sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அரும்புகள் மலரட்டும்!

/

அரும்புகள் மலரட்டும்!

அரும்புகள் மலரட்டும்!

அரும்புகள் மலரட்டும்!


PUBLISHED ON : டிச 13, 2015

Google News

PUBLISHED ON : டிச 13, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வேலு... வந்து ரெண்டு நாளாச்சு; ஊருக்கு கிளம்பறேன்,'' என்றார் பெரியசாமி.

''அண்ணே... இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டு போகலாமே...''

''இல்லப்பா... உங்களப் பாக்கணும்ன்னு தான், குத்தகை பணத்தை கொடுக்க நானே நேர்ல வந்தேன். நீங்களும், வேலை வேலைன்னு ஓடறீங்க; எனக்கும் ஊர்ல நிறைய ஜோலி இருக்கு,'' என்றார்.

''அதுக்குள்ள கிளம்பணுமா மாமா?'' என்றாள் வேலுச்சாமியின் மனைவி.

''வாத்தியாரு நானே லீவு போட்டா, மாணவர்களும் சேர்ந்து லீவு போடுவாங்கம்மா,'' என்றார்.

''பெரியப்பா... நானும் உங்களோடு ஊருக்கு வரட்டுமா?'' என்றான், வேலுச்சாமியின் மகன் முகில்.

''தாராளமா வாப்பா...'' என்றவர், வேலுச்சாமி மனைவியிடம், ''முகிலுக்கு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை விட்டாச்சு. நீங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடுறீங்க... இவன் வீட்டுல தனியாத் தானே இருப்பான். நான் இவன ஊருக்கு கூட்டிட்டு போறேன். உங்க அக்காவும், முகிலை பார்த்து நாளாச்சுன்னு, புலம்பிட்டு இருக்கா,'' என்றார்.

''மாமா... அவனை நீச்சல், பாட்டு, கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு அனுப்பலாம்ன்னு இருக்கேன்,'' என்றாள் வேலுச்சாமியின் மனைவி.

''அதெல்லாம் இருக்கட்டும்மா... முதல்ல, இந்த சென்னையில ப்ளாட்டிலேயே அடைஞ்சு கிடைக்காம, நம்ம கிராமத்தையும் பார்த்துட்டு வரட்டுமே... என்ன வேலு... நீ தான் எடுத்துச் சொல்லேன்...'' என்றார்.

''ரெண்டு மாசம் லீவு இருக்குல்ல, அண்ணாவுடன் கிராமத்துல ஒரு மாதம் இருந்துட்டு வரட்டுமே! அப்பறம் கிளாஸ்க்கு அனுப்பலாம்,'' என்று சொல்ல, அரை மனதுடன் சம்மதித்தாள், வேலுச்சாமியின் மனைவி.

முகிலுக்கு குஷியாகி விட்டது.

இரவு, ரயிலில் ஏறி அமர்ந்ததும், ''பெரியப்பா... எனக்கு அங்கு விளையாட கம்ப்யூட்டர் இருக்கா?'' என்று கேட்டான் முகில்.

''அதை விட நிறைய விளையாட்டுக இருக்கு,'' என கூற, 11 வயது முகிலுக்கு, முகத்தில், மகிழ்ச்சி பூத்தது.

அதே புன்னகையுடன் தூங்கினான். காலை, 6:30 மணிக்கு, ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, காளை மாட்டு சிலை பேருந்து நிலையத்திற்கு வந்து, பாசூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். சில்லென்று முகத்தில் வீசிய காற்றில், மீண்டும் தூங்கி விட்டான் முகில். வெந்தபாளையம் வந்ததும், அவனை எழுப்பி, கீழே இறங்கிய பெரியசாமி, முகிலின் கையைப் பிடித்தபடியே நடந்தார்.

''ஏனுங்க வாத்தியாரய்யா... பொடுசு யாருங்க?''

''தம்பி மவன்.''

''பெரியப்பா... இங்க ஆட்டோ வராதா?'' எனக் கேட்டான் முகில்.

''அதெல்லாம் டவுன்ல்ல தான் இருக்கும்,'' என்றார்.

மண் சாலையில் நடந்து பழக்கமில்லாத முகில் சோர்ந்து போக, அவனை தோள் மீது தூக்கி வைத்து, நடிகர் ராஜ்கிரண் போல் நடந்து சென்றவரிடம், வழியில் சந்தித்தவர்கள் எல்லாம், யார் என விசாரிப்பதும், தம்பி மகன் என்று அவர் சொல்வதையும், அவர்கள் தன்னை பார்ப்பதையும் உணர்ந்து, வெட்கத்துடன், பெரியப்பாவின் தோள் மீது சவாரி செய்தான் முகில்.

