PUBLISHED ON : மார் 09, 2014

மேஸ்திரிக்கு பிடித்த மல்லிகைப் பூ !
இரு தினங்களுக்கு முன், நானும், என் குடும்பத்தாரும் கோவிலுக்கு சென்றிருந்தோம். கோவில் வாசலில், பூ கட்டி, விற்றுக் கொண்டிருந்த பெண்மணியிடம் ஒரு முழம் பூவுக்கு, பேரம் பேசியபடி, சித்தாள் வேலை செய்யும் பெண்கள், சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நகர்ந்ததும், நானும், பூ வாங்கியபடியே, மெல்ல சச்சரவுக்கான காரணம் குறித்து கேட்டேன்.
அதற்கு பூக்காரப் பெண்மணி கூறிய பதில், என்னை திடுக்கிட வைத்தது.
தினமும், நல்ல புடவை அணிந்து, பவுடர் பூசி, தலையில் மல்லிகைப்பூ வைத்தபடி வரும், 'பளிச்' பெண்களுக்கு தான், மேஸ்திரி வேலை தருவாராம். கட்டட வேலைகளுக்கு தானே என்று, பல்லும், பங்கரையுமாய், அழுக்குச் சேலையோடு போய் நின்றால், அன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே வேலை கிடைக்காதாம்.
அது மாத்திரமல்ல, கிடைத்த வேலையில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், மேஸ்திரி மனம் கோணாமல், 'நீக்குப் போக்காக' நடந்து கொள்ள வேண்டுமாம்.
வேலைக்கு போகும் பெண்கள், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்தால் என்ன, அடுக்கு மாடி கட்டடத் தொழிலாளியானால் என்ன... இந்த வன்கொடுமைகளுக்கு ஆளாகித் தான், வேலை செய்ய முடியும் போலிருக்கிறது.
மேஸ்திரிமார்களே... சித்தாள்களிடம் வேலை வாங்குங்கள். ஆனால், அவர்களை, மேக் - அப் போட சொல்லி வற்புறுத்தாதீர்கள்! அவர்கள் நடிக்க வரவில்லை.
— சங்கமித்ரா நாகராஜன், கோவை.
வெளிநாட்டவர் என்றால் விதி விலக்கா?
ஒரு முறை நானும், என் நண்பரும் ரெஸ்ட்டரான்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பக்கத்து டேபிளில், ஒரு வெள்ளைக்காரத் ஜோடி, சிகரெட்டை புகைத்துக் கொண்டே, ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வெளிநாட்டவர் என்பதால், புகைப்பிடிக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அப்போது, அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர், 'எக்ஸ்க்யூஸ் மீ... பப்ளிக் பிளேஸ்; நோ ஸ்மோகிங் ப்ளீஸ்...' என்று, அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கூறினார்.
உடனே, அவர்களை அழைத்து வந்த கைடு, 'விடுங்க சார்... வெளிநாட்டுக்காரங்க தானே...' என்றார்.
'ஏன் சார்... வெளிநாட்டுக்காரங்க பிடிக்கிற சிகரெட்ல மட்டும் புகை வராதா... அந்த புகை யாரையும் பாதிக்காதா? சுத்தி லேடிஸ், பெரியவங்க, சின்னக் குழந்தைகள்ன்னு ஏகப்பட்ட பேர் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. புகை பிடிக்கிறது ஒருத்தர், நோய் வர்றது இன்னொருத்தருக்கா?
'இதே வெளிநாட்டுல போயி, அவங்க போட்ட சட்டத்த மீறி, நாம ஏதாவது செஞ்சிட முடியுமா? உடனே உள்ள தூக்கி போட்டுட மாட்டாங்களா?
'அன்னைக்கு போனாப் போகுதுன்னு வெள்ளக்காரன வியாபாரம் செய்ய விட்டதுனாலதான் பல ஆண்டுகளா, நம்மள அடிமைப்படுத்தி வச்சிருந்தான். மோரு, பதநீர், கூழ்ன்னு சாப்பிட்டுக்கிட்டு இருந்த நாம இப்ப கூல்ட்ரிங்க்ஸ், பீர், சிகரெட்டுன்னு சீரழிஞ்சுக்கிட்டு இருக்கோம்...' என்று, ஒரு லெக்சரரே கொடுத்தார். அதற்குள் நிலமையைப் புரிந்து கொண்ட, அந்த வெளிநாட்டு தம்பதியினர், சிகரெட்டை அணைத்து விட்டனர்.
நான், அந்தப் பெரியவரின் பொது நலனையும், தவறை தட்டிக்கேட்ட துணிவையும், பாராட்டினேன்.
