தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கதாநாயகனின் கதை (15) - சிவாஜி கணேசன்

கதாநாயகனின் கதை (15) - சிவாஜி கணேசன்

கதாநாயகனின் கதை (15) - சிவாஜி கணேசன்


PUBLISHED ON : ஜன 04, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் ஆரம்பத்தில் சொன்னபடி நடிகர்கள் தங்களை மறக்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஏனெனில், அவன், தன்னை மறந்து விட்டால், கேமராவுக்கு எந்தக் கோணத்தில் தன் முகத்தை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும், எந்த இடத்தில் நாம் நிற்கிறோம், வசனத்தை எந்த இடத்தில் எப்படி அழுத்தியோ, மெல்லவோ பேச வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் அவனால் நிர்ணயித்துக் கொள்ள முடியாமல் போய்விடும். பாத்திரத்தின் முழு தன்மைக்கேற்ப தன்னை உருவகப் படுத்திக் கொள்ளும் அவன், தான் நடிப்பது நடிப்பு என்பதையும் உணர்ந்து, தன்னை மறக்காமல் இருக்க வேண்டும். மறந்து விட்டால், அவனுக்கே அவன் செய்வது என்ன என்பது தெரியாது.

மக்களைப் கவர அவன் தன் நடிப்பைத் தான் பயன்படுத்துகிறானே தவிர, தன்னை அல்ல என்பதை நடிகன் உணர வேண்டும்.

நடிப்பு மட்டும் யாரையும் எந்த விதத்திலும் வசப்படுத்தாது; பார்ப்பவர்களிடம் எந்தவிதமான மாறுதலையும் உண்டாக்காது. உணர்ச்சியுடன் அது வரும்போது தான் நடிப்புக்குண்டான சக்தியே விஸ்வரூபம் எடுக்கிறது. நடிப்புக்கு அப்படி என்ன பெரிய சக்தி இருக்கிறது? எழுத்துக்கு எவ்வளவு சக்தி உண்டோ, அதை விட அதிகமான சக்தி நடிப்புக்கும் உண்டு. எழுத்தைப் படித்தால் மட்டுமே உணர முடியும். நடிப்பைப் பார்த்தாலே உணர முடியும்.

இதனால் தான் மக்கள் மனதில் எதைச் சொல்வதற்கும் நடிப்பே முக்கியமானது என்று பலர் கருதுகின்றனர்.

நல்ல நடிப்பால் மனம் மாறியவர்களும் உண்டு; தங்கள் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டவர்களும் உண்டு. 20ம் நுாற்றாண்டின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவரான காந்திஜி ஒரு சமயம், ஹரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்தார்.

பொய் பேசுவது எவ்வளவு இழிவான செயல், சத்தியம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இந்த நாடகத்தைப் பார்த்ததும் புரிந்து கொண்டார். பொய் பேசுவதை விட்டொழிக்க காரணமாக அமைந்தது, அன்றைய தினம் அவர் பார்த்த ஹரிச்சந்திரா நாடகம் தான் என்று காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றில் படித்திருக்கிறோம். சத்திய வழிக்கு காந்திஜியை திருப்பியது அந்த ஒரு நாடகம் தான்.

அப்படியானால், நடிப்புக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது.

நான் சிறு வயதில் பார்த்த, கட்டபொம்மன் தெருக்கூத்து தான், என்னுள்ளே, நானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது. அது மட்டுமல்ல, என்னிடம் தேசிய உணர்ச்சியையும் அந்தத் தெருக்கூத்து தான் ஏற்படுத்தியது. அப்போது, அவர்கள் நடித்த கூத்து, இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கிறது.

சிறந்த நடிகன் யார்?

'நடிப்புக் கலையில் இவன் பரிபூரணத்துவம் பெற்று விட்டவன்...' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து, அழைக்கக்கூடிய ஒரு நடிகர் எப்போதுமே இருக்க முடியாது.

ஏனெனில், நடிப்பு என்பது முற்றுப் பெற முடியாதபடி வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு பெரிய கலை.

இதில் முற்றிலும் தேர்ச்சி பெற்று விட்டதாகச் சிலரைக் குறிப்பிட்டு அழைப்பது எப்படி பொருத்தமாகும்?

