தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மனப்பயணம்!

மனப்பயணம்!

மனப்பயணம்!


PUBLISHED ON : நவ 16, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ.,17- ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்

எது அடங்கினாலும், மனம் மட்டும் அடங்க மறுக்கிறது; மனம் அடங்க மறுப்பதால், நம் மன அகங்காரங்கள் எல்லாம் ஆட்டம் போடத் துவங்கி விடுகிறது. அதனால்தான் மனதை அடக்குபவனே, ஆன்மிக வாழ்வுக்கு தகுதியானவன் என்று கூறுகின்றனர். இந்த மன அடக்கப் பயிற்சிக்கான பயணமே, சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை.

ஆட்காட்டி விரலை, பெரு விரலுடன் சேர்த்து, மற்ற மூன்று விரல்களையும் உயரே தூக்கி சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பார் ஐயப்பன். இந்த சின்முத்திரையின் தத்துவம் ஆணவம், (அகங்காரம்) கன்மம், (பாவ, புண்ணியங்களால் விளையும் பயன்கள்) மாயை (இந்த உலக வாழ்வு நிரந்தரம் என நினைக்கும் குணம்) என்ற மூன்றையும், தூக்கிய விரல்கள் குறிப்பிடுகின்றன. ஆட்காட்டி விரல் ஜீவாத்மா; அதாவது, நாம். பெருவிரல் கடவுள்; அது ஐயப்பன். 'ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் விட்டு விட்டால், நீ என்னை அடையலாம்...' என்பதே இந்த முத்திரை உணர்த்தும் தத்துவம்.

ஆனால், இது முடிகிறதா என்றால், இல்லை. மனிதனுக்கு, தான் என்ற ஆணவம், அவனது கஷ்ட காலத்தில் அடங்குகிறதே தவிர, அந்தக் கஷ்டம் நீங்கியதும் உடனே தலை தூக்கி விடுகிறது. பாவத்தால் மட்டுமே விளைவுகளை அனுபவிக்கிறோம் என்பதில்லை. புண்ணியம் செய்யும் போது, நம் மனதில் ஏற்படும், 'நான் செய்கிறேன்' என்ற ஆணவத்தாலும், சில பாவங்கள் நம்மை தொற்றிக் கொள்வது உண்டு.

அதனால், 'நாம் தானம் செய்தோமே, பிறரிடம் கருணையுடன் நடந்து கொண்டோமே... இதனால், நமக்கு புண்ணியம் சேர்ந்திருக்குமே...' என்றெல்லாம் எண்ணக்கூடாது. அந்த புண்ணியத்தின் பலனையும், யாரொருவன் கடவுளுக்கே சமர்ப்பணம் செய்கிறானோ அவனே இறைவனுடன் கலக்க முடியும்.

மகாபாரதத்தில் ஒரு காட்சியில், தர்மரிடம், யட்சன், 'உலகத்திலேயே அதிசயமானது எது?' என்று கேட்டான்.

அதற்கு, 'ஒருவன் இறந்து போனதை பார்க்கும் இன்னொருவன், தானும் ஒருநாள் இறந்து போவோம் என்பதை நம்ப மறுப்பது தான்...' என்று கூறினார் தர்மர். இது, உலக வாழ்வு நிலையென்று நினைக்கும் அறியாமை கொடுக்கும் மாயை.

நாம் சம்பாதித்த வீடு, வாசல், மனைவி, மக்கள், கணவன், பிற சொத்துக்கள் எதுவும் நிச்சயமில்லை; மரணம் மட்டுமே நிச்சயம். அப்படி யிருந்தும், மனிதன் ஆட்டம் போடுகிறான். இந்த உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால், மனதை அடக்கி தியானம் செய்ய வேண்டும். அந்த மன அடக்கப் பயிற்சியே சபரிமலை யாத்திரை. அதிகாலை எழுவது, குளிர்ந்த நீரில் நீராடுவது, பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பது, எளிய உணவுகளை உண்பது போன்ற பயிற்சிகள் மனதை அடக்குவதற்கான முதல் காரணி.

ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று, திரும்பும் யாத்திரையை, 'மடக்கு யாத்திரை' என்பர். 'மடக்கு' என்றால், ஒடுக்குதல். சபரிமலை ஐயனிடம், நம் அகங்கார எண்ணங்களை ஒப்படைத்து, தன்னையே ஒடுக்கிக் கொண்டு திரும்ப வேண்டும். மீண்டும் ஆணவம் தலைதூக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது புரிந்து கொண்டீர்களா... சபரி மலைக்கு பயணப்பட வேண்டியது நம் உடல் அல்ல; மனம் என்பதை!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us