— ஆர்.நடராஜன், சென்னை.
பட்டால் தான் தெரியுமோ!
பள்ளிக்கூடத்து பஸ் விபத்தை பார்த்த என் நண்பர் ஒருவர், தன் பிள்ளைகள் இருவரையும், வேனில் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டார். அவருடைய எச்சரிக்கை உணர்வு, எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
ஆனால், அதற்கு பதிலாக, அவர் செய்த செயல் தான், என்னை திகைப்பில் ஆழ்த்திவிட்டது. பழைய பைக்கில், புத்தக மூட்டைகளோடு, பிள்ளைகள் இருவரையும், அடைக்காத குறையாக, உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்.
இரு சக்கர வாகனத்தில், அதிகச் சுமை மற்றும் நபர்களுடன் பயணிப்பது, ஆபத்து என்பதை, அவருக்கு எப்படி புரிய வைப்பது!
இவர்கள் எல்லாம், பட்டால் தான் திருந்துவரோ!
— ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை.
சுற்றுலா தலமாகட்டும் நூலகம்!
வழக்கம் போல், காலை வேளையில், பொது நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ராணுவ அணி வகுப்பு மாதிரி ஐம்பதுக்கும் மேற்பட்ட சின்னஞ்சிறு மாணவ, மாணவியருடன், ஒரு ஆசிரியர் உள்ளே வந்தார்.
ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று, கையெழுத்து போட்டு, அமைதியாக, பெஞ்சுகளில் அமர்ந்தனர். அவர்களை வழி நடத்திய ஆசிரியர், அங்கே இருந்த பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை பற்றி எடுத்துச் சொன்னார். பின், அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல்சுவை புத்தகங்களின் விவரத்தை விளக்கி கூறினார்.
குழந்தைகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு, பொறுமையாக பதில் சொன்னார். இதைத் தொடர்ந்து, அங்கே இருந்த கம்ப்யூட்டர் பற்றி விளக்கியதோடு, அது செயல்படும் விதத்தையும் குழந்தைகளுக்கு காட்டினார். அந்நேரம் அந்த பிஞ்சுகளின் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
பிக்னிக் என்றதும், ஆறு, கோவில் மற்றும் குளம், மலை வாசஸ்தலம், கடல், பூங்கா என்று தான் அழைத்துச் செல்வர். ஆனால், வித்தியாசமாக, நூலகத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்து, அதன் அருமைகளை புரிய வைப்பது, மிக மிக பாராட்டப்பட வேண்டியது.
இதையே ஏனைய பள்ளி ஆசிரியர்களும் பின்பற்றினால், வளரும் இளம் பிஞ்சுகளுக்கு, வாசிக்கும் பழக்கம் எளிதில் வந்துவிடும். அதனால், வாழ்க்கையே ஒளிமயமாகி விடும்; செய்வரா!
— வெ.கணேசன், அருப்புக்கோட்டை.
காதலை தடுக்கும் புத்திசாலித்தனம்!
சமீபத்தில், நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது சம்பந்தமாக, தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார் நண்பர். அப்போது, அவர் மகளும் வீட்டில் இருந்தார். நான், நண்பரை தனியாக அழைத்து, 'இப்போது தானே, உங்கள் மகள் முதலாமாண்டு படிக்கிறாள். இன்னும் மூன்று, நான்கு ஆண்டு கழித்து, அவளுக்கு திருமணம் செய்யலாமே...' என்றதுடன், 'வீட்டில் உங்கள் மகள் இருக்கும் போது, அவள் திருமணம் பற்றி பேசுவது, அவளுடைய படிப்பை பாதிக்காதா...' என, கேட்டேன்.
நண்பர், அதற்கு, 'இப்போதெல்லாம் கல்லூரி மாணவியர், காதலில் விழுவது, சர்வ சாதாரணமாகி விட்டது. எனக்கு என் மகள் மீது நம்பிக்கை இருந்தாலும், எப்போது, என்ன நடக்கும், என்று சொல்ல முடியாது. நான், என் மகள் காதுபட, அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதாக இப்போது பேசினாலும், கல்யாணம் செய்து வைக்கப் போவதென்னவோ, அவள் படிப்பை முடித்த பின் தான். வீட்டில், தனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்ற செய்தி, ஒரு பெண்ணுக்கு தெரியும் போது, காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தாலும், அது, நீர்த்துப் போய்விடும். எனவே தான், அவள் காதுபடவே கல்யாணம் பற்றி பேசுகிறேன்...' என்றார்.
அவரது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டி விட்டு வந்தேன்.
— ரா.சாந்தகுமார், பாளையங்கோட்டை.
