தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜன 04, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வியக்க வைத்த புரோகிதர்!

சமீபத்தில், உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தோம்... திருமாங்கல்ய தாரணம் முடிந்த பின், நலங்கு ஆரம்பித்தது. அதில் ஒரு நிகழ்வு. மோதிரத்தை தண்ணீர் குடத்துக்குள் போட்டு, மணமக்களை எடுக்கச் சொல்வது. புரோகிதர் குடத்திற்குள் மோதிரத்தை போட்டார். மணமக்கள் வேகவேகமா கையால் துழாவி, மோதிரத்தை தேட ஆரம்பித்தனர். அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்த பெரியவர்களும், இள வயதினரும் மற்றும் குழந்தைகளும் உற்சாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகளின் தாயார் சத்தமாக, 'அம்மாடி... விடாதே... விட்டுடாதே... மோதிரத்தை எடு எடு...' என்று, கத்திக் கொண்டே இருந்தார். மணப்பெண்ணும் போட்டி போட்டு மூன்று முறையும் மோதிரத்தை எடுத்த வெற்றிக் களிப்பில், கைகளை உயர்த்தினார். அவள் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.

அப்போது புரோகிதர், 'கல்யாண பொண்ணெ... நீ ஜெயிச்சுட்டே... சந்தோஷம்...' என்று சொல்லி, மணமகனைப் பார்த்து, 'ஏம்பா மாப்பிள்ளை... நீ விட்டுக் கொடுத்தாயா...' என்றார். 'இல்லை...' என்றான் மணமகன். பின்னர், புரோகிதர் மணமகளின் அம்மாவைப் பார்த்து, 'ஏம்மா... உங்க பெண்ணுக்கிட்டே, வீட்டுக்காரருக்கு விட்டுக் கொடுத்து, அனுசரணையா வாழணும்ன்னு சொல்லித் தர வேண்டிய நீங்களே, 'விட்டுடாதே... பிடி... விடாதே... பிடி...' என சொல்லிக் கொடுப்பதா... பின்விளைவு தெரியாமல், இந்த அம்மாக்கள் இப்படி தூண்டி விடுவதால் தான், பல வீடுகளில் பிரச்னை உண்டாகிறது...' என்றார்.

பின் மணமக்களைப் பார்த்து, 'திருமண சமயத்தில் நடக்கும் நலங்கு, ஊஞ்சல் போன்ற அனைத்தும், உங்கள் இருவருக்கிடையே சங்கோஜத்தை போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது; இதில், வெற்றி - தோல்வி கிடையாது. இன்று உங்களைச் சுற்றி இருக்கும் கூட்டம் அனைத்தும், சில மணி நேரத்தில் கலைந்து விடும்; வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப் போவது நீங்கள் தான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சந்தோஷ வாழ்வு வாழ வேண்டும். இருவரும் கை குலுக்கி, விட்டுக் கொடுத்து வாழ்வோம் என சொல்லுங்கள்...' என்றார்.

மணமக்களும் அவ்வாறே செய்ய, மங்கள அட்சதை தூவி, மனம் நிறைய வாழ்த்தினார் புரோகிதர். நல்லதோர் அறிவுரையை அம்மாக்களுக்கும், இளந்தலைமுறையினருக்கும் எடுத்துச் சொன்ன புரோகிதரை அனைவரும் பாராட்டினர்.

மைதிலி சீனிவாசன்,கோவை.

'கட்அவுட்'டுக்கு, 'கெட்அவுட்!'

திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, 'கட்-அவுட்' கலாசாரம், பரிணாம வளர்ச்சியடைந்து, இன்று, பிறந்த நாள் துவங்கி, கண்ணீர் அஞ்சலி வரை நீக்கமற வியாபித்துள்ளது.

