PUBLISHED ON : ஜூலை 19, 2015

'சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?' என்று நிருபர்கள் கேட்ட போது, 'மிகவும் சுகமான அனுபவங்கள் நிறைந்த வாழ்க்கை அது. என் வாழ்நாளில் இப்படி ஒரு ஓய்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில்லை. ஒரு நடிகன் கடைசி மூச்சு உள்ள வரை ஓடியாடிக் கொண்டு தான் இருப்பான். அவன் குடும்பத்தாரும் அவனை ஓய்வு பெற விட மாட்டார்கள். ஆனால், எனக்குச் சிறைத் தண்டனை தந்த நீதிபதியின் பேருதவியால் எனக்கு ஓய்வு கிடைத்தது...'
'இனி உங்களுடைய திட்டம் என்ன?'
'திட்டம் என்ன திட்டம்! நாடகம், சினிமாக்களில் நடிக்க வேண்டியது தான். ஆனால், நான் எது செய்தாலும் எனக்காகச் செய்ததில்லை; பொது நன்மையை மனதில் வைத்தே இதுவரை செய்து வந்திருக்கிறேன். இனியும் என் எதிர்காலம் அதே நோக்கோடு அமையும்...' என்று, தன் தேனாம்பேட்டை வீட்டில் உற்சாகமாக பேட்டி கொடுத்தார் ராதா.
நான்கு ஆண்டுகள் சிறை வாசத்தில் உடலளவில் கொஞ்சம் தளர்ந்து போயிருந்தாலும், மனதளவில் பழைய நம்பிக்கையுடன் தான் இருந்தார். சிறை வாழ்க்கை அவரது துணிச்சலை அதிகப்படுத்தியிருந்தன.
கடந்த, 1959லிருந்து 1967 வரை, ராதா நடிப்பில், நூறு படங்கள் வெளியாகியிருந்தன. அப்போதெல்லாம் வாய்ப்புகள் தானாகத் தேடி வந்தன. ஆனால், சிறைக்குச் சென்று வந்த பின், சினிமாக்காரர்கள் யாரும் தேடி வரவில்லை. மருத்துவமனையிலும், சிறையிலும் வந்து பார்க்கத் தயங்கிய சினிமாக்காரர்கள், இப்போது மட்டும் வந்துவிடவா போகின்றனர்!
ராதாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சிவாஜி போன்ற பெரிய நடிகர்கள் கூட நினைக்கவில்லை. எதற்கு வம்பு என்று ஒதுங்கியே இருந்தனர். சினிமாவையும் தாண்டி ராதாவோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தோர் மட்டும் அக்கறையுடன் வந்து பார்த்தனர்.
சிறை வாசத்தின் போது, அவர் அதிகம் இழந்ததாக நினைத்தது நாடக மேடையைத் தான். அவசரமான ஒப்பனை, வசனங்களாக நீளும் காட்சிகள், மக்களின் கைத்தட்டல், ஆரவாரம், விசில் இவற்றுக்கு ஈடாக என்ன இருக்க முடியும்!
படங்களில் வாய்ப்பு வராதது பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. மீண்டும் நாடக மேடை ஏறத் திட்டமிட்டார். முதல் நாடகம், ரத்தக்கண்ணீர்!
கூட்டத்துக்கு குறைவே இல்லை; ராதாவுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. பழைய ராதாவாகக் களமிறங்கி, மோகன் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டினார்.
பேப்பர் சீன் வந்தது; மக்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு. பேச ஆரம்பித்தார் ராதா...
'நான் எம்.ஜி.ராமச்சந்திரனைச் சுட்டேன்... நான் சுட்டது தப்புன்னு பெருந்தலைவர், ஈ.வெ.ரா.,ல இருந்து ஊர்ல இருக்குற வேற யாராவது அறிக்கை விட்டாங்களா... ஏன் விடல? ஆனா, நான் சுட்டது தப்புன்னு என்னைப் புடிச்சு ஜெயில்ல போட்டான். ஏன் போட்டான்... ஏன்டா ஒழுங்கா சுடலைன்னு போட்டான். என்ன செய்றது... எடுத்துக்கிட்டுப் போனது இந்தியன் பிஸ்டல்; அவன் அதுலயும் கலப்படம் செய்வான்னு எனக்கு எப்படித் தெரியும்? இல்லேன்னா நான் பாரின் பிஸ்டலை எடுத்துட்டுப் போயிருப்பேன். இனிமே என்னை ஒண்ணும் செய்ய முடியாது; அதுக்கான தண்டனையை அனுபவிச்சுட்டேன். என்னை யாராலும் தடுக்க முடியாது...' என்றார்.
காலத்துக்கேற்றவாறு அவராகவே சேர்த்துக் கொண்ட இந்த வசனத்தை கேட்டதும், ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
சிறைக்குச் சென்று வந்த பின், ராதா நடித்து வெளியாகிய முதல் படம், சமையல்காரன். வாய்ப்பு கொடுத்தவர் மு.கருணாநிதி; கதாநாயகன், கருணாநிதியின் மகன் மு.க.முத்து. இப்படத்தின் மூலம், சினிமாவில் தன் நான்காவது இன்னிங்ஸ்சை துவங்கினார் ராதா. அதன்பின், ஒரு சில படங்களில் ஒப்பந்தமானார். நேரம் தவறாது நடித்துக் கொடுத்தார்.