''முகில்... நம்ம வீடு வந்தாச்சு,'' என்றவர், ''சரசு... யாரு வந்திருக்காங்கன்னு பாரு...'' என்றார்.

''அட! முகில் குட்டி. வா வா... இப்பத்தான் நம்ம ஊருக்கு வழி தெரிஞ்சிருக்கா... அதுசரி உங்க அப்பன், ஆத்தா கூட்டிட்டு வந்தா தானே, நீயும் வருவே,'' என்று அவளே கேள்வியும் கேட்டு, பதிலும் கூறிக் கொண்டாள்.

பெரியசாமியை விட, வேலுச்சாமி, 10 வயது சின்னவர். பெரியசாமிக்கு குழந்தை இல்லாததால், வேலுச்சாமியின் மகன் மீது, அளவு கடந்த பாசம் வைத்திருந்தனர்.

''சரசு... அவன் எது சாப்பிட கேட்கிறானோ, செய்து கொடுத்துடு,'' என்று கூறியவர், வேகமாய் பள்ளிக்கு கிளம்பினார்.

''பெரியம்மா... பெரியப்பா ஸ்கூல் எங்க இருக்கு?'' என்று கேட்டான் முகில்.

வெளியே கூட்டி வந்த சரசு, ''அதோ... அங்கே மாரியம்மன் கோவில் தெரியுதா... அதுக்கு பக்கத்துல தான் பள்ளிக்கூடம் இருக்கு,'' என்றாள்.

''நான் அங்க போகட்டுமா?'' என்று ஆர்வமாக கேட்டான்.

''குளிச்சு, சாப்பிட்டுட்டு போகலாம்,'' என்று கூற, விரைவாக குளித்து கிளம்பினான். அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டாள் சரசு.

சென்னையில், தன் அம்மா வேலைக்கு செல்வதால், அவனே எடுத்து சாப்பிடுவான்; இங்கு பெரியம்மா ஊட்ட, நிறைய சாப்பிட்டான். பின், பெரியப்பாவின் பள்ளிக்கூடத்திற்கு வந்தான். அது, ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் ஆரம்பப் பள்ளி. ஒரு தலைமையாசிரியர் மற்றும் இரு ஆசிரியர்கள் மட்டுமே உண்டு.

பள்ளிக்குள் நுழைந்த போது, மரத்தடியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பெரியப்பா.

''சார்... சார்...'' என்று பிள்ளைகள் கோரஸாக கூப்பிடவும், ''என்ன...'' என்றார். அவர்கள் கை காட்ட, திரும்பிப் பார்த்தார்; முகில் நின்று கொண்டிருந்தான்.

''இங்கே வந்து இவங்களோடு உட்கார்ந்துக்கோ,'' என்று கூறிவிட்டு, வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்.

பாடத்தை கவனியாமல், அவனையே ஓரக் கண்ணால் பார்த்தனர், மாணவர்கள். அப்போது, ஒரு பையன், ''சார்... உங்கள தலைமை ஆசிரியர் கூப்பிடுறார்,'' என சொல்லவும், ''பசங்களா... சத்தம் போடாம, அமைதியா இருங்க; வந்துடறேன்,'' என்று சொல்லி, அவர் சென்றதும், முகிலை சூழ்ந்தனர் மாணவர்கள்.

''நீ எந்த ஊரு?''

''சென்னை.''

''அங்கே பள்ளிக்கூடம் எல்லாம் பெரிசு பெரிசா இருக்குமா?''

''ஆமாம்!''

''அப்புறம் சினிமா படம் பிடிப்பாங்களா... நீ விஜய், சூர்யா, விமல், தமன்னாவ பாத்து இருக்கியா?''

''இல்ல...''

'டேய்... இவன் சென்னையில இருக்கான்; ஆனா, இவங்கள எல்லாம் பாக்கலையாம்...' என சோகமாக கூறினர். அப்போது பெரியசாமி வருவது தெரிந்து, அவனை விட்டு விலகி, அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.

அங்கு நடத்தப்பட்ட பாடங்களில், ஆங்கிலம் மட்டுமே அவனுக்கு புரிந்தது. கணக்கு, அறிவியல் பாடங்கள் தமிழ் வழியானதால், முகிலுக்கு விளங்கவில்லை.

