PUBLISHED ON : ஜூலை 19, 2015

தனியார் எப்.எம்., வானொலி ஒன்றின் அறிவிப்பாளர், தயாரிப்பாளர் தேர்வுக்கான நேர்முகம் ஒன்று, கடந்த வாரம் நடந்தது. தேர்வுக் குழுவில் என்னையும் ஒருவராகக் கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.
எத்தனை எத்தனை, 'டேலண்டுகள்!'
அனேகம் பேரிடம் திறமைகள் பொதிந்து கிடக்கின்றன; அதை வெளியே கொண்டு வர வழி தெரியாமல் தவிக்கின்றனர்.
திண்டுக்கல்லை சொந்த ஊராகக் கொண்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர்... மாதம், ௫௫ ஆயிரம் ரூபாய் வாங்குகிறாராம்... ஆனால், வானொலியின் மீது உள்ள காதலால், தற்போது வாங்கும் சம்பளத்தில் பாதி கொடுத்தால் போதும் என்றார்.
'டிவி' வந்து விட்டதால், வானொலியின், 'பாப்புலாரிட்டி' போய் விட்டது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. அது மாயத் தோற்றமே என்பது, இந்த நேர்காணலில் மீண்டும் நிரூபணமானது.
'இன்னமும் ஏன் வானொலி கேட்கிறீர்கள்?' என்ற கேள்விக்கு, ஆயிரமாயிரம் பதில் வருகிறது.
இந்த குறிப்பிட்ட வானொலி, 24 மணி நேர ஒலிபரப்பு என்பதால், 'இரவு, 12:00 மணிக்கு மேல் எந்த நேயர் கேட்கப் போகிறார்...' என, ஒரு கேள்வியை எடுத்து விட்டேன்.
'ஏன் சார்... நைட் டூட்டி டாக்டர்கள் இல்லயா... நர்சுகள், வாட்ச்மென்கள், மாணவர்கள், ஒர்க் ஷாப்புகள், காவல் நிலையங்கள், இரவு நேர ரோட்டோர ஓட்டல்கள் மற்றும் டீ கடைகள்...' என அடுக்கிக் கொண்டே போயினர்,
நேர்காணலுக்கு வந்தவர்கள்.நேர்காணல் முடிந்த பின், 'ஹை டீ' ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது நேர்காணல் நடத்த வந்திருந்தோருடன் பேசினேன். அதில், ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவரும் கலந்து கொண்டார். மனிதர் கண்ணதாசனை கரைத்து குடித்திருக்கிறார்.
'அத்திக்காய் காய் காய்... ஆலங்காய் வெண்ணிலவே...' பாடலில் வரும், 'மாதுளங்காய் ஆனாலும்...' என்று வரும் வரிகளுக்கு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்... நினைத்தே பார்த்திராத விளக்கம்.
அத்துடன் அவரிடம் ஆணுறை வியாபாரம், அதன் முன்னேற்றம் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவர் சொன்னார்...
'எங்க, 'புராடக்ட்' விற்பனையாகும், 28 நாடுகளில் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தோம். இதில், துருக்கி நாட்டவர் தான் உஷாராக உள்ளனர். 'எய்ட்ஸ்' தாக்கி விடுமோ என, 98 சதவீதம் பேருக்கு பயமிருக்கிறது. அதனால், 76 சதவீத மக்கள், 'பாதுகாப்பான' உறவு வைத்துக் கொள்கின்றனர்.
'உலகின் நம்பர் ஒன் நாடாக இருக்கும் அமெரிக்கா, இதிலும் நம்பர் ஒன் ஆக இருக்கிறது. ஆண்டுக்கு, 124 முறை, 'உறவு' வைத்துக் கொள்கின்றனர். நம் இந்தியர்கள், 76 முறையும், ஹாங்காங் வாசிகள், 63, சீனர்கள், 72 முறையும்!
'இதில் நாம் கட்டுப்பெட்டி என்றாலும் சந்தோஷமே! இந்தியர்களில், 72 சதவீதம் பேருக்கு ஒரே, 'பார்ட்னர்' தான்! ஆனால், இதுவே அமெரிக்கர்களுக்கு, 11 சதவீதம்; இங்கிலாந்தில், 13 சதவீதம்!
'இந்தியாவில், 'அந்த' அனுபவத்தை சராசரியாக, 20.3 வயதில் பெறுகின்றனர். இதுவே அமெரிக்காவில், 16 வயதிலும், இங்கிலாந்தில், 16.9 வயதிலும் பெற்று விடுகின்றனர்.
'சர்வே எடுத்தவர்கள், 'உங்களுக்கு மிகவும் மன மகிழ்ச்சி தரும் செயல் எது?' என்று கேட்ட போது, இந்தியர்களில், 30 சதவீதம் பேர், 'வேலைக்குப் போவது...' என்றும், 21 சதவீதம் பேர், 'நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பது...' எனவும், 14 சதவீதம் பேர், 'டிவி' பார்ப்பது' என்றும் கூறினர். 'உறவு கொள்வதில் மகிழ்ச்சி காண்கிறோம்...' என கூறியவர்கள் வெறும், 3 சதவீதத்தினரே! இதுவே, இங்கிலாந்தில், 31 சதவீதம்.
'உலகில், 10ல், 4 பேர், 'காண்டம்' உபயோகிக்கின்றனர். 16 முதல், 24 வயதுடையோரில், 64 சதவீதம் பேர் கண்டிப்பாக, 'காண்டம்' பயன்படுத்துகின்றனர்.
