PUBLISHED ON : டிச 13, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது:
சிவாஜி கணேசன் நடித்த, எங்க ஊர் ராஜா படத்துக்கு கதை, வசனம் எழுதிய பாலமுருகனை அழைத்து வரச் சொன்னார் தேவர். அவர் வரவழைக்கப்பட்டதும், அவரிடம், 'உன் பேரே பாலமுருகன்னு இருக்கிறதுல எனக்கு திருப்தி. இது, பக்தி படம்; இந்தப் படம் என் ஆசை, லட்சியம்ன்னு கூட சொல்லலாம். நான் கும்புடற முருகனையே, மக்கள் எல்லாரும் கும்பிட்டு கொண்டாடணும்; அப்படியொரு கதை இருக்கா...' என்று கேட்டார் தேவர்.
பல கஷ்டங்களுக்குப் பிறகே, சிவாஜிக்கு தொடர்ந்து கதை எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார் பாலமுருகன். தேவர் பிலிம்ஸ், சினிமா எழுத்தாளர்களின் சொர்க்கபூமி; அங்கு தனக்கும் ஒரு சந்தர்ப்பம் வராதா என்று உள்ளுக்குள் ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு, அந்த முருகனே இப்படியொரு வாய்ப்பை கொடுத்தாக எண்ணி, பூரித்தார் பாலமுருகன்.
'அண்ணே... நீங்க நினைக்கிறத தருவேன்; ஆனா, கொஞ்சம் டயம் வேணும்...' என்றார்.
'என்னப்பா... எங்க கம்பெனி பத்தி உனக்கு தெரியாதா... ஒரு வாரத்துல மொத்தக் கதை, வசனத்தையும் எழுதி வாங்கிடுவேன். சண்முகம், நீ இவருக்கு எடுத்துச் சொல்லப்பா...' என்றார் தேவர்.
'அதுக்கில்லண்ணே... நானும் முருக பக்தன்; உங்க கிட்ட அத, இதச் சொல்லி திருப்திப்படுத்த முடியாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனால தான், அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்து, கதையோட வரேன்...' என்றார் பாலமுருகன்.
துணைவன் படத்துக்கு நல்ல கதாசிரியர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையுடன், அவரை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார் தேவர்.
'ஏம்பா... கண்ணதாசன் மீட்டிங் கீட்டிங்ன்னு எங்க இருந்தாலும், அததள்ளி வைச்சுட்டு வரச் சொல்லுங்க. உடனடியா பாட்டு எழுதணும்...' என்றார் தேவர்.
'அண்ணே... நாகர்கோவில் தேர்தல்ல காமராஜர் ஜெயிச்சிட்டார் இல்லயா... கவிஞர் அவரைப் பார்க்கப் போயிருக்காராம்...' என்றார் உதவி இயக்குனர் பி.எஸ்.மாரிமுத்து.
'அடே முருகா... கண்ணதாசனை கவிஞனா மட்டும் வெச்சிருக்கக் கூடாதா... புலவனுக்கு ஏன்யா அரசியல் ஆர்வத்தைக் கொடுத்து, எம் பொழைப்ப கெடுக்குறே...' என்று புலம்பினார் தேவர்.
ஆனால், அவருக்கு அதிக நெருக்கடி தராமல், சீக்கிரமாகவே வந்து விட்டார் கண்ணதாசன். கூடவே, நல்ல சேதியுடன்!
'அண்ணே... காமராஜர் வீட்டுல ஒரு புள்ளயப் பாத்தேன்; தெய்வக் கடாட்சமான முகம். உங்க படத்துல முருக வேஷம் கொடுத்தா, ஓஹோன்னு இருக்கும்...' என்றார்.
உடனே, தன் உதவியாளரை நோக்கி, 'விஸ்வநாதன் ஏன் நிக்கறே... கவிஞர் சொன்னது காதுல விழல. அட்ரசை கேட்டு கிளம்பு; குழந்தையோட வா...' என்றார் தேவர்.
