PUBLISHED ON : டிச 28, 2014

டில்லி நிருபர் அவர்; வட மாநிலக்காரர் என்றாலும், ஐயப்ப பக்தி மிக்கவர். மாலை போட்டு விரதமிருந்து, ஆண்டுதோறும் சபரிமலை செல்பவர். இந்த ஆண்டும் மலைக்கு போகுமுன் சென்னை வந்த அவர், என்னையும், லென்ஸ் மாமாவையும் சந்தித்தார்.
முன்பு நடந்த ஆப்கன் போரைப் பற்றி, அங்கு சென்று வந்த, உடன் பணியாற்றும் பத்திரிகையாளரின், அனுபவங்களை விவரித்தார்.
இப்போது பாகிஸ்தானில் அகதியாக வசிக்கும், ஆப்கன் பெண்மணியின் அனுபவம் கொடுமையானது. அப்பெண், சொன்னது இது:
தலிபான்களின் ஆட்சியின் போது, சரியாக உடை அணியவில்லை என்பதற்காக, 20 சவுக்கடி எனக்கு கொடுக்கப்பட்டது. அதன் தழும்புகள் என் முதுகில் இப்போதும் இருக்கின்றன.
இந்த சவுக்கடித் தழும்புகள் இல்லாத பெண்ணை, நீங்கள் ஆப்கனில் பார்க்க முடியாது. தலிபான் சொல்லியிருந்த படிதான் புர்கா அணிந்திருந்தேன். ஆனால், என் மணிக்கட்டு தெரிந்து விட்டது என்பதற்காக, சாலையில் என்னை நிறுத்தி சவுக்கால் அடித்தனர். அதோடு அவர்கள் என்னை விடவில்லை; அதற்கு மேல் நடந்ததை உங்களுக்கு சொல்ல இயலாது.
- இப்படிச் சொன்ன பெண்ணின் வயது, 40.
ஆப்கனில் பெண்களின் கல்விஅறிவு வெறும், 4 சதவீதம் மட்டுமே! பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தலிபான் தடை செய்து விட்டது.
உடல்நிலை சரியில்லாத பெண்கள், ஆண் மருத்துவர்களிடம் செல்வதும் தடை செய்யப்பட்டது. பெண் மருத்துவர்களோ பிராக்டிஸ் செய்வதற்கு தடை. இந்நிலையில், பெண்களின் கதி என்ன? ஜுரம் வந்தால் கூட, கவனிக்க யாருமின்றி, ஜன்னி கண்டு இறந்தனர் பெண்கள். கர்ப்பிணிகளின் நிலையோ சொல்லவே தேவையில்லை.
நோய் வந்த பெண்ணுக்கு, ஆப்கனில் உயிர் வாழ எந்த வாய்ப்பும் இல்லை. நோய் முற்றி இறக்க வேண்டியதுதான்.
பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்வதற்கும் தடை. அதனால், விதவைப் பெண்கள் வேலை எதுவும் செய்ய முடியாமல் பட்டினியால் இறந்தனர்.
இதனால், ஆப்கன் தெருக்களில் நிறைய பெண்கள் பிச்சை எடுப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம். (நல்ல வேளை, பிச்சை எடுப்பது தடை செய்யப்படவில்லை!)
பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்களில் பலர், போருக்கு முன் ஆசிரியைகளாகவும், நர்சுகளாகவும் இருந்தவர்கள். பெண்களுக்கான பள்ளிகளும், மருத்துவமனைகளும் மூடப்பட்டு விட்டதால், அங்கு பணியாற்றிய பெண்கள், பிச்சைக்காரிகளாக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது மட்டுமல்ல, பெண், சத்தம் போட்டு சிரிக்கக் கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே வந்தால் அவளுடன் சகோதரனோ, கணவனோ, தகப்பனோ உடன் வர வேண்டும். ஆனால், அநேகமாக அவர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டிருப்பர். வெளியே சம்பந்தமில்லாமல் சுற்றித் திரியக் கூடாது. நடக்கும் போது செருப்புச் சத்தம் கேட்கக் கூடாது.
இதில், ஏதாவது ஒன்று நடந்தால் கூட, தெருவில் நிற்க வைத்து பிரம்படி கொடுப்பர். பிரம்பு என்றால் மெல்லிய பிரம்பு அல்ல; கிரிக்கெட் பேட் அளவுக்கு செய்த தோல் பிரம்பு.
