sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 16, 2015

Google News

PUBLISHED ON : ஆக 16, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பண்ணா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த அவர் மனைவி, 'நம்ம வீட்டு முன்புறத்திலே கொஞ்சம் காலி இடம் இருக்குதே... அதுல ஏதாவது காய்கறி போடலாமா...' என்று யோசனை கேட்டார்.

சென்னையை அடுத்து, திருநீர் மலையில் புது வீடு கட்டியுள்ளார் குப்பண்ணா.

'ஆமாம்... ஆட்டுக் குட்டிகளை துரத்த நான் இருக்கிறேன் பார்...' என்று குப்பண்ணா சொல்லவும், அவர் மனைவி, 'ஹூக்கும்...' என்று முகவாய் கட்டையை, தன் தோளில் இடித்துக் கொண்டு போனார்.

'போன வாரம் ஒரு நண்பரோட பங்களா பக்கம் போயிருந்தேன். முன் பக்கத்திலே ரெண்டு கிரவுண்டு காலி இடம் இருந்துச்சு. நான் போகும் போது, சிலர், அதை தலைகீழாய்ப் புரட்டி எடுத்துக்கிட்டுருந்தனர்...' என்றார் குப்பண்ணா.

'ஏன்... ஏதாவது புதையல் சமாசாரமா?' எனக் கேட்டேன்.

'இல்லயில்ல... அந்த இடத்த, ஒரு தோட்ட கம்பெனியிடம் ஒப்படைச்சுருக்கார் நண்பர். அவங்க தோட்டம் போட்டுத் தரப் போறாங்களாம்...'

'தோட்டக் கம்பெனியா...' என்று அதிசயப்பட்டேன்.

'ஆமாம்... நர்சரின்னு சொல்வாங்களே... பூச்செடி, காய்கறிச் செடிகளுக்கு விதை, கன்று விற்பது தானே அவங்க தொழில். நம்மால் தோட்டம் போட முடியலன்னா இவங்க கிட்ட சொல்லி, அதுக்கு மாதா மாதம் பணம் கட்டிட்டா அவங்களே தோட்டம் போட்டு, தோட்டக்காரன் வைத்து, கண்ணும், கருத்துமா பராமரிப்பாங்க; தண்ணீர் சப்ளை மட்டும் தான் நம் பொறுப்பு...' என்றார்.

'ஆங்கிலத்தில சின்னச் செடி, கொடிகள் வளர்க்கும் இடத்துக்கும், 'நர்சரி'ங்கிறாங்க; சின்னக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கும் இடத்தையும், 'நர்சரி'ங்கிறாங்களே...' என்றேன்.

'ரெண்டையுமே அந்த பருவத்தில் பக்குவமாக வளர்த்தால் தான் பின்னால் உறுதியாய் நிற்கும். 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்'ன்னு குழந்தைகளைப் பற்றி சொல்வதில்லையா... ஏன்... 'கிண்டர் கார்டன்' என்கிறோமே... அதற்கு ஜெர்மன் மொழியில், 'குழந்தைத் தோட்டம்'ன்னு தான் அர்த்தம்...' என்ற குப்பண்ணா தொடர்ந்தார்...

'நான் சின்ன வயசுல புரசைவாக்கத்தில் இருக்கும்போது, ஒரு வெள்ளைக்கார அம்மாள், 'மாண்டிசோரி ஸ்கூல்'ன்னு ஒரு நர்சரி பள்ளிக்கூடம் நடத்தினார். அந்த காலத்தில், ஆங்கிலோ - இண்டியன் பிள்ளைகள் அங்க படிச்சாங்க.

'மாண்டிசோரி என்ற அம்மாள் வகுத்த முறைப்படி நடத்தப்படுகிற பள்ளிக் கூடங்களுக்கு, 'மாண்டிசோரி பள்ளிக்கூடம்'ன்னு பெயர். ஒன்றரை வயதுக்கு மேல், ஐந்து வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்காகவே இப்பள்ளி ஏற்படுத்தப் பட்டது.

'குழந்தைகள் பிறருடைய உதவியோ, பாடமோ இல்லாமல், தாங்களாகவே கற்றுக்கொண்டால் தன்னம்பிக்கை வரும். தன்னம்பிக்கை வந்தால், மற்றதெல்லாம் தன்னாலே வரும்ன்னு அவங்க சொல்றாங்க.

'இந்த மாண்டிசோரி வெள்ளைக்காரி இல்ல; இத்தாலிக்கார அம்மாள். இதுல, வேடிக்கை என்னவென்றால், உலகப் போரால் எத்தனையோ குழந்தைகள் அனாதையாவதற்கு காரணமாயிருந்த இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி தான் அந்த அம்மாளுக்கு ஊக்கமும், ஆதரவும் கொடுத்தான்...'

'தீயவனிடமும் ஏதாவது ஒரு நல்லது இருக்கும் போல...' என்றேன்.

'அறியாமையிலும் ஒரு அறிவு இருக்கும்ன்னு சொல்வாங்களே...' என்ற குப்பண்ணா, 'விஞ்ஞானி எடிசன், ஒரு ரப்பர் தொழிற்சாலைக்குப் போயிருந்தாராம்; அங்கே ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, 50,000 முறை பரிசோதனை நடத்தினாராம்.