மதிய உணவுக்கான மணி அடித்ததும், பையிலிருந்து தட்டை எடுத்துக் கொண்டு மாணவர்கள் ஓட, அவர்களை வியப்போடு பார்த்த முகில், ''எதுக்கு பெரியப்பா இப்படி வேகமா போறாங்க?'' என்று கேட்டான்.

''இவங்களுக்கு இங்க சாப்பாடு போடுவாங்க; அதுக்குத் தான் போறாங்க.''

''வீட்டிலிருந்து எடுத்து வர மாட்டாங்களா?''

''இல்லப்பா... ஏழைக் குழந்தைங்க, வறுமையால படிக்காம போயிடக் கூடாதேங்கிற காரணத்தால, அரசு அவங்களுக்கு இலவச கல்வியும், சாப்பாடும் கொடுக்குது,'' என்றார்.

மாணவர்கள், தட்டேந்தி வாங்கி சாப்பிடுவதை, வேடிக்கை பார்த்த முகில்,''பெரியப்பா... நானும் இவங்களோடு சேர்ந்து சாப்பிடட்டுமா?'' என்று கேட்டான்.

மறுப்புச் சொல்ல முடியாமல், ''ஒரு நாள் மட்டும்,'' என்று சொல்லி சம்மதித்தார் பெரியசாமி.

மதிய உணவுக்குப் பின், மாணவர்கள், மீண்டும் முகிலை சூழ்ந்தனர்.

அவனிடம், மாற்றி மாற்றி கேள்வி கேட்க, முகிலுக்கு ஒரே மகிழ்ச்சி!

''இங்கே வாயேன்,'' என்று நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் கூப்பிட, அவனுடன் போனான் முகில். அங்கே பள்ளிக்கு பின், தோட்டம் இருந்தது.

ஒவ்வொரு செடியையும், மரத்தையும் சுட்டிக் காட்டி, ''இந்த செடி கந்தன் நட்டு வச்சது, இத வள்ளி வச்சா; அதனால வள்ளி மரம். அதோ... நான் வச்ச முருங்கை மரம்; இன்னிக்கு சாம்பாருக்கு என் மரத்துல இருந்து தான் காய் பறிச்சாங்க. சாம்பார் ருசியா இருந்துச்சுல்லே...'' என்றான்.

கூட வந்த இன்னொருவன், ''உங்க ஸ்கூல்ல தோட்டம் இருக்கா,'' எனக் கேட்க, ''இல்ல,'' என்றான் பரிதாபமாக!

இதையெல்லாம் பார்த்த போது, முகிலுக்கு வியப்பாக இருந்தது. 'சின்ன பள்ளிக் கூடத்துல தோட்டம் இருக்கு; ஆனா, நம்ம ஸ்கூல் எம்மாம் பெரிசு... அங்க மரம் மட்டும் தான் இருக்கு; ஊருக்கு போனதும் நம்ம பிரண்ட்சுக கிட்ட இதையெல்லாம் சொல்லணும்...' என்று நினைத்தான்.

மறுபடியும், 2:00 மணிக்கு வகுப்பு துவங்கியது; மணி, 3:00 ஆனதும் எல்லாரும், 'திமுதிமு'வென்று மைதானத்திற்கு விளையாட ஓடி வந்தனர்.

'இங்கு ஐந்தாம் வகுப்பு வரை, மொத்த பிள்ளைகளே, 70 பேர் தானாம். நம்ம ஸ்கூல்ல ஏ, பி ரெண்டு செக் ஷன் சேர்த்தாலே, 80 பேர் இருப்போமே...' என நினைத்து, அவர்களையே ஆச்சரியமாக பார்த்தான்.

அவனருகில் வந்த ஒரு பெரிய பையன், ''உன் பேரென்ன?'' என்று கேட்டான்.

''முகில்...''

''உனக்கு, வாத்தியாரு என்ன சொந்தம்?''

''பெரியப்பா.''

''இன்னிக்கு மட்டும் நாங்க விளையாடுறத பாத்துக்கோ... நாளையிலிருந்து உனக்கு பிடிச்ச விளையாட்டில் சேர்ந்துக்கோ,'' என்றான்.

''தினம் விளையாடுவீங்களா?''

''ஆமாம்.''

''எங்க ஸ்கூல்ல ரெண்டு நாள் தான் பி.டி., பீரியடு!''

''பாவம்ப்பா நீங்க... சரி... இங்க இருக்கற வரைக்கும் தினம் விளையாடலாம்!''