ஆனால், 'நடிப்புக் கலையில் நல்ல பயிற்சி உள்ளவர்கள் இவர்கள்...' என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

எனக்கே புதிராக உள்ள பல விஷயங்கள் இக்கலையில் இருக் கின்றன. ஒவ்வொரு முறையும் இந்தப் புதிர்களுக்கு நான் விடை காண முயலும்போது, ஒன்றல்ல, பல விடைகள் கிடைக்கின்றன. சரியான விடை எது என்று என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

ஆம், ஆரம்பத்தில் நான் சொன்னது போல நடிப்பு ஒரு பெரிய கடல். அதன் கரையில் தான் நான் நின்று, வியப்புடன் பார்த்தபடி இருக்கிறேன்.

நாலும் தெரிந்தவன் தான் நடிகனாக முடியும்.

அந்த நான்கு என்ன?

* தொழிலில் ஆர்வம்

* ஆழ்ந்த பயிற்சி

* புரிந்து செயல்படும் திறன்

* தன்னம்பிக்கையின் துணை

— இவை தான் அந்த நான்கு.

இந்த நான்கும் நான் சொன்னது அல்ல; இந்தத் துறைக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த பல பெரியோர்கள் சொன்ன கருத்துகள்.

கருத்து என்று சொல்வதை விட, நடிப்புக் கலைக்கு வகுத்துள்ள இலக்கணம் என்றே சொல்லலாம்.

இந்த நான்கையும் நான் கடைப்பிடிக்கிறேனா?

இந்த இலக்கணத்தின் எல்லைக்குள் தான், என் கலைப் பணியைச் செய்து வருகிறேனா?

சொல்வது சுலபம்.

செய்வது கடினம்!

என்னால் முடிந்தவரை இவற்றை கடைப்பிடித்து வருகிறேன்.

'முடிந்த வரை' என்று தான் சொல்லி இருக்கிறேன்; 'முழுக்க முழுக்க' என்று நான் சொல்லவில்லை.

ஏன் முழுக்க முழுக்கக் கடைப்பிடிக்க முடியாதா?

முடியும்!

ஆனால், எல்லாராலும் அது முடியுமா, எந்த அளவுக்கு சந்தர்ப்பம் ஒத்துழைக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.

தவிர, முழுமையாகவே கடைப்பிடித்து, அதில் சொல்வதற்கு இனி ஒன்றுமில்லை என்று சொல்வதும் சரியல்ல என்பதே என் வாதம்!

ஏன்?

எதையுமே முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் இந்த உலகில் இல்லை! கற்றது கை மண்ணளவு என்ற கணக்குத் தான், எல்லா பாடங்களுக்குமே சரியான விடை.

என்னையே நான் இப்போது விமர்சித்துக் கொள்கிறேன்.

தொழிலில் ஆர்வம் என்பது இயல்பாகவே ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.

எனக்கு நடிப்புத் தொழில் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம் உண்டு. அதனால் தான், நான் சிறுவனாக இருந்தபோதே, என் பெற்றோர் என்னை நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டனர்.

ஒருவனுக்கு எந்தக் கலையில் விருப்பம் அதிகம் இருக்கிறதோ, அந்தக் கலையில் அவனை ஈடுபடுத்தி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து வந்தால், விரைவில் அவன் அக்கலையில் தேர்ச்சி பெற முடியும்.

இது, பொதுவான உண்மை!

இந்த உண்மை என் விஷயத்தில் நடிப்புக் கலையின் மீது நான் கொண்டிருந்த ஆர்வத்தின் உருவில் இருந்தது.

அது மட்டுமல்ல, இந்த ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து வர வேண்டும்.

இதில் கொஞ்சமும் குறைவோ அல்லது தளர்ச்சியோ ஏற்பட்டு விடக் கூடாது.

அப்போது தான், தொழிலில் ஏற்படும் இந்த ஆர்வம் உண்மை யானதாக இருக்க முடியும்.

எந்த ஒரு தொழிலுக்கும், கலைக்கும் பயிற்சி அவசியம்.

பாடப் பாட ராகம்!

இதையும் நான் சொல்லவில்லை;

பெரியவர்கள் சொன்னது.

நடிப்புக் கலைக்கும் பயிற்சி தேவை.

இந்தப் பயிற்சி எங்கே கிடைக்கும்?

நாடக மேடைகள்தான் நடிப்புக் கலையை வளர்த்துக் கொள்ள, நல்ல பயிற்சிக் கூடங்களாக, பள்ளிகளாக நம் நாட்டில் இருந்து வருகின்றன.

தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,

நன்றி 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us