சமையல்காரன் செட்டில் நடந்த ஒரு சம்பவம் இது:
அன்று, ராதாவுக்கு உடல் நிலை சரியில்லை; வயிற்றுப் போக்கு. அதனால், 'மேக்-அப்' ரூமில் களைப்புடன் படுத்திருந்தார். மனோரமாவும் அந்தப் படத்தில் நடித்தார். விஷயம் கேள்விப்பட்டு ராதாவைச் சந்திக்க, 'மேக்-அப்' அறைக்கு சென்ற மனோரமா, 'என்னண்ணே உடம்பு முடியலயா?' என்று கேட்டார்.
'யாரு சொன்னா... நான் நல்லாத்தான் இருக்கேன். ஷாட்டுக்குப் போகலாமா...' என, சட்டென்று எழுந்து நடிக்கக் கிளம்பினார் ராதா.
ஒரு நடிகன், தன் இயலாமையை வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்பது, அவரது கொள்கை.
அப்போது, பெங்களூரில் ராதா நடித்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 'தமிழ்நாட்டில் ராதாவை நடிக்கவிடாததால், பெங்களூரு சென்று நடிக்கிறார்...' என்று செய்திகள் வெளியாயின. ராதாவைத் தேடி பெங்களூரு சென்றனர் பத்திரிகையாளர்கள்.
'சென்னையில் அவ்வளவு சவுகரியங்கள் இருக்கும்போது, இங்கே வந்து படம் எடுக்க காரணம் என்ன?' என்று கேட்டனர் நிருபர்கள்.
'பெங்களூரு கிளைமேட் தான் காரணம். ஜிலுஜிலுன்னு இருக்கே... சென்னையில இப்படியா இருக்கு. சும்மா ஒரு, 'சேஞ்ச்' வேணுமில்ல; அதுக்குத்தான்...' என்றார் ராதா.
'தமிழ்நாட்டில் தொந்தரவு ஏற்படலாம்ங்கிறதுக்காகத் தான் இங்கே வந்து படம் எடுக்கிறதா பேசிக்கிறாங்களே...' என்றனர் நிருபர்கள்.
'தொந்தரவா... எனக்கா! அது எவன்யா கொடுக்கறவன்? அப்படியே கொடுத்தாலும் அதுக்கெல்லாம் பயப்படறவனா நான்... அதெல்லாம் காரணமில்ல; இங்கே வந்து படம் எடுக்கிறதுக்கான உண்மை காரணத்த சொல்றேன்...
'இந்தப் படத்த தயாரிக்கிறது ரோஷனா பேகம்ன்னு ஒருத்தர். குடியிருந்தகோவில் படத்தில், 'குங்குமப் பொட்டின் மங்கலம்'ன்னு பாட்டு எழுதினாங்களே அவங்க தான். இந்த மைசூர், 'கவர்மென்ட்'காரன் இருக்கானே... அவன் இங்கே படம் எடுத்தால், ஒரு படத்துக்கு, 50,000 ரூபாய் கொடுக்கிறான். கன்னடப் படத்துக்குத் தான் இந்தப் பணம் கெடைக்கும்ன்னு நெனைச்சேன். ஆனா, அப்புறம் தான் தெரிய வந்தது... கன்னடப் படம்ன்னு இல்ல, பெங்களூருக்கு வந்து முழுக்க முழுக்க இங்கேயே எந்தப் படம் எடுத்தாலும், கவர்மென்டில் இருந்து, 50,000 ரூபாய் கிடைக்குதுன்னு!
'இந்த ரகசியத்தை இங்கே ஏன் சொல்றேன்னா, நம்ம தமிழ்நாட்டிலே நிறைய ஏழை புரொட்யூசருங்க, வளர்ந்து முன்னுக்கு வர வேண்டியவங்க இருக்காங்க. அவங்கெல்லாம் தெரிஞ்சிக்கிடட்டுமேன்னு தான். இங்கே ஸ்டுடியோ வாடகை ரொம்பவும் குறைச்சல். அதுவும் இன்னொரு காரணம்....' என்றார்.
ராதாவுக்கு சில பக்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதில், முக்கியமானது வியட்நாம் வீடு சுந்தரம் எடுத்த, கந்தரலங்காரம். சிறைக்குச் சென்று வந்த பின், ராதா மாறி விட்டார். அவருக்குக் கடவுள் நம்பிக்கை வந்து விட்டது என்றெல்லாம் செய்திகள் கிளம்பின. அதற்கு ராதா, 'பக்திப் படம்ன்னு நான் பிரிச்சுப் பாக்கல. இதுவும் சினிமா. காசு கொடுக்கறாங்க; நடிக்கறேன். அவ்வளவு தான்...' என்றார்.
