PUBLISHED ON : மார் 09, 2014

'காந்தி குல்லாய்' என்று அழைக்கப்படும், வட மாநில காங்கிரசாரால் இன்றும் அணியப்படும் குல்லாய், எப்படி, எப்போது தோன்றியது என, குப்பண்ணாவிடம் கேட்டேன்.
'அது பற்றி காந்திஜியே சொல்லி இருக்கிறாரே... இதோ, அவர் மொழியிலேயே கேள்...' என, கூற ஆரம்பித்தார்:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அணியும் பல தலைப்பாகைகளைப் பற்றி சிந்திக்கலானேன். நம் உஷ்ண தேசத்தில், தலையின் மீது ஏதேனும் இருக்க வேண்டியது அவசியமே! வங்காளிகளும், தென்னக பிராமணர்களில் சிலரும் வெறுந்தலையாக இருந்த போதிலும், பெரும்பாலானோரான இந்தியர்கள், தலையின் மீது, ஏதேனும் அணியத்தான் செய்கின்றனர்.
பஞ்சாபி தலைப்பாகை அழகாக இருந்த போதும், அதற்கு அதிகத் துணி தேவைப்படுகிறது. மேலும், 'பக்டி' வியர்வையில் ஊறி, அசுத்தமாகி விடுகிறது.
குஜராத்திகள் அணியும் கூர்மையான மங்களூர் தொப்பிகள் பார்வைக்கு நன்றாக இல்லை. மகாராஷ்டிரத்தில், ஹங்கேரியன் தொப்பிகள், அதை விட நன்றாக இருந்த போதிலும், அவை தோலால் செய்யப்படுகின்றன. ஐக்கிய மாகாணத்திலும், பீகாரிலும் வழங்கும் மெல்லிய தொப்பிகள், தொப்பிகளே அல்ல; அவை, அழகாகவும் இல்லை.
இவை எல்லாவற்றையும் பற்றி ஆலோசித்ததில், இது நன்றாக இருப்பது தெரிய வந்தது. இது அழகாகவும், கைக்கு லேசாகவும் இருப்பதோடு, தயாரிப்பது சுலபமாகவும், துணியில் தைப்பது என்பதால், பெட்டிக்குள் வைக்கக் கூடியதாகவும் உள்ளது.
காஷ்மீர் தொப்பி, கம்பளத்தில் செய்யப்படுகிறது. நான், அதைப் பருத்தித் துணியில் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். பிறகு, நிறத்தைப் பற்றி ஆலோசித்தேன். எந்த நிறமாக இருந்தால், தலைக்கு எடுப்பாய் இருக்கும் என்று எண்ணிப் பார்த்ததில், ஒரு நிறமும், பிடிக்காமையால், கடைசியாக, வெள்ளை நிறமே எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்ததென்று எண்ணினேன். அதில், வியர்வை பட்டால் தெரியும், உடனே அதை கையால் துவைத்து விடலாம்; துவைப்பதும் சிரமமாக இருந்தது.
— என்று கூறியிருக்கிறார். என, என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார் குப்பண்ணா.
கீழ் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் அன்பர் ஷேக் அப்துல்லா; இவர், லாவோஸ் நாட்டில் வசிக்கிறார். பல தலைமுறைகளுக்கு முன்பே அவரது சந்ததியினர் அங்கு செட்டிலாகி, வியாபாரம் செய்து செழிப்பாக வாழ்கின்றனர்.
தமிழ் தொடர்பு விட்டுப் போகக் கூடாது என்பதற்காக, தமிழ் இதழ்கள் அனைத்தையும் வாங்கி, விமானம் மூலம் பெற்று படிக்கிறாராம்; 'நெட்'ல் படிப்பதையும் விரும்பவில்லையாம்!
அன்பர் ஷேக்கை, பல ஆண்டுகளாகத் தெரியும். உறவினர் ஒருவரின் திருமண வைபவத்திற்கு வந்திருந்த ஷேக், சென்னையில் என்னை சந்தித்தார்.