எங்கள் பால்ய பருவத்தில், சிவாஜி, எம்.ஜி.ஆர்., படம் ரிலீஸ் ஆகும் நாளன்று, அவர்களது கட்-அவுட்களுக்கு காகிதப்பூ மாலை சூட்டி, தோரணம் கட்டி, ஸ்டார் மாட்டுவதோடு முடிந்தது. இப்போது திரையுலகில், ரசிகர் மன்றத்தை முதலில் துவக்கிய பின் தான், படத்தில் நடிக்கவே ஒப்புக் கொள்கின்றனர். அந்த ரசிகர் மன்ற விடலைகள், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் முதல் பீராபிஷேகம் வரை செய்து தியேட்டர்களில் நடத்தும் அலப்பறை, அனைவரையும் முகஞ்சுளிக்கவே செய்கிறது.

சிறிய மாநிலம் என்றாலும், புதுச்சேரியில், தியேட்டர்களில் கட்-அவுட் வைக்க, 'கெட் - அவுட்' சொல்லி இருக்கிறது அரசு. 'மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்...' என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் இந்த கட்-அவுட் கலாசாரத்திற்கு ஒரு, 'கெட் அவுட்' சொல்லி, அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தால், பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர்.

சி.நாகராஜன், சிந்தாதிரிப்பேட்டை.



ஒரே தாளில்...

அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் பெற, கடன் பெற, அடமானம் வைக்க, மானியம் பெற, வங்கி, அஞ்சலகத்தில் கணக்குத் துவங்க, டிபாசிட் போட, சொத்து வாங்க மற்றும் விற்கும் போது, புதிய வாகனம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும்போது என, பல நிலைகளில் நமக்கு முகவரிச் சான்றும், அடையாளச் சான்றும் தேவைப்படுகிறது.

நண்பர் ஒருவர், 'ஏ-4' தாளில் ஒரே பக்கத்தில் தன்னுடைய குடும்ப அட்டை நகல், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் (ஓட்டுனர் உரிமம்), ஆதார் கார்டு, வேலை பார்க்கும் இடத்தின் அடையாள அட்டை ஆகியவற்றை இணைத்து, 'போட்டோ காபி' எடுத்து வைத்திருந்தார்.

வாங்கிப் பார்த்து வியந்தேன். 'அது வேண்டும், இது வேண்டும் என மாற்றி மாற்றி, ஒவ்வொரு இடத்திலும் அலைய வைத்தனர்; இப்பிரச்னையைப் போக்க அனைத்தையும், ஒரே தாளில் கொண்டு வந்து, தேவையான அளவுக்கு, நிறைய பிரதிகளை எடுத்து வைத்து விட்டேன்...' என்றார்.

மேற்கண்ட ஆவணங்களை அதிக அளவில் பயன்படுத்துபவர்கள், இதுபோன்ற, ஒட்டுமொத்த இணைப்பு, 'டெக்னிக்'கைப் பின்பற்றலாம். நேரம் குறையும்; அலைச்சல் குறையும்; செலவும் குறையும். எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க!

சோ. ராமு, நிலக்கோட்டை.

ராங் நம்பரும், வாழ்த்தும்!

சில சமயம், தொலைபேசியிலோ, கைபேசியிலோ பேசும் போதும், நம்மை அறியாமல் தவறான எண்ணுக்கு தொடர்பு கொண்டு விடுவோம். அச்சமயம், எதிர் தரப்பில் இருந்து எரிச்சலுடன், 'ராங் நம்பர்' என்று பதில் வரும். சமீபத்தில், தொலைபேசியின் எண்ணை தட்டிய போது, அது ராங் நம்பராக போய் விட்டது. என் தவறை உணர்ந்து, 'சாரி... ராங் நம்பரை போட்டு விட்டேன்; மன்னிக்க வேண்டும்...' என்றேன்.

ஆனால், எதிர்முனையில், 'பரவாயில்ல இதுக்கு எதுக்கு சாரி... இன்னக்கி புத்தாண்டு தினம்; நாங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா கொண்டாடுறோம்; உங்களுக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...' என்றார்.

அந்தப் பண்பாடு, என்னை நெகிழ வைத்தது; நானும் மனதார வாழ்த்துகளை சொல்லி மகிழ்ந்தேன்.

நீங்களும் இப்படிச் செய்யலாமே!

— ஏ.நாகராஜன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us