sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 13, 2015

Google News

PUBLISHED ON : டிச 13, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணை பலியாக்காதீர்!

சகல கெட்ட பழக்கங்களும் கொண்டவர் என் முறை மாமன்; 'கால்கட்டு போட்டு விட்டால், திருந்தி விடுவார்...' என்று, என் பெற்றோர் உட்பட, உறவினர் அனைவரும் கணக்கு போட்டு, என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்கு பின், அவர் திருந்தவில்லை; என் வாழ்வு நரகமானது தான் மிச்சம்.

தீய பழக்கங்கள் கொண்டவர் என்று தெரிந்தும், அவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த என் உறவினர்கள், எனக்காக, ஒரு சில ஆறுதல் வார்த்தைகள் கூறி, வருத்தம் தெரிவித்ததோடு சரி; பின், ஒதுங்கிக் கொண்டனர். தற்போது, என் நிலையை கண்டு வேதனைப்படும் பெற்றோர், கவலையில் உருக்குலைந்து விட்டனர். நானோ, குழந்தைக்காக வாழ்க்கையோடு போராடி வருகிறேன்.

திருமணம் செய்து வைத்தால், பையன் திருந்தி விடுவான் என்பதெல்லாம், வெறும் ஏட்டுச் சுரைக்காய். பெற்றோரே... இது போன்ற வாழ்க்கைக்கு உதவாத பழமொழிகளை வைத்து, இளம் பெண்களை பலியாக்காதீர்!

— அ.தமிழரசி, சிதம்பரம்.

'பலான' ஆசை தந்த பரிசு!

சமீபத்தில், நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்றிருந்தேன். ஒவ்வொருவரும், பல விஷயங்கள் பற்றிப் பேச, பேச்சு, ஆண்களுக்குரிய, 'அந்தத் தன்மை' குறித்து, திசை திரும்பியது. தற்போது, பிரபலமாக இருக்கும், 'வயாகரா'வுக்கு சமமாக பேசப்படும், ஆங்கில மாத்திரைகள் மற்றும் மூலிகை கேப்சூல்கள் பற்றி நண்பர்கள் விவரிக்க, 'நாமும், ஒரு மாத்திரையை முயற்சித்து பார்க்கலாமே...' என, ரகசியமாக வாங்கி, விழுங்கினேன்.

ரத்த ஓட்டத்தை மாற்றி விடும் தன்மை கொண்ட அந்த மாத்திரை, எனக்கு ரத்த அழுத்தத்தை ஏற்றி விட, கடும் தலைவலியும், தலைச்சுற்றலும் ஏற்பட்டு, அப்படியே விழுந்து விட்டேன். பின், விசாரித்த போது தான், ரத்த அழுத்தம், சோகை, இதயப் பிரச்னை மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், இயற்கைக்கு மாறான, தூண்டுதல் தரும், 'வயாகரா டைப்' மாத்திரைகளை தவிர்க்க வேண்டும் என தெரிந்து கொண்டேன்.

'பலான' அனுபவங்களால் சலனப்படுவோரே... அந்த மாதிரி மாத்திரை மற்றும் லேகிய விஷயங்களில் இறங்க நினைத்தால், தகுதியான மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் இறங்குங்கள் அல்லது 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள்!

— கே.ரவிச்சந்திரன், மதுரை.

இனிய நினைவுகள்!

எங்கள் குடும்ப நண்பரின் மகளுக்கு, சமீபத்தில், மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவில் எடுக்கப்பட்ட புகைப்பட, 'ஆல்பத்தை' காட்டுவதற்காக எடுத்து வந்தார் நண்பர். அதில், முதல் பக்கத்தில், சிறு வண்ண அட்டையில் அச்சிடப்பட்டிருந்த தகவல், வித்தியாசமாக இருந்தது. அது:

* ஈரக் கைகளால், 'ஆல்பத்தை' தொடாதீர்கள்.

* வெப்பம் மற்றும் குளிர்ச்சியான இடத்தில் வைக்காதீர்கள்.

* கைகளில் எண்ணெய் பசை இல்லாமல், 'ஆல்பத்தை' கையாளவும்.

* குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளிடமிருந்து பாதுகாக்கவும்.

* பிறரிடம் கொடுக்கும் போது மேற்கண்ட குறிப்புகளை கூறி, கொடுக்கவும்.

- இது நல்ல யோசனையாக இருந்தது. இதை அனைவரும் பின்பற்றினால், திருமணம் போன்ற இனிய நினைவுகளை சுமக்கும், 'ஆல்பம்' பாழாகாமல் இருப்பதோடு, எத்தனை ஆண்டுகளாயினும், புதுப்பொலிவுடன் இருக்குமே!

வத்சலா சதாசிவன், சென்னை.






      Dinamalar
      Follow us