தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 13, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 13, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று குப்பண்ணா வீட்டிற்கு சென்று இருந்தேன். பெங்களூருவில் இருந்து வந்திருந்த, தன் மகள் வயிற்று பேரனுக்கு, உலக விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார். எட்டு வயதான அந்த சிறுவன், வயதுக்கு மீறிய கேள்விகளை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். சிறுவனின் ஆர்வத்தை மெச்சி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நேருவைப் பற்றி, குப்பண்ணா கூற ஆரம்பித்ததும், 'நேருங்கிற வார்த்தைக்கு பொருள் என்ன தாத்தா?' என்று கேட்டான்.

'நேருன்னா இந்தியில், கால்வாய்ன்னு அர்த்தம்...' என்றார் குப்பண்ணா.

'கால்வாய்க்கும், நேருவுக்கும் என்ன தாத்தா சம்பந்தம்?' என்றான் பொடியன் விடாப்பிடியாக!

'முந்நூறு வருஷங்களுக்கு முன், முகலாய மன்னரின் அழைப்பை அடுத்து, பண்டித ராஜ்கவுல் என்பவர், காஷ்மீரிலிருந்து குடிபெயர்ந்து, டில்லிக்கு வந்தார். அந்தக் காலத்தில நகரோட குறுக்கே ஒரு கால்வாய் ஓடியது. அதுக்கு பக்கத்தில அவருக்கு வீடு வழங்கப்பட்டதாம். அதனால், ராஜ்கவுல் வழிவந்த பரம்பரையினரை நேருக்கள் என்று அழைக்க ஆரம்பிச்சாங்க...' என்றார் குப்பண்ணா.

'நேருவுக்கு, 'பண்டிதர்' பட்டம் எப்படி வந்துச்சு?' என்று கேட்டான் சிறுவன்.

'காஷ்மீரில் இருக்கும் பிராமணர்கள் எல்லாருமே, 'பண்டிதர்'கள் தான்!'

தொடர்ந்து, பொடியன் கேட்ட கேள்விகளும், குப்பண்ணாவின் பதில்களும்:

'நேரு பிறந்த ஊர் எது?'

'எந்தப் பிரயாகையில், இறுதியாக அவரது அஸ்தி கரைக்கப்பட்டதோ, அதுவே தான், அவரது பிறப்பிடமும்! அலகாபாத் என்பது, பிரயாகையின் மற்றொரு பெயர்...'

'நேருவின் அம்மாவோட பேர் என்ன?'

'ஸ்வரூப் ராணி; நேருவின் அப்பா, மோதிலால் நேருவுக்கு பிள்ளைப் பருவத்திலேயே கால்கட்டு போட்டிருந்தனர். தலைப் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்து விட்டனர். மோதிலால் நேருவின் இரண்டாம் மனைவி தான், ஸ்வரூப் ராணி...'

'நேரு தான் ஸ்வரூப் ராணியின் முதல் குழந்தையா?'

'நேருவுக்கு முன் ஒரு குழந்தை பிறந்து, தங்காமல் போய்விட்டது. அதேபோல், 16 ஆண்டு கழித்து, நேரு பிறந்த அதே நவ., 14ம் தேதியில், மற்றோர் ஆண் குழந்தை பிறந்து, இறந்து விட்டது...'

'ராஜ்கவுலின் சந்ததியினர், எவ்வாறு

வாழ்க்கை நடத்தினர்?'

'முகலாய மன்னர்களின் பெருமை போல், ராஜ்கவுலுக்கு வழங்கப்பட்ட நிலவுரிமைகளும் தேய்ந்து, கடைசியில் அவரது பேரன் காலத்தில் ஒரேயடியாகக் கைகழுவிப் போயின. நேருவின் தாத்தா கங்காதரர், டில்லியில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்...'

'நேருவின் தந்தை மோதிலால் எது வரை படித்தார்?'

'பன்னிரெண்டாம் வயது வரை அராபியும், பாரசீக மொழியுமே அவருக்குக் கை வந்தவையாக இருந்தன. அதன் பின்னரே, அவர் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் பயின்றார்...'

'கல்லூரியில் பட்டம் பெற்றாரா?'