'ஒரு பரிதாபமான செய்தியையும் சொல்லியே ஆக வேண்டும். உலகிலேயே மிகக் குறைந்த அளவில் இந்தியர்கள், 'காண்டம்' பயன்படுத்துகின்றனர்...' என கூறி முடித்தார்.
'ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று இருந்தால், இந்த, 'காண்டம்' கண்றாவி எல்லாம் எதற்கு...' என நினைத்துக் கொண்டேன்!
ஒரு காலத்தில், மோட்டார் சைக்கிள் உற்பத்தியிலும், விற்பனையிலும், பிரிட்டன் தான் பெரிய ஆளாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனில் நடந்த மோட்டார் சைக்கிள் ரேசில், ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா வண்டிகள் கலந்து கொண்டன.
அப்போது, 'ஜப்பான்காரனுக்கு, ரி க் ஷா தான் செய்ய தெரியும்; மோட்டார் சைக்கிளுமா செய்ய தெரியும்...' என்று கேலி செய்தது பிரிட்டன்.
ஆனால், அடுத்த இரண்டாண்டுகளிலேயே, 10 பந்தயங்களில் ஹோண்டா தான் வெற்றி பெற்றது. 'மோட்டார் சைக்கிள் உற்பத்தியின் ரகசியங்களை, ஹோண்டா கம்பெனியாரிடம், பிரிட்டிஷ்காரர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்...' என்று எழுதியிருந்தது பிரிட்டிஷ், 'டெய்லி மிரர்' பத்திரிகை...' என்றார், பைக் பிரியரான நண்பர் ஒருவர்.
'ஹோண்டா என்றால் ஜப்பான் மொழியில், மோட்டார் சைக்கிள் என்று அர்த்தமா?' என்று கேட்டேன்.
'இல்ல; அந்த மோட்டார் சைக்கிள் கம்பெனியின் சொந்தக்காரர் பெயர் அது. அவர் ஒரு சாதாரண இரும்புக் கொல்லரின் மகன். பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு, தொழிலில் இறங்கினார். 27வது வயதில், சொந்தத்தில் பட்டறை வைத்துக் கொண்டார்.
'அவர் செய்த கருவியெல்லாம் சரியாக வேலை செய்யாததால், 'அதற்கெல்லாம் படிப்பு வேண்டும்; இல்லாவிட்டால் முடியாது...' என்றனர்.
'அதனால், பகலெல்லாம் பட்டறையில் உழைத்து, இரவில் முறைப்படி படித்தார். பின்னாளில், பிரிட்டனுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்...' என்றார் நண்பர்.
அதே நண்பர், இன்னொரு துணுக்கு செய்தியும் சொன்னார்...
'பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் நடந்ததாக, ஒரு துணுக்குச் செய்தியை எப்போதோ, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'டில் படித்தேன். பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் ஒரே சலசலப்பு. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரே, 'அரசின் போக்கு, கண்ணைக் கட்டி, காட்டில் விட்டது போலிருக்கிறது...' என்று தாக்கிப் பேசி விட்டார்.
'அடுத்த கூட்டத்தில், எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, 'ஆளுங்கட்சி உறுப்பினரே இப்படி பேசியிருக்கிறாரே... இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?' என்று கேட்டார்.
'அதற்கு, அப்போதைய பிரதமர், மாக்மில்லன், 'அந்த மெம்பருக்கு புத்தி கூர்மையும், சுதந்திரமும் உண்டு. அவற்றை, அவருக்குக் கொடுத்தது யார் என்று நான் சொல்லக் கூடாது...' என்றார்.
இந்த பதிலைக் கேட்டு, ஆளுங்கட்சியினர் ஆரவாரித்தனர்; ஏன் தெரியுமா? அந்தக் குறிப்பிட்ட உறுப்பினர், மாக்மில்லனின் சொந்த மகனே!
அமெரிக்க கவிஞரான வால்ட் விட்மன், தன், 'புல்லின் இதழ்கள்' என்ற கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார்:
மண்ணையும், சூரியனையும், பிராணிகளையும் நேசி! பணத்தை லட்சியம் செய்யாதே; கேட்கிறவனுக்கெல்லாம் கொடு; அறிவில்லாத அவர்கள் சார்பாகவும், பித்தர்கள் சார்பாகவும் போராடு!
உன் வருமானத்தையும், உழைக்கும் சக்தியையும் பிறருக்காக செலவிடு; யதேச்சதிகாரிகளை வெறு; கடவுள் குறித்து வாதாடாதே!
மக்களிடம் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்.
படிக்காத மேதைகளிடமும், தாய்மார்களிடமும் பழகு. பள்ளியிலோ, கோவிலிலோ, புத்தகத்திலோ, உனக்கு சொல்லப்பட்டவைகளை எல்லாம் மறுபரிசீலனை செய்.
உன் ஆன்மாவை, எதெல்லாம் அகவுரவப்படுத்துகிறதோ அதையெல்லாம் தள்ளிவிடு.
இப்படியெல்லாம் செய்தால், உன் சொற்கள் மட்டுமல்லாமல், உன் உதடு, முகம், கண்கள், உன் உடல் அசைவு ஒவ்வொன்றிலும் கவிதை வெளிப்படும்.