தேவர் பிலிம்சிலிருந்து ஆள் வந்ததும், பேபி ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி.
ஸ்ரீதேவியின் களையான முகத்தைப் பார்த்ததும், தேவருக்கு பிடித்து விட்டது.
'முருகனே கதி என்று வாழும் கணவன், பகுத்தறிந்து பேசும் மனைவி, அவர்களுக்கு ஊனத்தோடு பிறக்கும் குழந்தை; அதன் அசைவுக்காக யாத்திரை போகும் தம்பதியர்; முடிவில், முருகனே வந்து, குழந்தையைக் குணப்படுத்துகிறான்...' என்று கதை சொல்லி, 'கதையில், வலுவான சம்பவங்கள் அதிகம் கிடையாது; ஆனா, தோதான நடிகர்களைப் போட்டால், படம் நிமிர்ந்து விடும்...' என்று பாலமுருகன் கூறிய கதை, தேவரைக் கவர்ந்து விட்டது.
'இந்தப் படத்தில், அடேயப்பா... எத்தனை முருகன் கோவில்கள் என்று ரசிகர்கள் வாயைப் பிளக்க வேண்டும். கிளைமாக்சை திருச்செந்தூரில் வைத்துக் கொள்ளலாம்...' என்றார் தேவர்.
ஓடுகிற குதிரை மீது பணம் கட்டுவதே, சினிமாவில் வெற்றிக்கு வித்திடும் என்பதை நன்றாக புரிந்து வைத்திருந்தார் தேவர். 1968ல் மார்க்கெட்டில் இருந்த பிரபலங்களில், ஏவி.எம்.ராஜன் குணச்சித்திர கதாநாயகனாக கருதப்பட்டார்.
'நடிப்பில் சிவாஜிக்கு அடுத்து அவரே வருவார்...' என்று பத்திரிகைகள் எழுதிய காலம் அது. துணைவன் படத்திற்கு, ராஜனை ஒப்பந்தம் செய்தார் தேவர்.
யாரை கதாநாயகியாக போடலாம் என யோசித்த போது, அப்போது, கே.பாலசந்தரின் படங்கள், சவுக்கார் ஜானகிக்கு பொற்காலத்தை ஏற்படுத்தியிருந்தன. அதனால், சவுகார் ஜானகியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.
அத்துடன், படம் வெற்றி பெற, ஆன்மிகத்தில் புகழ் பெற்றவர்களையும் நடிக்க வைக்க விரும்பினார். கே.பி.சுந்தராம்பாளிடம் கேட்ட போது, 'முருகனை என் வாயாரப் பாட, நிறைய சந்தர்ப்பம் தரணும்; அப்படின்னா ஒத்துக்கிறேன்...' என்றார்.
கே.பி.எஸ்சின் பதிலில், துள்ளிக் குதித்தார் தேவர்.
'அம்மா... முருகன் புகழை, உங்க வாயால கேக்கறதுக்கு, மக்கள் விடிய விடிய காத்திருக்காங்க; உங்க விருப்பம் போல, எத்தனைப் பாட்டு வேணும்ன்னாலும் பாடுங்க...' என்றார்.
'ஒவ்வொரு தொகையறாவுக்கும் தனித்தனியா தொகை தந்தா சரி...' என்றார் கே.பி.சுந்தராம்பாள்.
தேவர் எண்ணியபடியே, துணைவன் படம் வளர்ந்தது; ஆனாலும், படத்தில் ஏதோ ஒரு குறை இருப்பதாக அவர் மனதில் தோன்றியது. அன்று வழக்கம் போல், காலை, 8:00 மணிக்கு தன் அலுவலகத்திற்கு வந்தவர், அன்றைய நாளிதழை பிரித்தார். அதில், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், வாரியாரின் கந்த புராணத் தொடர் சொற்பொழிவு இருப்பதாக, விளம்பரம் பிரசுரமாயிருந்தது.
'துணைவன் படத்தில் வாரியார் நடித்தால், படத்துக்குக் கூடுதல் பலம் கிடைக்குமே...' என எண்ணினார் தேவர்.