படத்துக்காகத் தன்னை ஒப்பந்தம் செய்ய வரும்போதே சுந்தரத்திடம் தெளிவாகச் சொல்லி விட்டார்...
'நான் ஆன்மிகப் படத்துல நடிக்க வந்திருக்கேன். எந்த விதத்துலயும் இதை விளம்பரமோ, விமர்சனமோ செய்துடாதே. சர்ச்சைக்கு வழி வகுக்கும். படம் வெளிவரும்போது விளம்பரத்தில் கூட என்னை, 'போக்கஸ்' செய்ய வேணாம்...' என்றார் ராதா.
கும்பகோணம் அருகில், எட்டுக்குடி எண்கண் முருகன் கோவிலில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு குழுவினருடன் அந்த ஊரிலேயே தங்கி, நடித்துக் கொடுத்தார் ராதா. படத்தில் ராதாவுக்கு முருக பக்தர் வேடம். அதற்கேற்ப நடித்தார். எதையும் மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. தனக்கான, 'ஷாட்' இல்லாத நேரங்களில் கோவிலிலேயே அமைதியாகக் காத்திருந்தார். காலையில், 7:00 மணிக்கே ஷூட்டிங்குக்குத் தயாராக இருந்தார். இரவு, 10:00 மணியானாலும் எதுவும் சொல்லாமல் நடித்தார்.
'அடேய் தம்பி... இங்க வாப்பா. அந்த ஜெனரேட்டர்ல டீசல் தீரப் போகுது பாத்துக்கோ...' என்று சொல்வார் ராதா. ஜெனரேட்டர் ஓடும் சத்தத்தை வைத்தே, அதில் எவ்வளவு டீசல் இருக்கிறது என்பதை கணிக்கும் மெக்கானிக் மூளை அவருக்கு இருந்தது.
தெருவில், சாமியை ஊர்வலமாகக் கொண்டு வரும் காட்சியை படமாக்க இருந்தனர். ஊர்வலத்தின் முன் யானை வருவதாக ஏற்பாடு. சப்பரத்துடன் ராதாவும் வருவார். ஷாட்டுக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டனர். சுந்தரத்திடம், 'கேமராவை தள்ளி வைச்சுக்கோ... இல்லேன்னா மக்களை இடைவெளி விட்டு வரச் சொல்லு. ஓட வேண்டியிருக்கும்...' என்று சொன்னார்.
சுந்தரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. கேமராமேனும் கேமராவை அந்த இடத்தில் வைப்பது தான் சரியாக இருக்கும் என்று எண்ணியதால் மாற்றவில்லை. 'டேக்' ஆரம்பமானது.
ஊர்வலத்தில் வந்த யானை லேசா மிரள ஆரம்பித்தது. பாகன் அதை அடக்கினான். 'ஷாட்' தடைப்பட்டது.
'மிருகங்களுக்கு அந்தப் பழக்கம் உண்டுய்யா. லைட்டை பக்கத்துல பாத்தா மிரண்டுரும். கொம்புள்ளதுக்கு பத்தடி, குதிரைக்கு, 20 அடி, யானைக்கு, 100 கஜம்ன்னு கேமரா வைக்க கணக்கு உண்டு. தள்ளி வைச்சுக்கணும். சமயத்துல கரண்டுல காலை வைச்சுரும்; பாத்து எடு...' என்று சொல்லிவிட்டுப் போனார் ராதா.
படத்தில் ஒரு கதாகாலட்சேப காட்சி இருந்தது. வாரியார் வாழ்த்திப் பேசி துவங்கி வைக்க, ராதா கதாகாலட்சேபத்தை தொடருவது போல காட்சி. ராதாவும், வாரியாரும் சேர்ந்து நடிக்கின்றனர் என்ற பரபரப்பு உண்டானது. வாரியார் மறுக்காமல் வந்து நடித்துக் கொடுத்து விட்டுப் போனார். ராதாவும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
'இப்ப எடுக்கப் போறது கதாகாலட்சேபம்... அதனால, சின்னச் சின்ன ஷாட்டா எடுத்காதே. ரெண்டு கேமராவையும் ஓட விடு. பெரிய ஷாட்டா எடு...' என்று ஆலோசனை கொடுத்தார் ராதா.
படத்தில் ராதாவோடு, அவரது மகன் வாசுவும் நடித்திருந்தார். படப்பிடிப்பு முடிந்தது; டப்பிங் சமயம். அதற்கும் சரியாக வந்து பேசிக் கொடுத்த ராதா, 'வேற என்ன பாக்கி?' என்று கேட்டார். 'வாசு மட்டும் கொஞ்சம் டப்பிங் பேசணும்; அதையும் நீங்களே பேசிக் கொடுத்துருங்களேன்...' என்றார் சுந்தரம்.
'நான் இங்க இருக்கேன். பாக்கணும்ன்னு சொல்லி அவனைக் கூப்பிடு...' என்றார் ராதா. தகவல் போனது; வாசு வந்தார். 'ஒண்ணுமில்ல... டப்பிங் பாக்கி இருக்காமே... பேசி முடிச்சுடு...' என்று சொல்லி கிளம்பினார் ராதா.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- முகில்
