது காதலருடன் அடித்து பிடித்து விளையாடுகின்றனர்.

தொடர்ந்து அதே நேரத்திற்கு வாக்கிங் செல்வ தால், எங்களை அடையாளம் கண்டு, புன்முறுவல் பூத்து, தோழமையாக சிரிக்கின்றன சில ஜோடிகள்.

அங்கு, போலீஸ் அவுட் போஸ்ட் ஒன்றும் உள்ளது. இங்கு, மஞ்சள் பைக் போலீஸ்காரர் ஒருவரும், லத்தியை சுழற்றும் இரண்டு காவலர்களும் உண்டு. இவர்களின் கண்கள், கழுகுப் பார்வை கொண்டவை. இவர்களையும் தொடர்ந்து கவனித்து வந்தேன். இளம் ஜோடிகள் பக்கம் இவர்கள் செல்வதே கிடையாது; மத்திய தர வயதுடைய ஜோடிகளையே, இவர்கள் குறி வைக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஜோடிகளை அணுகி, இருவரையும் தனித்தனியே பிரித்து, பெண்ணிடம், 'அவர் உன் கணவரா, பெயர் என்ன, முகவரி என்ன?' போன்ற கேள்விகளை கேட்கின்றனர். இதே போன்ற கேள்விகள், ஆண்களிடமும் கேட்கப்படுகின்றன.

அவர்கள் இருவரும் நிஜமான ஜோடி கிடையாது. அவரது மனைவி வீட்டிலிருப்பார்; இவரது கணவர் வேலைக்குப் போயிருப்பார். இவர்கள் இருவருக்கும், 'இல்லீகல்' தொடர்பு. இப்படி மாட்டிக் கொள்வோம் என்பது தெரியாததால், போலீஸ்காரர் கேட்கும் கேள்விகளுக்கு, முன்னுக்குப் பின், முரணான பதில் சொல்லி மாட்டிக் கொள்வர்.

இது, போலீஸ்காரர்களுக்கு, பொன் முட்டையிடும் வாத்து கிடைத்தது போன்ற குஷியை ஏற்படுத்திவிடும். சிக்கியவர் பையிலிருக்கும் ஐம்பது பைசாவைக் கூட விட்டு வைக்காமல், வழித்து, துடைத்து எடுத்துக் கொண்டு, அனுப்பி விடுவர்.

ஒரு நாளைக்கு, ஒரு ஜோடி என்ற விகிதத்தில் தான் பிடிக்கின்றனர். ஒரே நாளில் பல ஜோடிகளையும் பிடித்தால், இந்த இடம் டேஞ்சரானது; இனி, இங்கே வரக்கூடாது என, முடிவு செய்து, அங்கே, ஜோடிகள் வருவது நின்று விடும் அல்லவா! அதனால் தான், ஒரு நாளைக்கு ஒரு ஜோடி. பொன் முட்டையிடும் வாத்தை, ஒரே நாளில் அறுத்துக் கொன்று விடுவரா என்ன?

எது, எப்படி வேண்டுமானாலும் போகட்டும்... நீங்கள் எந்த ஊரில் வசித்தாலும் சரி, உங்களது வயதுக்கு வந்த மகள், தங்கை மாலை வேளையில் கம்ப்யூட்டர் கிளாஸ், டியூஷன், பாட்டு கிளாஸ், பரத கிளாஸ் போன்றவற்றுக்கு செல்லும் போது, ஒரு கண் வைத்துக் கொள்ளுங்களேன். காரணம், வீட்டின் கூடத்திற்கே டெலிவிஷன் என்ற அரக்கன் வந்து விட்ட காலமல்லவா!

***

'கடலுக்கு கரிப்புத் தன்மை இருப்பது எதனால் தெரியுமா?' என்று கேட்டார் குப்பண்ணா.

'சொன்னால் தானே தெரியும்...' என்றேன்.