'ஐம்பதாயிரத்து ஒன்றாவது முறை தான் வெற்றி கிடைச்சதாம். 'முதல், 50,000 முயற்சிகளும் வீண் தானே...' என்று மற்றவர்கள் அவரிடம் சொன்ன போது, 'அதெப்படி வீணாகும்... எந்தப் பரிசோதனைகள் நடத்தினால், பயன் இருக்காது என்பதற்கு, 50,000 வகைகளை இப்போது கண்டுபிடிச்சுட்டேனே...' என்றாராம்!

'கிராமபோனைக் கண்டுபிடித்தவர் எடிசன் தானே! அதைப் பேசும் எந்திரம்ன்னு அப்போ சொல்வாங்களாம்.

'எடிசனிடம் ஒருவர், 'நீங்கள் தானே முதன் முதலில் பேசும் எந்திரத்தை கண்டுபிடிச்சது?'ன்னு கேட்டாராம், 'சே சே! பேசும் எந்திரத்தை முதன் முதலில் கண்டுபிடிச்சவர் கடவுள்; அவர் தானே பெண்ணைப் படைச்சார். நிறுத்தக்கூடிய ஒரு பேசும் எந்திரத்தை தான் நான் கண்டுபிடிச்சேன்...' என்றாராம் எடிசன்...' எனக் கூறி முடித்தார் குப்பண்ணா.

பொடி டப்பியை வெளியே எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, என்னவோ சட்டென்று நினைத்துக் கொண்டவர் போல, 'ஓ...' என்று சொல்லி, திறந்த டப்பியை மூடி அருகில் வைத்தவர், கைகளை கட்டிக் கொண்டார். 'மணி... ஒரு நிமிடம் ஆனதும் சொல்லு...' என்றார்.

'எதற்கு, ஒரு நிமிடம் ஆகணும்?' என்று கேட்டேன்.

'பொடிப் பழக்கத்தை எப்படி நிறுத்தலாங்கிறதுக்கு நான் ஒரு வழி சொல்லிக் கொடுத்தேன். சிகரட் பிடிப்பதை எப்படி நிறுத்துவது என்று ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கட்டுரை படிச்சேன். அதையே இவரது பொடி போடும் பழக்கத்திற்கும் பயன்படுத்த சொன்னேன். அதை ரெண்டு நாட்களாக கடைபிடிக்கிறார்...' என்றார் குப்பண்ணா.

'அதென்ன வழி?' என்றேன்.

குப்பண்ணா விளக்கினார்:

சிகரட் பிடிப்பதில், பல செயல்கள் கோர்த்திருக்கின்றன. ஒவ்வொரு செய்கையையும் கவனித்து, உணர்ந்து செய்தால், சிகரட் பழக்கம் தானே குறையும்.

சிகரட் பிடிக்கும் உணர்வு பிறந்ததும், உடனே, சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்து விடக் கூடாது. சட்டைப் பையிலிருந்து சிகரட் பாக்கெட்டை எடுத்ததும், இப்போது பொடி டப்பியை எடுத்து பக்கத்தில் வைச்சுட்டாரே அண்ணாச்சி... அது மாதிரி வைச்சுடணும்.

பின், ஒரு நிமிடம் ஆன பின், மெதுவாக சிகரட்டை உருவணும். ஆனா, உடனே உதட்டில் வைச்சுடக் கூடாது. சிகரட்டை உருவிய பின் ஒரு நிமிடம் விரல்களிடையே வைச்சுருக்கணும், அதற்கப்புறம் உதடுகளில் செருகுவது... அப்புறம் ஒரு நிமிடம் கழித்து பற்ற வைப்பது...

இப்படி ஒவ்வொன்றையும் உணர்ந்து, 15 நாளைக்குப் பயிற்சி செய்து பாத்தால், நிச்சயமாக, 30 தடவை என்பது, 10 தடவைகளாவது குறையும், என்றார் குப்பண்ணா.

'சிகரட் பிடிப்பதில் பிராணாயாமத் தத்துவமே அடங்கியிருக்குன்னு சொல்றாங்களே...' என்றேன் குப்பண்ணாவிடம்.

'என்ன இப்படி சொல்லிட்டே?' என்றார் குப்ஸ்.

'ஆமாம்... பிராணாயாமம்ன்னா என்ன... பிராணன் என்றால் மூச்சு; யாமம் என்றால் ஆட்சி. மூச்சை மெதுவாக இழுத்து, மெதுவாக விடும் பயிற்சியால் மனதிற்கு அமைதி கிட்டுகிறது. சிகரட் பிடிக்கும் போதும் இது தான் நடக்கிறது. அதனால்தான் சிகரட் பிடித்தால் ஒரு நிம்மதி ஏற்படுகிறது என்கின்றனர்...' என்றேன்.

'ஏற்கனவே சிகரட் பழக்கத்துக்கு அடிமையாயிட்ட பலர், அந்தப் பழக்கத்தைவிட முடியாமல் தவிச்சிக்கிட்டு இருக்காங்க... நீ வேற, பிராணாயாமம், யோகம்ன்னு சொல்லி, அவங்களை உற்சாக மூட்டறியே...' என்று கோபித்தார் குப்பண்ணா!

இதைக் கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, சிரித்துக் கொண்டே ஒரு, 'டிரிபிள் பைவ்' பற்ற வைத்தார்!






      Dinamalar
      Follow us