'கல்லூரியில் படித்தார்; ஆனால், பட்டம் பெறவில்லை. காரணம், முதல் நாள் தேர்வு எழுதினார்; ஆனால், சரியாக எழுதவில்லை என்று தோன்றியதால், மற்ற பரீட்சைகளை எழுதவில்லை. பின்னர் பார்த்தால், முதல் பரீட்சையில் அவருக்கு நல்ல மார்க் கிடைத்திருந்தது. பட்டம் பெறாமலே, அக்காலத்திலிருந்த முறைப்படி, அவர் வழக்கறிஞர் பரீட்சை எழுதி, முதலாவதாகத் தேறி, நீதிமன்றத்தில் கால் வைத்தார்...'

'வெற்றி கிடைத்ததா?'

'வண்டி, வண்டியாக! முதல் வழக்கில் அவருக்குத் தரப்பட்ட பீஸ் வெறும் ஐந்து ரூபாய்! ஆனால், சில ஆண்டுகளுக்குள், மாதம், 2,000 ரூபாய் சம்பாதிக்கும் படா வக்கீலாக உயர்ந்து விட்டார். அந்தக் காலத்துல, 2,000 ரூபாய்ங்கிறது இந்தக் காலத்தில், பல லட்சம் ரூபாய்க்கு சமம். 45 வயது நெருங்கிக் கொண்டிருந்த போது, மோதிலால் நேருவின் மாத வருமானம், 10,000த்தை தாண்டி விட்டது.

'ஆனால், அவர் பெருத்த செலவாளி; அவரது வீடான, ஆனந்த பவனத்தில் தான், அலகாபாத்திலேயே முதன் முதலாக நீச்சல் குளம், மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய் இணைப்பை கொண்டு வந்தார். இவர் தான். தம் மாளிகைக்கு மேஜை, நாற்காலி, சோபா வாங்கும் பொருட்டு, அவர் நான்கு முறை ஐரோப்பா சென்றார். குதிரைகளும், வண்டிகளும், பின்னர், கார்களும் அவரிடம் ஏராளமாக இருந்தன...' என்று குப்பண்ணா கூறிக்கொண்டிருக்கும் போதே, இடையில் புகுந்து, 'ஜாதி, ஆசாரங்களுக்கு அவர் மதிப்பு கொடுத்தாரா?' என்று, கேட்டேன்.

'அவர் மேல்நாடு சென்று திரும்பியதும், பிராயச்சித்தம் (கடல் கடந்து சென்று திரும்பினால் தீட்டாம்) செய்தே ஆக வேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்தினர் அவர் சமூகத்தினர்.

'வெடித்ததே எரிமலை! 'எது வந்தாலும் வரட்டும்; பிராயச்சித்தம் என்ற முட்டாள்தனத்தில், ஈடுபட மாட்டேன்; உங்கள் ஆசாரம் எப்படிப்பட்டது என்பது எனக்கு தெரியும். அவசியமானால், உங்கள் ஜாதி ஆசாரத்தை நார் நாராகக் கிழித்தெறிவேன்...' என்று முழங்கினார் மோதிலால் நேரு...'

'நேருவின் தாய் எப்படிப்பட்டவர்?' என்று கேட்டான் சிறுவன்.

'அவர் பழமையில் ஊறியவர்; பூஜை செய்வது, விரதம் இருப்பது மற்றும் தீர்த்த யாத்திரை செல்வதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். சின்னஞ்சிறு கைகளும், பாதங்களுமாக, பார்ப்பதற்கு பொம்மை போல் இருப்பாராம்; ஆனால், நோயாளி. நடமாடின நாட்களைக் காட்டிலும், அவர் படுக்கையில் கிடந்த நாட்களே அதிகமாம்...'

'சிறுவனாயிருந்த போது, நேருவின் குணம் எப்படி இருந்தது?'

'கூச்ச சுபாவமுள்ளவராகவும், அதிகம் பேசாதவராகவும் இருந்தார்...'

'அலகாபாத்தில் நேரு பள்ளிக் கூடம் போனாரா?'

'நேருவின் பெரியப்பா, இங்கிலாந்துக்கு பயணமான போது, அவரது பிள்ளை, ஆனந்த பவனுக்கு வந்தான். அவனும், ஜவஹரும் சம வயதுள்ளவர்கள். இருவரும் கான்வென்ட் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆறு மாதம் சென்றதும், அந்த பையன் தன் வீட்டுக்குப் போய் விடவே, நேருவின் கான்வென்ட் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது; அப்போது அவருக்கு வயது ஏழு!'

'அத்தனை வயதாகும் வரை, அவர் படிக்கவே இல்லையா?'

'வீட்டிலேயே, ஆங்கிலேயே ஆசிரியைகளிடம் கல்வி கற்றார்...' என்றார் குப்பண்ணா.

