தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

கேலி பேசி வாங்கிக் கட்டாதீர்!

சமீபத்தில், மின்சார ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பார்வை தெரியாத பெரியவர் ஒருவர், டி.எம்.எஸ்., குரலில், பழைய பாடல்களை, அசத்தலாய் பாடி, கையேந்தி வந்தார். அவரது குரல் வளத்தில் சொக்கிப்போன பயணிகள், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என, அவரவர் விருப்பம்போல் வழங்கினர்.

அப்போது, போதையிலிருந்த சில இளைஞர்கள், 'ஹலோ பிளைண்ட்... இந்த பாட்டை, எந்த, 'கிளையன்டுக்கு டெடிகேட்' செய்ய விரும்புறீங்க...' என, கேட்டு, அவரைக் கலாய்த்தனர்.

இதைக் கேட்ட அந்த பெரியவர், 'ஊனத்தை கிண்டல் செய்யும், சில ஈனப்பிறவிகளுக்கு, 'டெடிகேட்' செய்ய விரும்புறேன்...' என, நெத்தியடியாக கூற, கூனிக் குறுகிப்போன அந்த இளைஞர்கள், 'கப்சிப்' ஆகி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, 'எஸ்கேப்' ஆகிவிட்டனர்.

மாற்றுத் திறனாளிகளை, பரிகாசம் செய்ய, எப்படித்தான் இவர்களுக்கு மனம் வருகிறதோ?

— சுமதி பாபு, சென்னை.

வித்தியாசமான விருந்து!

நண்பர் ஒருவரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். விழாவிற்கு, இரண்டாயிரம் பேர் வந்திருப்பர்.

திருமண மண்டபத்திற்குள் நுழையும்போதே, எத்தனையாவது பந்தியில், விருந்து உண்ண வேண்டும் என்பதை, எண்ணால் குறிப்பிட்டு, அழகிய அட்டை ஒன்றைக் கொடுத்தனர். அந்த அட்டையின் பின்பக்கம், சில, பொது அறிவு கேள்விகளும், மருத்துவக் குறிப்பும் இடம் பெற்றிருந்தன.

விழாவிற்கு குறித்த நேரத்திற்கு முன் வந்தவர்கள், முதல் பந்தியில் சாப்பிட டோக்கன் பெற்றிருந்தனர். ஒவ்வொரு பந்தியிலும், ௪௦௦ பேர் வரை மட்டுமே சாப்பிட முடியும் என்பதால், அடுத்தது, எந்த எண் கொண்ட பந்தி நடைபெறுகிறது என்பதை, அறிவிக்கவும் செய்தனர்.

அவசர வேலை இருப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் டோக்கனை மாற்றிப் பெற்று, முதலில் சாப்பிட்டுச் சென்றதையும் பார்க்க முடிந்தது. விழாவில், விருந்துக்கான டோக்கன் கொடுத்தது வித்தியாசமாக இருந்தது. சாப்பிடுபவர்களின் பின்புறம் நின்று, சாப்பிடுபவர்களை, 'டென்ஷன்' படுத்துவதாக இல்லை. தள்ளு முள்ளும் ஏற்படவில்லை; பந்தி அமைதியாக நடந்தது.

விழாக்களின் போது, விருந்தில் விவேகமாகச் செயல்பட விரும்புபவர்கள், இதுபோன்ற யுக்திகளைக் கடைப்பிடிக்கலாம்!

— ரா.ரமணன், திண்டுக்கல்.

திருமணம் என்பது சிறையல்ல!

உறவினர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு மணமக்களை வாழ்த்தி, அவர்களுடன் மேடையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வந்த மணமகனின் நண்பர்கள், 'நண்பா... நல்லா வசமா மாட்டிகிட்டியா... இந்த ஜெயில்ல, இனி, உனக்கு கடைசி வரைக்கும், ஜாமினே கிடைக்காது போ...' என, கலாய்த்தனர்.

இதைக் கேட்ட மணமகள், 'திருமணம்ங்கறது ஒரு ஆண், பெண்ணுகிட்ட மாட்டிக்கற விஷய மில்லை... அரை மனிதனா திரியுற ஆணை, ஒரு முழு மனிதனா மாற வைக்கப் போற நிகழ்ச்சி. திருமணம் தான் ஒரு ஆணுக்கு மரியாதையையும், குடும்பஸ்தன் என்ற கவுரவத்தையும் தருது; சொந்தம் பந்தத்துகிட்டயும், சமுதாயத்துல அந்தஸ்தையும் தருது. திருமணத்துக்குப் பின், குடும்பப் பொறுப்பும், சந்ததிகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கணும்கற பொறுப்பும் வருது. அதுக்கு உறுதுணையாக இருந்து நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கற பங்குதாரிதான் மனைவி. இப்படிப்பட்ட உயர்ந்த இலக்கைத் தேடி, பயணம் போற எங்களை, வாழ்த்தி, வழியனுப்பவர்ற நீங்க, 'ஜெயில்ல மாட்டிகிட்டியே'ன்னு கொஞ்சமும் பொருத்தமில்லாத, கொச்சையான விமர்சனங்களை செய்யலாமா?' எனக் கேட்டாளே பார்க்கலாம்.

நண்பர்கள் பதில் சொல்ல இயலாது, பந்தியை நோக்கி நடையைக் கட்டினர். அந்தப் புதுமை மணப்பெண்ணை, அனைவரும் மனதாரப் பாராட்டினோம்.

— ஜக்கி, இடையர்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us