தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (13)

கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (13)

கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (13)


PUBLISHED ON : டிச 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவனாக இருந்த போது ஒடிந்து விழுவது போலத்தான் இருப்பேன். உடலில் சதை அதிகம் இருக்காது. முகத்தில் பெரிதாக விழிகள் மட்டும் தான் இருக்கும். இந்த விழிகளைப் பார்த்துத்தான், 'மூக்கும், முழியும் பையனுக்கு நன்றாக இருக்கிறது...' என்று கூறி, நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டனர்.

கம்பெனியில் எங்கள் ஆசிரியர் சின்ன பொன்னுச்சாமி பிள்ளை என்னை பார்த்து, 'பையன், குறுகுறுன்னு இருக்கான்; நல்ல முழிகள் இருக்கு...' என்று சொல்லி, கிருஷ்ணர் வேஷத்தைத் தான் முதலில் கொடுத்தார். அடுத்தபடியாக சூர்ப்பனகை வேஷத்தை அளித்தார்.

'கண்களால் தான் நிறைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். இப்படிப்பட்ட வேஷங்களைக் கொடுத்தால் நன்றாகச் செய்வான்...' என்று அப்போது, அவர் நினைத்தார். தவிர, அவ்வப்போது என்னை அழைத்து, 'நடிக்கும்போது நல்லா கண்ணை உருட்டிப் பாரு...' என்பார். நானும் கண்களை விரித்து, அப்படி இப்படிப் பார்த்து, கரகோஷம் வாங்குவதும் உண்டு.

ஆனால், இம்மாதிரி தேவைப்படும் போது, தேவைப்படும் அளவுக்கு, உணர்ச்சிகளைக் கொட்டவும், அதற்கேற்ப உடலின் அங்க, அவயங்களை உபயோகிக்கவும், பல நாள் பயிற்சி பெற வேண்டும். எடுத்த எடுப்பிலேயே வந்து விடாது.

எந்த வேடமானாலும், அதை, அவன் பல முறை தன் மனத்திற்குள் எண்ணிப் பார்க்க வேண்டும். கற்பனையில் அப்பாத்திரத்தை உருவகப்படுத்தி, வாழ்க்கையில் அந்தப் பாத்திரங்களைப் போல் அவன் சந்தித்தவர்களை எண்ணிப் பார்த்து, மனக்கண் முன் கொண்டு வர வேண்டும்; பின், அம்மாதிரி நடிக்க கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிக்க வேண்டும். இந்த மாதிரியான பயிற்சி தான் ஒத்திகை.

பல் துலக்கும் போதும், முக சவரம் செய்து கொள்ளும் போதும், குளிக்கும் போதும் எப்படி முகபாவங்கள் மாறுகின்றன என்பதை யெல்லாம் ஒரு நடிகன் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

ஏனெனில், அவனுக்கு அந்த உணர்ச்சிகளையும், பாவங்களையும் காட்டக்கூடிய சந்தர்ப்பம் எந்தக் கட்டத்திலும், எந்தப் படத்திலும் வரலாம். இதற்கெல்லாம் தனித்தனியாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா!

எந்த ஒரு நடிகனுக்கும் தன் வேடத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க, அமைதியான சூழ்நிலை முக்கியம்.

தனிமையில், அமைதியாக இருக்கும் போது தான், தான் நடிக்கவிருக்கும் வேடம் குறித்து உருவகப்படுத்திப் பார்க்க முடியும்.

ஒரு எழுத்தாளனுக்கு தனிமை எப்படி முக்கியமோ, அது போலவே நடிகனுக்கும் முக்கியம்.

பெரும்பாலும் குளியல் அறையில் தனிமையில் இருக்கும்போது தான், அன்று செய்ய வேண்டிய வேடத்தைப் பற்றி சிந்திப்பேன்; என் மனத்திற் குள்ளேயே, பல முறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன்.

இது என் வேலையை சுலபமாக்கி விடும்.

'ஆள் பாதி ஆடை பாதி' என்பர்.

வெறும் வேடம் மட்டும் நடிகனுக்கு உதவாது; வேடத்திற்குப் பொருத்தமான உடை அணிய வேண்டும். ராஜா வேடம் போட வேண்டுமானால், பட்டாடை அணிந்து, தலையில் கிரீடம் வைத்துக் கொள்ள வேண்டும். அரக்கன் வேடம் என்றால், மீசை கண்டிப்பாக இருக்க வேண்டும். நடிக்கும் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கு ஏற்றபடி, உடை அணியவும் தெரிந்திருக்க வேண்டும்.

வேடம், உருவம், உடை மூன்றும் இருந்தால் போதாது; போட்டிருக்கும் வேடத்திற்கேற்ற உணர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.

நடிகனின் பணி அப்போது தான் முற்றுப் பெறுகிறது.