''ம்ம்ம்...'' தலையசைத்தான் முகில்.

'கொழை கொழையாம் முந்திரிக்காய்' என்று ஒரு, 'க்ரூப்' விளையாட, மற்றொரு குழு, கபடி கபடி; சிலர், கோ கோ; இன்னும் சிலர், ஓடிப் பிடித்து விளையாடினர். மைதானமே, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

''முகில் வீட்டுக்குப் போகலாமா... '' என்று பெரியசாமி கூறியதும், அனைவருக்கும் டாடா சொல்லிவிட்டு போனான் முகில்.

அவனுக்காக முறுக்கு மற்றும் லட்டு செய்து வைத்திருந்தாள் பெரியம்மா. விளையாடியதில் நன்றாக பசித்ததால், அவற்றை ஒரு பிடி பிடித்தான்.

மாலை, 6:00 மணி; வீட்டிற்கு வெளியே கசமுசவென்று ஒரே சத்தம். வெளியே எட்டிப் பார்த்தான்; பள்ளிக்கூடத்தில் தன்னுடன் பேசியவர்கள், விளையாட கூப்பிட, பெரியம்மா அனுமதி கொடுக்க, அவர்களுடன் கலந்தான்.

தினம் தினம் முகிலுக்கு நண்பர்கள் சேர, அவர்களுடன் வாய்க்கால், வரப்பு, காடு, கழனி எல்லாம் சுற்றினான். இங்கும் முழுப்பரீட்சை முடிந்து லீவு விட்டாச்சு.

தோட்டத்து கிணற்றுக்கு கூட்டிச் சென்று நீச்சல் பழக்கி விட்டார் பெரியசாமி. ஏற்கனவே, நீச்சல் வகுப்புக்கு சென்றிருந்ததால், எளிதில் பழகினான். அவனுடைய நண்பர்களுடன் சைக்கிளில், ஊரைச் சுற்றி வருவது ஜாலியாக இருந்தது. அப்பார்ட்மென்ட்டில் சின்ன இடத்தில் சைக்கிள் விடுவதற்கே, சண்டை போடணும். இங்க ரோட்டுல எங்கும் போகலாம்; பயமே இல்லை.

முகிலுக்கு, நாட்கள் சீக்கிரம் நகர்ந்து போனது.

''முகில்... நாளைக்கு உன் அம்மாவும், அப்பா வர்றாங்க,'' என்று பெரியசாமி சொன்னதும், முகிலின் தாமரை முகம் வாடியது.

''பெரியப்பா... எனக்கு இன்னும் ஒரு மாசம் லீவு இருக்கு; இங்கேயே இருக்கேனே...'' என்றான் கெஞ்சும் குரலில்!

சரசுவும், ''ஆமாங்க... பையன் இங்கே ஆடி, ஓடிட்டு இருக்கான். அங்கே போனா, நாலு சுவத்துக்குள்ள முடக்கிப் போட்டுடுவாங்க,'' என்று சொல்ல, ''நாளைக்கு, அவங்க வரட்டும்; பேசிக்கலாம்,'' என்றார்.

கிராமத்துக்கு வந்ததிலிருந்து காலையில் சீக்கிரம் எழுந்து, பெரியப்பாவுடன் தோட்டத்துக்கு சென்று வருவான். இன்று, அம்மா ஊருக்கு கூட்டிட்டு போயிடுவாள் என்று பயந்து, இழுத்துப் போர்த்தி படுத்துக் கொண்டான் முகில்.

மகனை எழுப்பிய, வேலுச்சாமியின் மனைவி, ''என்னடா இப்படி கறுத்துட்டே...'' என்றாலும், சற்று உடம்பு பூசியிருப்பது தெரிந்து, ''உன் பெரியம்மா உடம்ப நல்லா தேத்திட்டாங்க போலிருக்கே...'' என்றாள்.

எதுவும் பேசாமல், மவுனமாக படுத்திருந்தான் முகில்.

''என்னடா பேச மாட்டியா?''

''நான் உங்களோடு ஊருக்கு வரல,'' என்றான்.

''நாளையிலிருந்து, பயிற்சி வகுப்புக்கு போகணும்; பணம் கட்டியாச்சு,'' என்றாள் கண்டிப்புடன்!