'கடலுக்குள் வந்து சேரும் நதிகளும், ஓடைகளும், உப்புச் சத்தை பாறைகளிலிருந்தும், பூமியின் மேல் பரப்பிலிருந்தும் சிறுகச் சிறுக அடித்து வந்து, கடலில் சேர்ப்பதால்தான். கடல் நீர் ஆவியாக மாறி, மீண்டும் மழையாகப் பொழிகிறது. உப்பு மட்டும் கடலிலேயே, தங்கி விடுகிறது!'

'கடலுக்கு நீல நிறம் கொடுப்பது வானம் தானே? வானம் நீலநிறமாக இருப்பதால் தானே கடல் அதை பிரதிபலிக்கிறது...' என்றேன்.

'இல்லையில்லை... கடலுக்கு நீல நிறம் கொடுப்பது சூரியன்தான். உண்மையில் கடல் நீர் நிறமற்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் பல நிற ஒளிக்கதிர்களுள், நீல நிறத்தை தவிர மற்ற அனைத்தையும் கடல் கிரகித்துக் கொள்கிறது. நீலநிறக் கதிர்கள்மட்டும் கடலால் எதிரொளிக்கப்படுவதால், அது, நீலநிறமாகத் தோன்றுகிறது!'

'சந்திரனுக்கும், கடல் கொந்தளிப்புக்கும் கூட சம்பந்தம் இருக்கிறதாமே?'

'ஆமாம்... முழு நிலவின் ஈர்ப்பு சக்தியால், கடல் நீர் எழுச்சியடைந்து மேலெழும்புகிறது. அதே போல், உலகின் பூமிப் பகுதியும் கொந்தளிக்கிறது. பூமியின் நிலப்பரப்பு, சில சமயங்களில் ஆறு அங்குலம் கூட எழுந்து, மீண்டும் அடங்குகிறதாம். உலகப்பரப்பில் 70 சதவிகிதம் தண்ணீர் தான். ஆனால், இதில் ஒரு சதவிகிதம் தான் குடிக்க லாயக்கானது.

'ஜெர்மனியில் உள்ள ஹெமல் ஸ்டார் பர் என்ற ஏரியின் மேல் பகுதி நீர், இனிப்பாகவும், அடிப்பகுதி நீர் கசப்பாகவும், இருக்கும். அதனால், இதற்கு, 'ஸீ ஆப் மேட்ரிமனி' என்று பெயர். 'மேட்ரிமனி' என்ற ஆங்கில வார்த்தைக்கு, மண வாழ்க்கை என்று பொருள்...' என்றார் குப்பண்ணா.

***

இந்த சினிமா பிரபலங்களையும், அவர்கள் இனிஷியலையும் நமக்குத் தெரியும். இந்த இனிஷியல்களின் விரிவாக்கம், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இதோ நாட்டுக்குத் தேவையான முக்கியமான சமாச்சாரம்:

1. டி.ஆர். (திருக்காம்புலியூர் ரங்காராவ்) ராமச்சந்திரன்.

2.டி.எஸ். (திருநெல்வேலி சுப்ரமணிய பிள்ளை) பாலையா.

3.பி.எஸ். (பொள்ளாச்சி சின்ன முதலியார்) வீரப்பா.

4.கே.ஆர்.(கும்பகோணம் ராமபத்திர செட்டியார்) ராமசாமி.

5.எம்.கே. (மாயவரம் கிருஷ்ண மூர்த்தி ஆசாரி) தியாகராஜ பாகவதர்.

6.என்.எஸ்.(நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை) கிருஷ்ணன்.

7.எம்.கே.(மதராஸ் கந்தசாமி) ராதா.

8.ஏ.பி.(அக்கமாப் பேட்டை பரமசிவம்) நாகராஜன்.

9.கே.ஏ.(காரைக்கால் அருணா சலம் ஆசாரி) தங்கவேலு.

10.எஸ்.வி. (செங்கோட்டை வெள்ளையன் ஆசாரி) சுப்பையா.

— அந்தக் கால சினிமா ரிப்போர்ட்டர் ஒருவர் கூறக் கேட்டது!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us