கப்பலோட்டிய தமிழன் படத்தில், ஒரு காட்சி. வ.உ.சி.,க்கு, 60 வயது ஆகிவிடுகிறது; இதற்காக, 60 வயது கிழவனைப் போல நான், 'மேக்-அப்' போட்டுக் கொண்டேன். வ.உ.சி.,யிடம் அவரது நண்பர் ஒருவர் வந்து, பாரதியார் இறந்து விட்டதாகச் சொல்வார். அதைக் கேட்டதும், வ.உ.சி., 'ஓ'வென்று கதறி அழ வேண்டும். அஞ்சா நெஞ்சம் படைத்த வ.உ.சி.,யையே கலங்க வைத்து விட்ட இந்தக் காட்சியில் சிறப்பாக நடிக்க வேண்டும்.

வைர நெஞ்சம் படைத்த வ.உ.சி., எப்படி அழுதிருப்பார், இந்தக் கட்டத்தில் நான் எப்படி நடிக்க வேண்டும், எப்படி நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்பது பற்றி இரண்டு, மூன்று நாட்கள் யோசித்தபடி இருந்தேன். வெறுமே கதறி அழுது நடித்தால் மட்டும் போதாது; உண்மையான உணர்வு வர வேண்டும். இதை எப்படிக் கொண்டு வருவது?

அரும்பாடுபட்டேன்; எப்படி எப்படி யெல்லாமோ சிந்தித்து பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. படப்பிடிப்பு தினம் வந்தது; செட்டுக்குள் வந்து விட்டேன். நான் நடிக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது. கேமராவுக்கு முன்னால் போய் நிற்கிறேன்...

நான் எதிர்பார்த்த, மனதில் உருவகப்படுத்திக் கொண்ட பாவம் வரவேயில்லை.

கேமரா ஓடிக் கொண்டே இருக்கிறது... கேமரா ஓடிக் கொண்டிருக்கிறதே என்று நினைத்தேன். திடீரென்று, என்னையும் அறியாமல் ஒரு வெறி, வேகம்... எங்கிருந்தோ உணர்ச்சி பொங்கி வந்தது. நான் தான் அதைக் கொட்டி நடித்தேன் என்று சொல்ல முடியாது. கடவுள் தான் அப்போது எனக்கு உதவி செய்தார் என்று சொல்வேன்.

காட்சி முடிந்தது; கேமரா நிற்கவில்லை. 'கட்' என்று சொல்ல, டைரக்டராலும் முடியவில்லை; காரணம், அவரும் அழுது கொண்டு இருந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

வேடத்தைப் பற்றியும், காட்சியைப் பற்றியும் நடிக்கப் போகும் முன், கூடுமான வரை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. நடிகனும் ஒரு மனிதன். அவனுக்கும் அன்றாடப் பிரச்னைகள், கடமைகள், ஆசாபாசம், சொந்த அலுவல்கள் உண்டு. வீட்டை விட்டு இறங்கி, 'மேக்-அப்' அறைக்குள் நுழைந்தால், அவன் வீட்டை மறந்து, தன் கதாபாத்திரத்தைப் பற்றியே நினைக்க வேண்டும். அதேசமயம், தன்னை மறந்து விடவும் கூடாது. இதை ஒரு உதாரணம் சொல்லி, விளக்குகிறேன்.

பாசமலர் படத்தின் கடைசி காட்சி!

'கை வீசம்மா கை வீசு...' என்று உணர்ச்சிகரமாக பாடியபடி நானும், சாவித்திரியும் நடிக்க வேண்டும். டைரக்டர் பீம்சிங் காட்சியை விளக்கி, 'உணர்ச்சி முழுவதையும் கொட்டி நடிக்க வேண்டும்...' என்று சொன்னார். அவர் சொன்னது ரொம்ப அழகாகவும், விளக்கமாகவும் இருந்தது.

ஆனாலும், 'எப்படி நடித்தால் நன்றாக இருக்கும்...' என பலவாறு சிந்தித்தும், தெளிவான உருவம் கிடைக்கவில்லை. நானும், சாவித்திரியும் நடிக்க ஆரம்பித்தோம். கப்பலோட்டிய தமிழன் படத்தில் வ.உ.சி., கதறி அழும் கட்டத்தில் வந்தது போல, கடைசி நிமிடத்தில் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களை மறந்து, கேமராவை மறந்து, என் பக்கத்திலிருந்த சாவித்திரியையும் மறந்து, 'எனக்கும் இப்படி ஒரு தங்கை இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலை வந்தால், எப்படி இருக்கும்...' என்ற எண்ணம் வந்தபோது தான், அந்த உணர்ச்சி பொங்கிப் பீறிட்டு வந்தது.

சாவித்திரியும், நானும் நடித்து முடித்தோம். சாவித்திரி அழுகையை நிறுத்த, ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.

அவ்வளவு தூரம் நெகிழ்ந்து இருந்தார்.

தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன், நன்றி 'பொம்மை'

விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us