தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 16, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிசு கொலையா... வேண்டாம்!

சமீபத்தில், மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரிடம், ஒரு பெண், 'என் முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட முடியல; அதற்குள், மறுபடியும் மூன்று மாத கர்ப்பமாக இருக்கேன். அடுத்த குழந்தை இப்போ வேண்டாம்ன்னு நானும், என் கணவரும் முடிவெடுத்திருக்கோம். அதனால, என் கருவை கலைக்கணும்...' என்றாள்.

அதற்கு மருத்துவர், 'நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கிறீங்களா?' எனக் கேட்டார். அந்தப் பெண்ணும், 'சொல்லுங்க டாக்டர், கேட்குறேன்...' என்றதும், 'ஒரே நேரத்தில உன்னால ரெண்டு குழந்தைய கவனிக்க முடியாதுங்கிறதால, வயித்துல இருக்குற கருவை கலைக்கச் சொல்றே... அப்படிச் செஞ்சா உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதற்கு பதில், நான் ஆப்ரேஷன் செய்யற கத்திய தர்றேன்; உன் கையில் உள்ள ஒரு வயசு குழந்தைய நீயே கொன்று விடு; கருவில இருக்குற குழந்தை நல்லா வளரட்டும்...' என்றார் மருத்துவர்.

இதைக் கேட்டதும் அப்பெண் பதறி, 'என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க... என் குழந்தைய நான் எப்படி கொல்றது...' என்றாள்.

'அப்ப, நான் மட்டும் கருவில் இருக்குற உன் குழந்தைய கொல்லணுமா... ஒரு குழந்தைய கொல்ல முடிவெடுத்த பின், பிறந்தத கொன்றா என்ன, பிறக்கப் போறத கொன்றால் என்ன?' என்று நெத்தியடியாக கேட்டார் மருத்துவர்.

மருத்துவரிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத அப்பெண் வெட்கி, தலைகுனிந்தாள்.

பின் மருத்துவரிடம், 'என்னை மன்னிச்சிடுங்க டாக்டர்... எனக்கு ரெண்டு குழந்தைகளும் வேணும்...' என்று சொல்லி, அங்கிருந்து நடையை கட்டினாள்.

— கே.கொங்கேஸ்வரன், காரைக்குடி.

எங்கே போகின்றனர்?

சமீபத்தில், ஒரு தனியார் தொலைக் காட்சியில் அப்பாக்களும், மகள்களும் பங்கு பெற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில், கலந்து கொண்ட பெண் ஒருத்தி, 'கோபம் வந்தால் கெட்ட வார்த்தை பேசுவேன்...' என்று கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவளைத் தொடர்ந்து பேசிய சில பெண்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கெட்ட வார்த்தைகளை பேசி, நம்மை மேலும் அதிர்ச்சியடைய செய்தனர். ஒரு பெண் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்று கூற, அந்த தனியார் தொலைக்காட்சி, 'பீப்' ஒலி எழுப்பி, நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு அந்நிகழ்ச்சி மோசமாக இருந்தது.

சில இளம் பெண்கள், 'அப்பா பேச்சை கேட்க மாட்டேன்; தான் விரும்பும் நபரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று கூறி, அப்பாக்களின் முகத்தில் கரியைப் பூசினர்.

நாகரிகம் என்ற பெயரில் கெட்ட வார்த்தை பேசியதோடு, பொது இடத்தில் அப்பாக்களின் முகத்தில் கரியை பூசும் விதமாக அப்பெண்கள் நடந்து கொண்ட விதம், மிகுந்த வருத்தத்தை அளித்தது. இளம் பெண்களே... உடையில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதாது; வார்த்தைகளிலும், செயலிலும் இருக்க வேண்டும்.

— ஜெ.கண்ணன், சென்னை.

இளம் தலைமுறையினருக்கு ஒரு சபாஷ் !

வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடியது பற்றி பத்திரிகைகளில் படிக்கிறோம். நாமும் பண்டிகையின் போது, வேற்று மதத்தவரை நம் வீட்டுக்கு அழைத்து, விருந்தில் கலந்து கொள்ள செய்கிறோம்.

சமீபத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளைஞர், தீபாவளியின் போது தன்னைப் பெரிதும் கவர்ந்த விஷயமாக, 'பேஸ்புக்'கில் (முகநூலில்) எழுதியது இது:

அந்த அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்த பகுதியில், நண்பர்கள் சிலர் ஒன்று கூடி ஆர்வத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், 5,000 ஆயிரம் வாலா வெடி வெடிக்கத் தயாராகிய போது, அவர்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மசூதியில் தொழுகை நடைபெறுவதற்கான, பாங்கு ஒலி, ஒலி பெருக்கி மூலம் ஒலிக்க ஆரம்பித்தது. உடனே இவர்கள் வெடிப்பதை நிறுத்தி விட்டனர். அவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைவருமே பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். தொழுகை நடைபெறும் நேரம், (கிட்டத்தட்ட

10 நிமிடம்) அங்கு பூரண அமைதி நிலவியது. தொழுகை முடிந்த உடனே எல்லாரும் வெடித்துக் தள்ளியிருக்கின்றனர்.

மற்ற மதத்தினர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் இந்த சம்பவத்தை, நிறைய பேர் விரும்பி பாராட்டி, 'லைக்' போட்டிருந்தனர்.

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இச்செயலை நினைத்து, பெருமையாக இருந்தது. இம்மாதிரி தகவல்களை வெளியிடுவதால், யாரும் அறியாமையால் கூட மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி விடாமல் இருக்க உதவும்.

மீனலோசினி பட்டாபிராமன், விருகம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us