தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திறமைதான் நமது செல்வம்!

நானும், என் தோழியும் பிரபல பேக்கரியில் பணிபுரிந்து வந்தோம். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனரான தோழியின் கணவர், மாரடைப்பால் இறந்து போனார். அதனால், பேக்கரி நிறுவனத்தார், ' கணவனை இழந்தவர்களை இங்கு வேலையில் வைத்துக் கொள்ள மாட்டோம்...' என, அவளை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனர். தோழிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளதால், அவர்களை வளர்ப்பதற்கும், படிக்க வைப்பதற்கும் அவள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை.

இச்சூழ்நிலையில், தோழிக்கு, ஒரு யோசனை தோன்றியது. அருகில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று, தற்போது தன் கணவரின் ஆட்டோவை ஓட்டுகிறாள். காலை, மாலை வேளைகளில் பள்ளி சவாரியும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில்களுக்கும், விடுமுறை நாட்களில் தியேட்டருக்கு சவாரி செல்வதும், ஓய்வு நேரங்களில் கூடை பின்னுவது என, பல்வேறு வேலைகளை செய்து கடுமையாக உழைத்து, தற்போது நன்றாக சம்பாதித்து, வாழ்க்கையில் முன்னேறி வருகிறாள்.

அத்துடன் தன் ஆட்டோவில், 'கணவனை இழந்தோருக்கு இலவசம்...' என்று எழுதியுள்ளதுடன், 'கணவனை இழந்த பெண்களே... வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காதீர்; நீங்களும் திறமையானவர்கள்...' என்ற வாசகத்தையும் எழுதி வைத்துள்ளாள்.

கணவனை இழந்து விட்டோமே... இனி என்ன செய்யப் போகிறோம் என கலங்கி, வீட்டிற்குள் முடங்கிப் போகாமல், தன் திறமையால், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டும் தோழியை, இப்போது அப்பகுதியினர் அனைவரும் பாராட்டுகின்றனர்.

கணவனை இழந்தோர்களே... உங்களுக்குள்ளும் திறமை இருக்கிறது; திறமைகளை புதைக்காமல், உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்

திகழுங்கள்.

கே. முருகேஸ்வரி, காரைக்குடி.

கர்ப்பிணி பெண்களுக்கு அழகு நிலையம் தேவையா?

நிறைமாத கர்ப்பிணியான நண்பரின் மனைவிக்கு, வளைகாப்பு நடத்த நண்பரின் வீட்டில் ஏற்பாடு செய்தனர். வளைகாப்பு அன்று அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, நண்பரின் மனைவி அழகு நிலையம் சென்றார்.

அங்கு அவருக்கு ஒப்பனை செய்த பெண், நண்பரின் மனைவியை நாற்காலியில் நன்றாக சாய வைத்து ஒப்பனை செய்திருக்கிறார். இதனால், அன்று மாலையே, அவருக்கு பிரசவ வலி வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்,'ஏடாகூடமாக நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்ததால், தொப்புள்கொடி, குழந்தையின் கழுத்தில் சுற்றியிருக்கிறது, சிக்கல் தான்...' என்று கூறினார். அதன்பின், மருத்துவர்களின் பெரும் முயற்சியால், பிரசவம் நல்லபடியாக முடிந்தது.

வளைகாப்பு செய்து கொள்ளும் பெண்கள், அழகு நிலையங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது நல்லது!

- ஜெ.கண்ணன், சென்னை.

அக்கா கல்யாணம்!

என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பந்தி நடக்குமிடத்தில், ஒரு சிறுவன் இலை போட்டுக் கொண்டு இருந்தான். அவனிடம், 'பள்ளிக்குச் செல்லவில்லையா... ஏன் இந்த வேலைக்கு வந்தாய்...' என்று கேட்டேன்.

அதற்கு அவன், 'எனக்கு அண்ணனும், அக்காவும், வயதான அம்மாவும் இருக்கிறாங்க. எங்க அப்பா இறந்த பின், குடும்ப பொறுப்புகளை ஏற்க, அண்ணன் மறுத்து, அண்ணி வீட்டிற்கே போய்விட்டார். அதனால், என் அக்கா தான் வேலைக்கும் போய், என்னையும் படிக்க வைத்து, குடும்பத்தையும் பாத்துக்கிறாங்க.

'எங்க அக்காவோட கல்யாணத்திற்காகவும், அவரோட கஷ்டத்த கொஞ்சம் குறைக்கலாம்ன்னு தான் விடுமுறை நாட்களில், அக்காவிற்கு தெரியாமல், இது போன்ற வேலைக்கு வருகிறேன். விரைவில், சம்பாதித்து அக்காவிற்கு திருமணம் செய்து வைப்பேன்...' என்று அவன் கூறியதும், என் கண்கள் கலங்கி விட்டன.

அந்த சிறுவனின் பொறுப்புணர்ச்சியை பாராட்டிவிட்டு வந்தேன்.

ஆர்.அருள்மொழி, கடலூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us