sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : டிச 13, 2015

Google News

PUBLISHED ON : டிச 13, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கல்கி' வார இதழ் ஆசிரியராக இருந்த, கி.ராஜேந்திரன், 'அது ஒரு பொற்காலம்' நூலில் எழுதியது: குற்றாலத்தில், ரசிகமணியின் விருந்தோம்பலை அனுபவித்துக் கொண்டு, கல்கி குடும்பத்தினரான நாங்கள் தங்கியிருந்தோம். ரசிகமணியை சந்தித்து, அளவளாவ, ஏராள நண்பர்கள் நாள்தோறும் வந்து போவர். அனைவருக்கும் வேளா வேளைக்கு உணவு தயாராக இருக்கும். இதற்கென்றே சங்கரன் மற்றும் ஐயா என, இரு சமையல் கலைஞர்களை நியமித்திருத்தார் ரசிகமணி.

ஒருநாள், மதிய உணவுக்காக நான்கு பந்திகளில், எல்லாரும் உட்கார்ந்திருந்தோம். ஒரு சட்டி நிறைய, புட்டு எடுத்து வந்தார் சங்கரன். ஆறேழு வயது சிறுவனாகிய என் இலையில், சிறிதளவு பரிமாறி, அடுத்த இலைக்கு போனார். நான், 'இன்னும் கொஞ்சம் போடு...' என்றேன்.

புன்னகையுடன், மேலும், அரைக்கரண்டி பரிமாறினார் சங்கரன். 'இன்னும் கொஞ்சம்...' என்றேன்; எனக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். 'இலையில், இருப்பது வயிற்றுக்குள் போகட்டும்; மறுபடி வைக்கிறேன்...' என்றார் சங்கரன். அவ்வளவுதான், 'ஓ' என்று பெருங்குரலெடுத்து, அழ ஆரம்பித்துவிட்டேன்.

பரிமாறுவதை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த அண்ணி, (ரசிகமணியின் வாழ்க்கை துணைவி பிச்சம்மாளை, அனைவரும் அண்ணி என்று தான் குறிப்பிடுவர்.) உடனே, சங்கரனிடமிருந்து புட்டு சட்டியை வாங்கி, 'இந்தாப்பா... உனக்கில்லாததா, எவ்வளவு வேணுமோ எடுத்துக்க; மிச்சம் மீதி ஏதாவது இருந்தா நாங்க சாப்பிட்டுக்கிறோம்...' என்று கூறியபடி, சட்டியை என் இலையருகே வைத்துவிட்டு போனார்.

எல்லாரும் சிரிக்க, நானும் மகிழ்ந்து போனேன். சட்டியை நான் தொடவே இல்லை என்பதும், இலையில் இருந்ததையே, என்னால் முழுமையாக சாப்பிட முடியவில்லை என்பதும் வேறு விஷயம்.

'சுவையான குட்டிக்கதைகள்' நூலிலிருந்து: சீனாவில் ஒரு மன்னன், கேளிக்கைப் பிரியன்; புதுப்புது பொழுதுபோக்குகளை கண்டுபிடிப்பான். ஒருநாள், 'என் ராஜ்ஜியத்தில் யார் பெரிய பொய் சொல்கிறாரோ, அவருக்கு தங்க ஆப்பிள் பரிசு கொடுப்பேன்...' என்று அறிவித்தான்.

அதைக்கேட்டு, நாடெங்கிலுமிருந்து நூற்றுக் கணக்கான பேர், அவனிடம் வந்து பொய் கூறினர். 'இது ஒன்றும் பெரிய பொய் அல்ல...' என்று அவர்களை ஒதுக்கினான் மன்னன்.

ஒருநாள், அவனிடம் ஒருவன் வந்து, 'போன ஆண்டு, என்னிடம், ஒரு பானை தங்கம் கடன் வாங்கிப் போனீர்களே... அதை இன்னும் நீங்கள் திருப்பித் தரவில்லை. அதை வாங்கிப் போகவே வந்திருக்கிறேன்...' என்றான்.

மன்னன் திடுக்கிட்டு, 'என்னது... உன்னிடம் ஒரு பானை தங்கம் வாங்கினேனா... கிடையாது. இது, முழு பொய்...' என்றார்.

'ஆ... முழு பொய் என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்; தங்க ஆப்பிளைக் கொடுங்கள்...' என்றான் வந்தவன். அவன், தன்னை மடக்குகிறான் என்பதைக் கண்டு கொண்ட மன்னன், 'இல்லை... நீ பொய் சொல்லவில்லை; நீ சொல்வது நிஜம் தான்...' என்றான்.

'அப்படியானால், என்னிடம் வாங்கிய ஒரு பானை தங்கத்தை திருப்பிக் கொடுங்கள்...' என்றான் வந்தவன்!

தொலைநோக்கி என கூறப்படும், 'டெலஸ்கோப்'பை கண்டுபிடித்த கலிலியோ, அதன்மூலம் வான் வெளியை ஆராய்ந்து, பூமிக்கு, ஒரு சந்திரன் இருப்பது போல, வியாழனுக்கு, ஏழு சந்திரன்கள் இருப்பதைக் கண்டார். அதை உலகிற்கு எடுத்துக் கூறிய போது, அதை யாரும் நம்பவில்லை. அத்துடன், தொலைநோக்கி வழியாக கண்ட பின்னரும் கூட, 'தொலைநோக்கி பூமியில் உள்ள பொருட்களை காட்டுமேயன்றி, பூமிக்கு வெளியே உள்ள பொருட்களை காட்டாது...' என்றனர்.

அப்படி மறுத்தவர்களில் ஒருவர், அடுத்த சில நாட்களில் இறந்து விட்டார். அப்போது கலிலியோ, 'அவர் தேவலோகம் போகும் வழியிலாவது, நான் கூறியது உண்மை என்று, நேரில் பார்த்து உணர்ந்திருப்பார்...' என்றார்.

'தமிழ்நாட்டில் வைணவம்' என்ற நூலில், அக்னி ஹோத்ரம் தாதாசாரியார் எழுதியது: பழங்கால கோவில்களில், மூல விக்கிரகத்தை தவிர, உற்சவ விக்கிரகங்களுக்கு இடமே இல்லை. ஆழ்வார்களால் பாடப்பட்டவை, மூல விக்கிரகங்களே! கர்ப்பக்கிருகத்தில், ஒரே மூர்த்தியே இருந்தது. கோவில் வளர வளர, ஆகமங்களும் வளரத் துவங்கின. கோவில்களின் அடிப்படை அமைப்புக்கு, ஆகமங்களை, அடிப்படையாக கொள்ளலாமேயன்றி, பின், ஏற்பட்ட விரிவான ஆலய அமைப்புகளுக்கு ஆகமங்கள், பிரமாணம் ஆகாது. ஆகமங்களில், மூல விக்கிரகம் மற்றும் கர்ப்பகிரக விமானம் இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் உண்டு. கும்பாபிஷேக காலத்தில், மூல விக்கிரகம் மற்றும் விமானம் இவற்றிற்கு தனித்தனியே கும்பங்கள் வைத்து, தனித்தனியே கும்பாபிஷேகம் செய்வர். கோபுர அமைப்பு, பிற்காலத்தது என்பதால், ஆகமங்கள் அவற்றிற்கு தனிச்சிறப்பு வழங்கவில்லை. பிரகாரங்களுக்கு உள்ள சிறப்பே, கோபுரங்களுக்கும் வழங்கப்படுகிறது.

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us