இதுவரை, நான், லாவோஸ் நாட்டிற்கு சென்றதில்லை. ஆனால், அதற்கு பக்கத்து நாடான தாய்லாந்து போயிருக்கிறேன்.
'பாய்... உங்க நாட்டுக்கு வர ஆவலாக உள்ளது. நாட்டைப் பற்றி சொல்லுங்களேன்...' என்றேன்.
அவர் சொன்னது இதோ:
இந்தியாவுக்கு, நேபாளம் எப்படியோ, அதே போல் தாய்லாந்துக்கு, லாவோஸ். ஆனால், இந்தியாவைப் போல், லாவோசை பரிவுடன் நடத்தவில்லை தாய்லாந்து; நூற்றுக்கணக்கான தடவை லாவோஸ் மீது போர் தொடுத்து, லாவோசின் விலை மதிக்க முடியாத பொருட்களை எல்லாம் அபகரித்துக் கொண்டது.
அப்படி லாவோஸ் பறிகொடுத்த ஒரு பொருள், எமரால்டினால் செய்யப்பட்ட பெரிய புத்தர் சிலை. இந்தியாவிலிருந்து கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் அபகரித்ததைப் போல், லாவோசுக்கு எமரால்ட் புத்தர் சிலை!
லாவோசில், ஆயிரக்கணக்கான புத்தர் கோவில்கள் உள்ளன; ஒரு கோவிலில், 10 ஆயிரத்து, 136 புத்தர் சிலைகள் இருக்கின்றன.
தலைநகர் வியங்காங்-கில், பல நூறு இந்தியர்கள் வசிக்கிறோம்; அனைவரும் கீழ் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம்கள்; எல்லாரும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறோம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் ஆங்கில நாளிதழ் வெளியாகிறது.
பிரான்சின் காலனியாக இருந்த லாவோஸ், 1975ல் சுதந்திரம் அடைந்தது. லாவோசை ஆண்ட ராஜாக்கள் தான், நாட்டின் இன்றைய வறுமைக்குக் காரணம் என்று, இன்றைய அரசு கருதுகிறது.
லாவோசை சுற்றிலும் நாடுகள் தான்; நிலத்தால் சூழ்ந்த நாடு இது. கடல் இல்லாத குறையைப் போக்க, பிரம்மபுத்திரா நதியைப் போன்று மேகாங்க் நதி - உங்களது.
இலங்கைத் தமிழர்கள் லாவோசில் அதிகம்; அதே போல், ஆயுதங்களும், சரளமாகக் கிடைக்கின்றன. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போருக்கு, இது ஒரு பாதுகாப்பான நாடாக இருக்கிறது.
லாவோஸ் பற்றி மற்றொரு சுவாரசியமான விஷயம்... - உலகத்திலேயே அதிகமான குண்டுகள் இந்த நாட்டில் தான் போடப்பட்டிருக்கின்றன.
வியட்நாம் போரின் போது, அமெரிக்க வீரர்கள், ரிகர்சல் மாதிரி, லாவோசில்தான் முதலில் குண்டுகளைப் போட்டுப் பார்த்தனர். ஒரு லாவோஸ் பிரஜைக்கு, 1.5 டன் குண்டு வீதம் போடப்பட்டிருக்கிறது!
இவ்வளவு ஆகியும், டூரிஸ்ட்களின் சொர்க்கப் பூமியாகவே காட்சி அளிக்கிறது லாவோஸ்.
— இப்படிச் சொல்லி ஆவலைத் தூண்டி விட்டார் அன்பர். லாவோஸ் சென்று விட வேண்டியது தான் என, தீர்மானித்துக் கொண்டேன்.
அந்த நேரத்தில், 'மொபைல்' அழைப்பு... ஆபிசிலிருந்து, 'என்னப்பா... இன்னும் டீ வாங்கிட்டு வரலையா...'அடித்து, பிடித்து ஒடினேன்!
