நான் சுவாசிக்கும் சிவாஜி (23) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி (23) - ஒய்.ஜி. மகேந்திரன்
PUBLISHED ON : மார் 09, 2014

ஒருமுறை, காமராஜர் அரங்கத்தில் நடத்திய, சிவாஜியின் நினைவு அஞ்சலி விழாவில், நடிகை வைஜெயந்திமாலாவை கவுரவப்படுத்தி, நினைவுப் பரிசு வழங்கினோம். சிவாஜி மீது மிகுந்த மரியாதை கொண்டவர் வைஜெயந்திமாலா. விழாவின் போது, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து, இயக்கிய, இரும்புத் திரை படத்திலிருந்து, 'நெஞ்சில் குடியிருக்கும்...' என்ற பாடலை, இசைக் குழுவினர் பாடினர்.
திரைப்படத்தில், இப்பாடலுக்கு முந்தைய காட்சியில், சிவாஜியும், வைஜெயந்திமாலாவும் ஒரு குளக்கரையில் சந்தித்து பேசும் காட்சி வரும். படத்தில், வைஜெயந்திமாலாவைத் தான் காதலிப்பார் சிவாஜி. வைஜெயந்திமாலாவும் அவரை விரும்புவார். ஆனால், இன்னொரு ஹீரோயினான சரோஜா தேவியும், சிவாஜியை காதலிப்பதை அறியும் வைஜெயந்திமாலா, சிவாஜி மனதில் யார் இருக்கின்றனர் என்பதை அறிந்து கொள் வதற்காக, அவரிடம் சில கேள்விகள் கேட்பார்.
அப்போது, வைஜெயந்திமாலாவை நேராக பார்க்காமல், தன் குரலை உயர்த்தாமல், விஷம சிரிப்பு சிரித்துக் கொண்டே நளினமாக பேசுவார் சிவாஜி. வைஜெயந்திமாலாவோ, அவர், வேறு ஒரு பெண்ணை தான் காதலிக்கிறார் என்று நினைத்துக் கொள்வார். பொறாமையும், இயலாமையும் சேர்ந்து கண்களில் நீரை வரவழைக்கும். கடைசியில், 'அவள் என்னை விட அழகா?' என்று, பிரம்மாஸ்திரமாக ஒரு கேள்வி கேட்பார்.
'உன்னை மாதிரி தான், நல்ல அழகி...' என்பார் சிவாஜி. 'அவள் பெயரை சொல்ல முடியுமா?' என்று, அழுகை பீறிட கேட்பார். 'அது நீ தான்...' என்று, குறும்புத்தனமாக சொல்லும் போது, வைஜெயந்திமாலாவிற்குள் ஏற்பட்ட, பொறாமை, அழுகை எல்லாம் போய், சிரித்து விடுவார். மிகவும் நேர்த்தியாக, யதார்த்தமாக, இந்த காதல் காட்சியை டைரக்ட் செய்திருப்பார் எஸ்.எஸ்.வாசன். 'தன்னுடைய படங்களிலேயே இது ஒரு சவாலான காட்சி...' என்று, என்னிடம் கூறியிருக்கிறார் வைஜெயந்திமாலா.
அதே போல், சாந்தி படத்தில், தன் காதலி தேவிகாவைப் பற்றி, தன் தாயார் சந்தியாவிடம், சிவாஜி பேசும் காட்சி இடம் பெற்றிருக்கும். தாயின் மடியில் படுத்து, அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டே, தயங்கி தயங்கி அரைகுறை வார்த்தைகளில், 'நான் ஒரு பெண்ணை பார்த்தேன். அவள் கண்களை பார்த்தேன்...' என்று, வார்த்தைகளை மென்று விழுங்கி பேசுவார். நம் வீட்டில் நடக்கிற மாதிரி தத்ரூபமான உணர்வு கிடைக்கும்.
வைஜெயந்திமாலா எனக்கு நெருங்கிய உறவினர். என் தந்தை ஒய்.ஜி.பி.,யின் தாயும், வைஜெயந்திமாலாவின் பாட்டி யதுகிரியும் சகோதரிகள்.
வைஜெயந்தி மாலா விற்கும், டாக்டர் பாலிக்கும் வைஜெயந்தி யின் வீட்டில் திருமணம் நடந்த போது, அனை வருக்கும் முன் வந்து, முகூர்த்தம் முடியும் வரை இருந்து, மணமக்களை வாழ்த்தினர் சிவாஜி - கமலா தம்பதியர். 'வாங்கோ வாங்கோ கட்டபொம்மன்... நல்லா இருக்கேளா... நீங்க வந்து பாப்பாவை ஆசிர்வாதம் செய்தது ரொம்ப சந்தோஷம்...' என்று, சிவாஜியின் கைகளை பிடித்தபடி சொன்னார் யதுகிரி பாட்டி.
'என்ன... நீங்க இன்னும் கட்டபொம்மனப் பத்தியே சொல்லிண்டிருக்கேள். பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற, அய்யர் ரோல், இப்போ, வியட்நாம் வீடு நாடகத்திலே செய்திருக்கேன்; ரொம்ப அனுபவிச்சு பண்றேன். இந்த வாரம் கூட டிராமா இருக்கு, பார்க்க வாங்கோ...' என்று அழைத்தார் சிவாஜி. நாடக மேடையிலும், சினிமாவிலும் ஏராளமான சாதனைகள் செய்துவிட்ட பின்னரும், ஒரு புது நடிகருக்கே உரிய உற்சாகத்தோடு, தன் நாடகத்தை பார்க்க அழைத்தார்.
சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசித்து, பார்ப்பார் டாக்டர் பாலி. மும்பையில் பிறந்து, வளர்ந்த அவருக்கு, தமிழ் நன்றாக புரியும். நாங்கள், ஒரு குரூப்பாக, சாந்தி தியேட்டரில், பட்டிக்காடா பட்டணமா படம் பார்க்க போயிருந்தோம். படத்தின் இரண்டாவது பாதியில், ஹிப்பி ஸ்டைலில், வருவார் சிவாஜி. 'பெண்டாட்டி இங்கே, புருஷன் லண்டனில், வயித்திலே குழந்தை, எப்படி...' என்ற வசனத்தில், 'எப்படி' என்ற வார்த்தையை, ஸ்பெஷலாக, இழுத்து பேசுவார் சிவாஜி. இக்காட்சி, டாக்டர் பாலிக்கு, ரொம்ப பிடிக்கும்.
பி.மாதவன் இயக்கத்தில், சிவாஜி, ஜெயலலிதா நடித்து, சூப்பர் ஹிட்டான படம், பட்டிக்காடா பட்டணமா. கருப்பு வெள்ளைபடங்களிலேயே, மிக அதிக வசூலை குவித்த படம். சிவாஜி நடிப்பில், ராமன் எத்தனை ராமனடி, பாட்டும் பரதமும் எங்க ஊரு ராஜா, தங்கப் பதக்கம், ஞான ஒளி, ராஜபார்ட் ரங்கதுரை, வியட்நாம் வீடு போன்ற, பல வெற்றிப்படங்களை, பி.மாதவன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், 'கேட்டுக்கோடி உருமி மேளம், போட்டுக் கோடி கோ கோ தாளம்...' பாடல் காட்சியில், கிதார், டிரம்ஸ் என்று, பல மேற்கத்திய இசை கருவிகளை, உபயோகப்படுத்தியிருப்பார். வேஷ்டி, ஜிப்பா, குடுமியோடு கிராமத்தான் கெட்டப்பில், சிவாஜி பாடும் போது, மேற்கத்திய இசைக்கருவிகள் ஒலிக்கும். மாடர்ன் உடையில் இருக்கும் ஜெயலலிதா பாடும்போது, கிராமத்து இசைக்கருவிகளான உருமிமேளம், தாரை, தப்பட்டை போன்றவை ஒலிக்கும்.
சிவாஜியை பொறுத்தவரை, இந்தப் படம் அவருக்கு, ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இந்த படத்தால், அவருக்கு ரசிகர் பட்டாளம் பல மடங்கு அதிகரித்தது.
பட்டிக்காடா பட்டணமா படத்தை, ஜெயலலிதாவிற்காக பிரத்யேக காட்சி, ஏவி.எம்., தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தனர். எங்கள் யு.ஏ.ஏ., நாடகக்குழுவில் உள்ளவர் களையும், அந்த காட்சிக்கு அழைத்திருந்தார் ஜெயலலிதா. படம் பார்த்து முடிந்த பின், எங்களிடம், 'படம் எப்படி இருக்கு...' என்று, கேட்டார் ஜெயலலிதா. சற்று தயக்கத்துடன், 'பரவாயில்லை, சுமார்' என்று சொன்னோம். காரிலே ஏறியபடி, 'இந்தப் படம் உங்களை மாதிரி ஆட்களுக்காக எடுக்கப்படவில்லை. பாமர மக்களுக்காக, அவர்கள் மகிழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட படம். படத்தின், ௨௫வது வார வெள்ளி விழாவில், உங்களை சந்திப்பேன்...' என்று தன்னம்பிக்கையோடு, சொல்லி சென்றார். படமும் மாபெரும் வெற்றி அடைந்து, வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
பழம்பெரும் நடிகர், பாடகர் டி.ஆர்.மகாலிங்கத்தின், கணீர் குரலுக்கு, சிவாஜி மிகப்பெரிய விசிறி.
பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு, மதுரை அருகே உள்ள சோழவந்தானில், பதினைந்து நாட்கள் நடைபெற்றது. மற்ற நடிக, நடிகையர், இயக்குனர் மாதவன், டெக்னீஷியன்கள் எல்லாரும், மதுரையில் தங்கி, அங்கிருந்து படப்பிடிப்பிற்கு தினமும் வருவர். ஆனால், சிவாஜி மட்டும், சோழவந்தானில் உள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின், பண்ணை வீட்டில் தங்கி, அவருடனே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டி.ஆர்.மகாலிங்கத்துடன் பதினைந்து நாட்கள் தங்கியது தனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்ததாக
கூறுவார் சிவாஜி.
இந்த படத்தில் வரும், 'என்னடி ராக்கம்மா...' பாடல், 42 ஆண்டுகள் ஆகியும், இன்னும் சிரஞ்சீவியாக, ரசிகர்கள் மனதில் பசுமையாக இருக்கிறது. இன்றும் லைட் மியூசிக் குழுக்கள், எப்.எம்.,ரேடியோ, 'டிவி' சேனல்களில் தவறாமல் ஒலிபரப்பப்படுகிறது. சந்திரமுகி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ரஜினிகாந்த், இந்த பாட்டை உபயோகப்படுத்திக் கொண்டார்.
— தொடரும்.
- எஸ். ரஜத்