மேற்சொன்ன காரணங்களால், ஆப்கனில் உள்ள, 99 சதவீத பெண்கள் மன நோயாளிகளாக ஆகிவிட்டனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஆனால், போருக்கு முன் பெண்களின் நிலை எப்படி இருந்தது தெரியுமா? ஆசிரியர் வேலையில்,- 70 சதவீதம்; மருத்துவர், 40 சதவீதம்; அரசு வேலை,- 50 சதவீதம் பெண்கள் இருந்தனர். பெண்கள், அப்போது பாராளுமன்றத்திலும், ராணுவத்திலும், கூட இருந்தனர்.
பெண்கள் மீது போடப்பட்டுள்ள உத்தரவுகளைப் பாருங்கள்:
அவர்கள் அணியும் புர்கா, சாக்கு போன்று கனமாக இருக்க வேண்டும். இதை உடம்பு முழுவதும் - கை மணிக்கட்டு கூட தெரியாமல் -போட்டுக் கொண்டு பாலைவன வெயிலில் நடப்பதை கற்பனை செய்து பாருங்கள்!
சாலையின் ஓரத்தில்தான் நடக்க வேண்டும்; சிரிக்கவோ, வளையல் அணியவோ கூடாது; வாசனை திரவியம் பூசக் கூடாது; இடுப்பை அனாவசியமாக ஆட்டி நடக்கக் கூடாது; வீட்டுக்கு வெளியே யாரிடமும் பேசக் கூடாது.
- இவை, அகதிப் பெண் கூறியது!
நாய்களை விடக் கேவலமாக பெண்களை நடத்திய மூடர்கள். பெரும்பாலும் ஒழிந்து விட்டதை எண்ணி பெருமூச்சு விட்டேன்.
வாசகர் ஒருவர், ரிட்டயர்டு பார்ட்டி என்றாலும் குசும்பு, குறும்பு தாண்டவமாடும் இளைஞர். அவர் சொன்ன ஜோக் இது:
ஒரு அலுவலகத்தில் அதன் நிர்வாகி, தன் சிப்பந்திகள் லீவு கேட்டால் கொடுக்காமல், சமாதானமாக பேசி, லீவு தராமல் வேலை பார்க்க வைத்து விடுவார்.
தலைவலி என்று லீவு கேட்டால், 'எனக்கும் தலைவலி தான். தைலம் தடவிட்டு ஆபீசுக்கு வரலையா? போய் வேலையப் பார்...' என்பார். தாயாருக்கு உடம்பு சரியில்லை, மருத்துவ மனையில் சேர்க்கணும் லீவு வேண்டும் எனக் கேட்டால், 'எங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம இருந்த போது, சீக்கிரமாக மருத்துவமனைக்கு போய் அவரை, 'அட்மிட்' செய்துட்டு, லீவு போடாம ஆபீசுக்கும் வந்தேன். அதுபோல் செய்; போ...' என்பார்.
'மனைவிக்கு பிரசவ நேரம், கூட இருக்கணும்...' என்று லீவு கேட்டால், 'என் மனைவியோட பிரசவ நேரத்துல லீவு போடாமல், அவளுக்கும் உதவியாக இருந்து, ஆபீசுக்கும் வந்தேன். அதுபோல பர்மிஷன் போட்டுட்டு போ... லீவு கிடையாது...' என்பார்.
இப்படியே தன்னைப் பற்றிப் பேசிப் பேசியே லீவு தராமல் அனுப்பி விடுவார்.
ஆனால், ஒரு சிப்பந்தி கேட்ட மறுகணமே லீவு தந்தார். சிப்பந்தி லீவு கேட்ட காரணம்...
'என் மனைவியை பக்கத்து வீட்டுக்காரன் தள்ளிக்கிட்டு போயிட்டான்; தேடி வர லீவு வேண்டும்...' என்றான்.
வழக்கம் போலவே, 'என் மனைவியையும்...' என்று சொல்ல ஆரம்பித்து, பின் சுதாரித்து, 'லீவு தந்தேன்; போய்த் தொலை...' என்றார்.
— கொடாக் கண்டனை சமாளிக்க, விடாக் கண்டன் போட்ட ஐடியா, 'பலே' தானே!
