
தி.அருண்குமார், நங்கநல்லூர்: நான் கூச்ச சுபாவம் உடையவன்; இதனால், பல நல்ல வாய்ப்புகளையும், உதவிகளையும் இழந்திருக்கிறேன். என்ன செய்வது?
உங்களிடம் உள்ள குறையை நீங்களே உணர்ந்து விட்டீர்கள். இதே போல, அதைத் தவிர்க்கவும் முயற்சி செய்யுங்கள். கூச்ச சுபாவத்தை அகற்ற முதலில், 'அசட்டு' துணிச்சல் போதும்; முயன்று பாருங்கள்!
ஹெச்.சுந்தரமூர்த்தி, மடிப்பாக்கம்: படித்த இளைஞர்கள் நாலு பேர் ஒன்று சேர்ந்தால், எதிர்காலத்தைப் பற்றியும், சுயமாக தொழில் செய்யும் முயற்சி பற்றியும் சிந்திக்காமல், சினிமா மற்றும் நடிகைகளைப் பற்றி பேசி வீணாக காலம் கழிக்கின்றனரே...
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிந்திக்க எங்கே சார் சொல்லிக் கொடுக்கின்றனர்? தமிழனின் ஒரு தலைமுறை, சினிமாவால் சீரழிந்து விட்டது வருந்தத்தக்கது தான்!
வி.டி.ஜெயக்குமார், கடலூர்: கேள்விக்கு பதில் சொல்வது அல்லது பதிலுக்குரிய கேள்வியை தெரிவு செய்வது - இதில் எது எளிதான வேலை?
இரண்டாவது! ஆனால், முதலாவதையும் நான் முயற்சி செய்யாமல் விடுவது இல்லை!
ரா.ஜீவானந்தன், ஆலங்குளம்: மனைவி - நெருங்கிய நண்பர் - யாரிடம் ரகசியத்தைச் சொல்லலாம்?
மனைவியிடம் கூற முடியாத ரகசியங்கள் கூட உண்டே!
என்.சசிரேகா, பெருமாள்பட்டு: அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், நடிகர், நடிகைகளின் பேச்சுக்கள் - ஒப்பிடவும்...
ஏம்மா... வாக்குறுதிகளைக் கேட்டும், பேச்சுகளைப் படித்தும் நேரத்தை வீணாக்குறீங்க? போய் அந்த நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்யுங்க!
சி.ராஜாமுகம்மது, மேற்கு முகப்பேர்: எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகிய அனுபவம் உண்டா?
நெருங்கி நின்ற அனுபவம் தான் உண்டு! கூட்டத்தில் அடிதடி போட்டு, 'வாத்தியாரை' நெருங்கி நின்று போட்டோ எடுத்துக் கொண்ட அனுபவம் உண்டு!
கு.தனலட்சுமி, அருப்புக்கோட்டை: ஆண் துணையின்றி வாழும் பெண்கள் வேலைக்கு செல்லும்போது எவ்வளவு ஒழுக்கத்துடன் வாழ்ந்தாலும், பெண்களே நம்புவதில்லை. ஆண்களோ, தரமற்றவன் கூட, வயோதிகன் உட்பட மிக மலிவாக கருதுகின்றனர். இதை காணும் போது ஆத்திரம் வருகிறது. வந்து என்ன செய்ய!
உங்கள் கேள்வியின் கடைசி வரியிலேயே பதிலும் இருக்கிறது. ஆத்திரம் வந்து என்ன செய்ய... குத்திக் கொல்லவா முடியும்? உங்கள் மனதிற்கு நீங்கள் நேர்மையாக இருக்கும் வரை, இந்த ஜனங்கள் பற்றி கவலையே படாதீர்கள்; நாக்கு இருக்கும் வரை பேசிக் கொண்டே தான் இருப்பர்!
எஸ்.பிரசன்னா, ஆவடி: பாஸ்போர்ட் வைத்திருக்கும் நான், வியாபார நிமித்தம் சிங்கப்பூர் செல்லும் கோஷ்டியுடன் இலவசமாக சென்று வருவதில் தீங்குள்ளதா?
நீங்கள் சொல்லும், 'இலவசம்' 'கோஷ்டி' ஆகிய பதங்களைக் கேட்கும் போது, 'கொக்கு, குருவி' விவகாரமாக தெரிகிறதே... முன்னெச்சரிக்கை தேவை; மாட்டிக் கொள்ளாதீர்கள்!