
மனிதநேயம்!
சமீபத்தில், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே, வயதான பெண்மணி ஒருவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார் நண்பர்.
அதற்குமுன் அப்பெண்மணியை அங்கு பார்த்ததில்லை என்பதால், 'யார் இந்த அம்மா?' எனக் கேட்டேன். அதற்கு நண்பர், 'எனக்கு பெரியம்மா முறை; எங்க அப்பாவோட முதல் மனைவி. அப்பாவுக்கும், அவங்களுக்கும் பிரச்னை வந்து, விவாகரத்து வாங்கிட்டாங்க. அதற்குபின், எங்கப்பா, எங்கம்மாவ கல்யாணம் செய்துகிட்டார். ஆனால், இவங்க மறுமணம் செய்யல; குழந்தையும் இல்ல. எங்க குடும்பத்துக்கும், அவங்களுக்கும் தொடர்பு இல்லாம இருந்துச்சு.
'எதேச்சையாக அவங்க ஊருக்கு போயிருந்த போது, வறுமையாலும், நோயாலும் பெரியம்மா கஷ்டப்படுறதா கேள்விப்பட்டேன். என் மனைவியின் சம்மதத்தோட இங்கே அழைச்சுட்டு வந்து, அவர பாத்துக்கிறேன். எங்கப்பா செய்த தவறுக்கு பிராயச்சித்தமா, அவங்கள என் தாயைப் போல் கவனிச்சுக்கிறேன்...' என்றார்.
சொந்த தாயாரையே, முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இக்காலத்தில், நண்பர் மற்றும் அவரது மனைவியின் மனித நேய மிக்க இச்செயலை பாராட்டி விட்டு வந்தேன்.
— எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.
உழைப்புக்கு ஏது ஓய்வு!
என் நண்பரை பார்ப்பதற்காக, சில வாரங்களுக்கு முன் கன்னியாகுமரி சென்றிருந்தேன். நானும், நண்பரும் அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, மதிய உணவுக்காக ஒரு ஓட்டலுக்கு சென்றோம். அங்கு, முதியவர் ஒருவர், எங்கள் மேஜையை சுத்தம் செய்து இலை போட்டு, தண்ணீர் வைத்தார்.
அவரை ஆச்சரியமாக பார்த்த போது, உடன் வேலை செய்யும் பணியாளர், 'இவர் இந்த ஓட்டலில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்; ஆனாலும், தினமும் அவருக்கு ஓட்டலில் சாப்பாடு கொடுப்பர். சும்மா சாப்பிட மனம் வராமல், இந்த தள்ளாத வயதிலும், தன்னால் முடிந்த வேலைகளை செய்கிறார். இந்த வேலைகளை செய்ய வேண்டாம் என்று சொன்னாலும், கேட்பது இல்ல...' என்றார்.
நல்ல உடல் திறன் இருந்தும், வேலை செய்யாமல்
சுற்றி திரிவோருக்கு மத்தியில், உழைப்பின்
மேல் பற்றுக் கொண்டுள்ள இவர் போன்றோர்
பாராட்டுக்குரியவர்களே!
— வி.ஜே.ராபர்ட், சென்னை.
புத்துணர்வு பெற வைத்த வார்த்தைகள்!
சமீபத்தில், மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகியிருந்த என் உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்தேன். தன் உடல் நலம் பற்றிய கவலையால் சோர்ந்து, வாழ்க்கையின் மீது பிடிப்பு அற்று காணப்பட்டார். இதனால், மன வருத்தமடைந்த நான், 'ஏன்... இத்தனை மன வருத்தம் அடையுறீங்க... இது மிகச் சாதாரண நோய் தான். என் தூரத்து உறவினர் ஒருவருக்கும் இந்த வியாதி தான்; இப்போ முற்றிலும் குணமாகி, இன்று, 20 வயது இளைஞன் போல் பம்பரமாய் சுழன்று வேலை செய்றாரு. உங்க கவலை தேவையில்லாதது; இன்னும் ஒரு வாரத்தில, நீங்க நிச்சயம் குணமாயிருவீங்க. யாருக்கும் தீங்கு நினைக்காத உங்கள, அந்த ஆண்டவன் நீண்ட நாள் வாழ வைப்பார்...' என்று மென்மையாக கூறினேன்.
என்ன ஆச்சரியம்... சற்று நேரத்தில் எழுந்து உட்கார்ந்தார். கூடவே, மனதில் இருந்த அச்சம் நீங்கியவராக, மலர்ச்சியுடன் என்னிடம் பேசத் துவங்கினார்.
உலகில் நம்பிக்கையூட்டும் வார்த்தைக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை, அப்போது தான் உணர்ந்தேன்.
— வே.செந்தில்குமார், எடப்பாடி.
சபாஷ் இளைஞர்களே!
பொதுவாக, இளைஞர்கள் தங்கள் பைக்கின் பின்புறம், கவர்ச்சியான வாசகங்களை தான் எழுதி வைப்பர். ஆனால், அண்மையில் பைக்கில் சென்ற ஒரு இளைஞரின் நம்பர் பிளேட்டின் கீழ் உள்ள மட்கார்டு கவரில் எழுதியிருந்த விவரங்கள், என்னை ஈர்த்தது.
அதில், அந்த இளைஞனின் பெயர், அவரது ரத்த வகை மற்றும் மொபைல் போன் எண் போன்ற தகவல்களை குறிப்பிட்டு, 'ரத்தம் தேவையென்றால் அழைக்கவும்...' என, எழுதியிருந்தார். பைக்கில் அழகுக்காக எதையாவது எழுதுவதை காட்டிலும், இவ்வாறு அவர் எழுதியிருந்தது, மனதை நெகிழச் செய்தது. பிறருக்கு உதவும் மனப்பான்மையுள்ள இளைஞர்கள் இதைப் பின்பற்றலாமே!
— ஈஸ்வரி, மாட்டுத்தாவணி.