உடனே, நான், 'அவரது பிஞ்சு உள்ளத்தில், நாட்டுப் பற்றை முதன் முதலாக விதைத்தவர் யார்?' என்று கேட்டேன்.

'அந்தப் பெருமை, ஆனந்தபவனில் பணியாற்றிய, முன்ஷி முபாரக் அலி என்ற, முஸ்லிமையே சாரும். சிப்பாய் கலகத்தை பற்றிய பல கதைகளை சுவைபடச் சொல்வார் முபாரக் அலி. அத்துடன், இந்து சமய புராணக் கதைகளையும் அவரிடம் தான் கேட்டறிந்தார்!'

'நேரு எப்போது இங்கிலாந்து போனார்?' என்று கேட்டேன்.

'இங்கிலாந்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நேருவை சேர்க்கும் பொருட்டு, மோதிலால், 1905ல், கப்பலேறினார். கூட, நேருவின் தாயும், நான்கு வயதுத் தங்கை சரூப்பும் (விஜயலட்சுமி)

உடன் வந்தனர்...'

'பள்ளியில் இடம் கிடைத்ததா?' என்று ஆவலாக கேட்டான் சிறுவன்.

'சில ஆங்கிலேய நண்பர்களின் உதவியால், மோதிலால் தம் பிள்ளையை, ஹாரோ பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்தபின், சில மாதம் இங்கிலாந்தில் தங்கியிருந்து, பின், இந்தியா திரும்பினார். அப்போது நேருவுக்கு வயது, 16!'

'தம் ஒரே பிள்ளையை விட்டு, அவர் எப்படிப் பிரிந்திருக்க முடிந்தது?' என்று கேட்டேன்.

'இந்தியாவிற்கு அவர் புறப்பட்டு விட்டாலும், அவர் உள்ளம் ஹாரோ பள்ளியில் தங்கி விட்டது என்பதற்கு, கப்பலில் அவர், நேருவுக்கு எழுதிய கடிதமே சான்று...

'இந்த உலகத்தில், ஏன், இனி வரக்கூடிய எந்த பிறவியிலும், நீயே எங்களுக்கு அரிய பொக்கிஷம் ஆவாய். அதை நினைவில் வைத்துக் கொள். உன்னை ஆளாக்கிவிட வேண்டும் என்பதால்தான், இந்தப் பிரிவுத் துயரைத் தாங்கிக் கொள்கிறோம். உன்னை, எங்களோடு வைத்துக் கொண்டிருந்து, கடைசியில் கொள்ளைத் தங்கமும், எள்ளத் தனை கல்வியும் விட்டுச் செல்வது சுயநலமாகும்; பாவமாகும்...

'உன்னைப் பிரிந்தபோது தான், உன்னிடத்தில் எனக்குள்ள பாசம் எவ்வளவு என்று தெரிய வந்தது. உடலையும், மனதையும் செம்மையாக வைத்துக் கொள்.

'இன்னும் பக்கம் பக்கமாக எழுதுவேன்... மணி ஒன்றாகி விட்டது. ஆகவே, விடைபெற்றுக் கொள்கிறேன். என் கண்ணான செல்லமே, உன்னை நீயே பாதுகாத்துக் கொள்வதன் மூலம், உன் பெற்றோரை பாதுகாத்தவன் ஆவாய்...' என்று எழுதியிருந்தார்...' என்றார் குப்பண்ணா.

'மாணவனாக இருந்தபோது நேருவுக்கு அரசியலில் ஈடுபாடு இருந்ததா?' என்று கேட்டேன்.

'இருந்தது; நேருவுக்கு அடிக்கடி மாம்பழம் அனுப்புமாறு மும்பை பழ வியாபாரி ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார், மோதிலால். கிடைத்ததற்கரிய அந்தப் பழங்களை காட்டிலும், இந்தியாவிலிருந்து பழக் கூடையில் மாம்பழம், பேக் செய்து வந்த செய்தி தாள்களையே பெரிதும் விரும்பினார் நேரு...'

'படிப்பை முடித்து, எப்போது இந்தியாவிற்கு திரும்பி வந்தார் நேரு?' என்று கேட்டான் பொடியன்.

'பாரிஸ்டர் பட்டத்தோடு, 23வது வயதில் திரும்பினார்...' என்றார் குப்பண்ணா.

அவர்களின் கேள்வி, பதில் தொடர்ந்து கொண்டிருக்க, ஆபீசுக்கு நேரமாகி விட்டதால், நான், 'ஜூட்' விட்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us