தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 19, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரோக்கிய தண்டனை!

சமீபத்தில், நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் இரு குழந்தைகளும், 'ஜாகிங்' செய்வது போல ஒரே இடத்தில் குதித்துக் கொண்டிருக்க, அதை, கணக்கிட்டுக் கொண்டிருந்தார் நண்பர். விவரம் கேட்ட போது, 'பையன் ரேங்க் குறைஞ்சுட்டான்; அது தான் பனிஷ்மென்ட்...' என்றவர், 'மூணாம் வகுப்பு படிக்கிற என் மகன், ஐஞ்சாவது ரேங்கிற்குள் வரணும்ன்னும், ஆறாம் வகுப்பு படிக்கிற என் பொண்ணு, மூணாவது ரேங்கிற்குள் வரணும்ங்கிறது தான் என் திட்டம். இதுல, ஒருத்தர் ரேங்க் குறைஞ்சாக் கூட, ரெண்டு பேருக்குமே உடற்பயிற்சி மாதிரியான ஆரோக்கிய தண்டனைகள கொடுக்குறேன். அதோட, ஒரு வாரத்திற்கு பள்ளிக்கு வண்டியில அழைச்சுட்டுப் போக மாட்டேன்; அதுக்கு பதில், நடந்தே போகணும். குழந்தைகள அடிக்கிறது கிடையாது...' என்றார்.

'அதுசரி... ஏன், உன் பிள்ளைகள முதல் ரேங்கிற்கு வலியுறுத்துறதில்ல?' என்று கேட்டேன்.

'படிப்புக்காக நிறைய பணம் செலவழிக்கிறதால, எல்லாருமே பிள்ளைகள முதல் ரேங்க் எடுக்கச் சொல்லி வறுத்தெடுப்பர்; ஆனால், இப்போதைய பாட திட்டத்தில், 10 மார்க் குறைஞ்சாலே, 'ரேங்க்' கீழே இறங்கிடும். அதனால, 'ரேங்க்' பற்றி கவலைப்படாமல், மதிப்பெண் ரொம்ப குறையாம பார்த்துகிட்டா போதும்...' என்றார்.

அவரது பாலிசி ஏற்புடையதாக இருந்ததால், மனமார பாராட்டினேன்!

— வி.ரகுராமன், திண்டுக்கல்.

இப்படியும் ஒரு மனிதன்!

அரசுப் பணியில் இருக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த என் நண்பருக்கு, திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதனை செய்து பார்த்ததில், தன்னிடம் குறையில்லை என்பதும், மனைவியிடம் நிவர்த்தி செய்ய முடியாத குறையுள்ளது என்பதை தெரிந்து கொண்டும், அதைப்பற்றி மனைவியிடமும் எதுவும் சொல்லவில்லை.

இந்நிலையில், சமீபத்தில், அவர் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 'ஏன்' என்று கேட்டதற்கு, 'குழந்தை இல்லாததால பெற்றோரும், உறவினரும் மறுமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துறாங்க; அதற்கு உடன்பட என் மனசாட்சி இடம் தரல; ஆனாலும், பின்னாளில் அப்படியொரு எண்ணம் எனக்குள் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகவே இவ்வாறு செய்தேன்...' என்றார்.

தற்போது, மனைவியின் சம்மதத்துடன், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகிறார்.

நண்பரின் பரந்த மனப்பான்மை மற்றும் தியாக உணர்வை எண்ணி வியந்தேன்.

— ஜி.விஸ்வநாதன், சிதம்பரம்.

பொன்னாடை தேவையில்லை!

விடுமுறைக்காக என் அண்ணன் வீட்டிற்கு சென்ற குழந்தைகளை அழைத்து வர, கடந்த சில வாரங்களுக்கு முன், மதுரை சென்றிருந்தேன். அப்போது, அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில், விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின், விழாவிற்காக நிதியுதவி செய்தவர்கள் மற்றும் சிறப்பித்தவர்களுக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்று, அதில், அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. என் அண்ணனுக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது.

வீட்டிற்கு வந்ததும் அந்த துணியை விரித்து பார்த்த போது, அது, 'சர்ட்-பிட்!' அது குறித்து அண்ணனிடம் கேட்ட போது, 'எங்கள் பகுதி விழாவில், துண்டு மற்றும் சால்வைகளை போடுவதில்லை; அதற்கு பதிலாக சட்டைத் துணியை போர்த்தி விடுவர். அதை, நாங்கள் விழா நினைவாக தைத்துப் போட்டுக் கொள்வோம்...' என்றார்.

சம்பிரதாயத்திற்காக, சால்வை போர்த்தி, பயன் படுத்தாமல் வீணடிப்பதை விட, இதுபோல் உபயோகமான உடைகளை போர்த்தலாமே!

அதை நினைவுப் பரிசாக உடுத்தி மகிழ்வரே!

— கே.வெண்ணிலா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us