த.வந்தனா, சிறுகடம்பூர்: வேலைக்குப் போகும் பெண் என்ற காரணத்தால், பிற ஆண்களுடன் தொடர்பு இருக்குமோ என சந்தேகிக்கும் கணவனை என்ன செய்வது? இந்த சங்கடத்தில் இருந்து மீள பெண்களுக்கு என்ன வழி?
இப்படி சந்தேகக் குணம் கொண்ட ஆண்கள் திருந்த ஒரே வழி, 'வேலையிலிருந்து நின்று விடுகிறேன்...' என்று கூறினாலே போதும்; ஆனால், இது வெறும் மிரட்டலாக மட்டுமே இருக்க வேண்டும்; நிஜத்தில், செயல்படுத்தி விடக் கூடாது. மனைவியின் வருமானத்தை இழக்க, எந்த கணவன் தான் துணிவான்? சந்தேகக் கேள்விகள் கேட்பது நின்று விடும்!
எஸ்.சீனிவாசன், கூடுவாஞ்சேரி: தினமும் சூரியன் காலையில் உதிக்கிறதே... இது திடீரென்று நின்று விட்டால்...
கவலையேபடாதீர்கள்... இன்னும், 50 ஆயிரம் லட்சம் ஆண்டுகள் ஒளி வீசும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வளவு காலமா நாம் உயிருடன் இருக்கப் போகிறோம். இன்னொரு உபரித் தகவல்: சூரியனின் ஒளி, பூமியை அடைய, 8.3 நிமிடம் ஆகிறதாம்!
எ.முத்தரசன், உசிலம்பட்டி: இன்றைய காலகட்டத்தில், துணிச்சல் யாருக்கு அதிகம்? ஆண்களுக்கா, பெண்களுக்கா?
இயற்கையிலேயே பெண்ணுக்கு துணிவு அதிகம். அதனாலேயே அவர்களால் பல வேதனைகளையும், வலிகளையும் தாங்கி, சமாளிக்க முடிகிறது. ஆண் வெளிகாட்டும் துணிவை, பெண்ணாலும் வெளிகாட்ட முடியும். ஆனால், இந்த சமூகம் அவளைத் தட்டி வைத்துள்ளது!
எஸ்.கே.சுவாதி, மயிலாப்பூர்: உலகிலேயே பெரும் பணக்காரர் என யாரை கூறுவீர்கள்?
'இப்போது இருப்பதே போதும்...' என நினைப்பவர் எவரோ, அவரே உலகில் பெரிய செல்வந்தர். உங்களுக்கு தெரிந்து அப்படி யாரும் இருக்கின்றனரா?
எஸ்.பி.தேவராஜா, கிருஷ்ணகிரி: புகழ் யாரைத் தேடி வரும்?
புத்திசாலிகளை! அது இல்லாதவர்கள் தேடிப் போனாலும் கிடைக்காது; பணத்தால் அதை வளைத்துப் போட்டாலும், நீண்ட நாட்கள் ஒட்டிக் கொண்டு இருக்காது!
பி.பகவன்தாஸ், தேனி: உடல் பருமனையும், தொப்பையையும் குறைக்க, பல மருந்து கம்பெனிகள் விளம்பரம் கொடுக்கின்றனவே... வாங்கி சாப்பிட்டு பார்க்கலாமா?
சேர்த்து வைத்துள்ள காசை ஏன் கரியாக்க நினைக்கிறீர்கள்? சோம்பலை மூட்டைக் கட்டி, வீட்டின் கூடத்தில், 200 முறை தினமும் குதியுங்கள். அதுதான், 'ஸ்கிப்பிங்' ஆடுங்கள்... தொப்பை, கிப்பை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்!
கே.சையத், கோவை: குற்றமே இல்லாத மனிதர்கள் உலகில் இருக்கின்றனரா?
இருக்கவே முடியாது; துளையே இல்லாமல் நாதஸ்வரம் செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்கள். மனிதனாக பிறந்தவன், குற்றமுள்ளவனாகத் தான் இருப்பான். அவற்றைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்பவன், பிறந்ததன் நோக்கத்தை அடைய முயல்கிறான். மற்றவன், சாதாரண மானுடனாகவே இருந்து மறைகிறான்!