''நீ தான் லீவுல கூட விடாம அந்த வகுப்புக்கு போ, இங்க போன்னு சொல்ற... இங்க படிக்கிற யாருமே, எந்த வகுப்புக்கும் போகல; ஜாலியா இருக்காங்க. நான், நிறைய சொந்தக்காரங்க வீட்டுக்கு போனேன்; இங்க நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. நீங்களும், அப்பாவும் ஆபீஸ் போயிடுவீங்க... எந்நேரமும் நான், 'டிவி' பாக்கணும் அல்லது தனியா, 'கேம்' விளையாடணும். ப்ளீஸ்மா... என்னை இங்க இருக்க விடுங்க,'' என, முகில் பேச பேச வாயடைத்துப் போயினர், வேலுச்சாமியும், அவன் மனைவியும்!

அங்கே வந்த பெரியசாமி, ''என்னப்பா... உன் மகன் பேசியத கேட்டீயா... அங்க நீங்க காசு கொடுத்து கத்து கொடுக்கிறத, இங்கே காசு இல்லாம அவங்களே கத்துக்கிறாங்க,'' என்றார்.

''அப்பா... நான் எப்படி நீச்சல் அடிக்கிறேன் தெரியுமா... அப்பறம், தோட்டத்தில போய் தண்ணீர் கட்டினோம், மாட்டு வண்டியில என் பிரண்ட்சுக கூட சேர்ந்து வண்டி ஓட்டினேன்; ஜாலியா இருந்துச்சு,'' என்றான்.

உடனே, பெரியசாமி, ''அவனுக்கு இங்கே கிடைக்கிற மகிழ்ச்சி, அடுத்த வருஷம் வரை இருக்கும்; படிப்பிலும் கவனம் செலுத்த முடியும். இந்த சூழல், மன இறுக்கத்தை கூட மாத்திடும். இது, மொட்டு அரும்பும் காலம்; அதுவா மலரட்டும்; நாம எட்ட நின்னு ரசிப்போம். பறவைகளோட சிறகை வெட்டி, கூண்டுல அடைச்சுட்டா, எப்படி பறக்க மறந்துடுமோ, அப்படித்தான் குழந்தைகளின் நிலையும். அவங்கள பறக்க விட்டு பாருங்க.

''அப்பத்தான் நாளைக்கு பெரியவனான பின், இந்த வயது நினைவு, அவங்க சோர்வுறும் நேரங்கள்ல சுகம் கொடுக்கும். பயிற்சி வகுப்பு எப்பவும் கிடைக்கும்; இந்த வயசுல கிடைக்கும் விளையாட்டு அனுபவங்கள், பருவம் மாறியதும் கிடைக்குமா? அவங்க உலகத்தில அவங்கள எந்தவிதமான மன உளைச்சலும் இல்லாம, சிறகடித்துப் பறக்க விடுவோமே...'' என்றார்.

அவர் பேசியது, வேலுச்சாமியின் மனைவியின் மனதை திறக்கச் செய்ய, ''சரிங்க மாமா... அவன் பள்ளிக் கூடம் திறக்கிற வரை இங்கேயே இருக்கட்டும்,'' என்றாள்.

அதுவரை விலகி நின்ற முகில், ஓடிவந்து அம்மாவை கட்டி, ''தேங்யூம்மா...'' என்றான்.

அப்போது அங்கே வந்த அவன் நண்பன் முருகன், ''முகில்... இன்னிக்கு, மரம் நடப்போகிறோம்; நீயும் வந்து நட்டு வைக்கிறாயா... நீ ஊருக்கு போனாலும், உன் மரத்துக்கு, நாங்க தண்ணீ ஊத்தி வளப்போம்; அடுத்த வருஷம் வரும் போது, உன் மரத்தைப் பாக்கலாம்,'' என்றான்.

அவர்களின் உரையாடல், வேலுச்சாமிக்கு வியப்பாக இருந்தது. ''அம்மா... அப்பா... பை பை,'' எனக் கூறி, முகில் வெளியே ஓட, ''டேய்... குட்டீம்மா சாப்பிட்டுப் போ...'' என்றாள் உரத்த குரலில் பெரியம்மா.

''நான் முருகன் கூட சாப்பிட்டுக்கறேன்,'' என்ற முகிலின் மன உணர்வைப் புரிந்தவர்களாய், அவனுக்கு எடுத்த டிக்கெட்டை, கேன்சல் செய்தனர், அவனின் பெற்றோர்!

யசோதா பழனிச்சாமி

இவர் எழுதிய ஏராளமான சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரைகள் பல்வேறு வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டு, ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, சந்தோஷமளிப்பதாக கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us