தன் அறையில் மாட்டப்பட்டிருந்த மிகப் பெரிய மருதாசல மூர்த்தியின் படத்தை பார்த்தபடியே, 'இதுவரைக்கும் எடுத்த வரை துணைவன் படம் நல்லா வந்திருக்கு; வாரியாரும் நடிச்சா... ஆனா, அவர் நடிப்பாரா... முருகா... நீ கண் அசைத்தால் முடியாதது எதுவுமில்ல; மனசு வையடா...' என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, போன் அடித்தது. மறுமுனையில் வாரியார்!
தேவரால் நம்பவே முடியவில்லை. 'முருகா... என்ன சக்தியடா உனக்கு...' என மெய்சிலிர்த்தார்.
சிறிது நேரத்தில், வயலூர் முருகன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை கேட்டு, தேவரைத் தேடி வந்திருந்தார் வாரியார். ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவிலும், வாரியாரை அனுப்ப மனசில்லாமல் பேசிக் கொண்டிருந்தார் தேவர். கடைசியில், தன் மனதில் இருந்ததை அவரிடம் கேட்டே விட்டார்.
'சினிமாவில் நடிக்கறீங்களா சாமி... துணைவன்னு பக்திப் படம். முருகனோட பெருமையைச் சொல்றேன். ஊர்ல ஒரு கோவில் பாக்கி இல்லாம அத்தனையும் காட்டப் போறேன். உங்க வயலூர் உட்பட! நீங்களும் எம் படத்துல இருந்தா மக்கள் அதிகமா வருவாங்க...' என்றார் தேவர்.
நெற்றித் திருநீற்றுப்பட்டையில், தேள் ஊர்வது போலிருந்தது வாரியாருக்கு! சில நிமிடங்கள் அந்த அறையில் அமைதி நிலவியது. தேவர் மகா கெட்டிக்காரர்; ஒரு பக்கம் வள்ளல்; மறுபுறம் தேர்ந்த வியாபாரி. வாரியாருக்கு எழுந்து கொள்ளத் தோன்றியது.
அருணகிரிநாதர் படத்தில் வாரியார் நடிப்பதாக, 1963லேயே செய்திகள் வெளி வந்த போது, தி.நகரில் நடந்த ஆன்மிக கூட்டத்தில், 'ஆபாசம் மிகுந்த சினிமா உலகில் அடியெடுத்து வைப்பேனா?' என்று, அதற்கு பதில் சொன்னார் வாரியார்.
தேவரிடம் எதுவும் சொல்லவில்லை வாரியார். புவனகிரியில் சொற்பொழிவு இருந்ததால், அங்கு சென்று விட்டார். டிரங்கால் போட்டுப் பேசினார் தேவர். 'சாமி... நீங்க கதாகாலட்சேபம் செய்யறத போட்டோ புடிச்சுப் பத்திரிகையில போடுறது மாதிரி, நான், சினிமா கேமரால படம் எடுக்கப் போறேன்; அவ்வளவு தானே... நீங்க நீங்களா நின்று பேசறீங்க. படத்துல, உங்க ஆசாரம், சீலம் குறையற மாதிரி எதுவும் இல்ல; வாகினில செட்டு தயாரா இருக்கு; ரெண்டு நாட்கள் எங்கூட இருந்தாப் போதும்...' என்றார்.
வாரியார் அசைந்து கொடுக்கவில்லை. அதனால், புவனகிரிக்கே புறப்பட்டு சென்ற தேவர், 'நான் கேட்டு நடிக்க மாட்டேன்னு சொன்னது நீங்க ஒருத்தர் தான். காட்சிப்படி, திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட கதாநாயகன் வேலாயுதம், உங்க உபன்யாசத்தாலே மனம் திருந்தி, 'முருகா சரணம்'ன்னு கதறுறான். இதனால, உங்க பெருமை தான் அதிகமாகும்; புரிஞ்சுக்குங்க...' என்றார்.
அரை மனதோடு ஒப்புக் கொண்டார் வாரியார்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்

