PUBLISHED ON : ஜன 10, 2016

மருத்துவரிடம் செல்லும் போது...
மாசு நிறைந்த, தாறுமாறாக மாறும் பருவ நிலைகள் உள்ள காலத்தில் நாம் வசிக்கிறோம். இதனால், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதை முறையாக எதிர்கொள்வது எப்படி என்பதை, என் அனுபவத்தின் மூலம் அறிந்த சில குறிப்புகள்:
* உங்கள் பகுதியில் உள்ள அனுபவம் மிக்க, திறமையான மருத்துவரை, குடும்ப டாக்டராக வைத்துக் கொள்ளலாம். அத்துடன், அப்பாயின்ட்மென்ட் மூலம் அவரை தொடர்பு கொள்ளும் வசதி இருந்தால், காத்திருத்தலை தவிர்க்கலாம்.
* ஆண்டுக்கொரு முறை, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவும். ஜுரம், வலி மற்றும் காயம் என்று வேறு எந்த உடல் நலக்குறைவுக்காக போனாலும், ஏற்கனவே உள்ள நோய், உட்கொள்ளும் மருந்து போன்ற விபரங்களையும் எடுத்துச் செல்லவும்.
* 'அஜீரணம், இதயத்தில் வலி, வாயுப்பிடிப்பு, பித்தம்...' என்று உங்கள் அனுமானங்களை எல்லாம் மருத்துவரிடம் கூறினால், அவர் எரிச்சலடைவார். என்ன பிரச்னை என்பதை மட்டும் கூறவும்.
* டாக்டரை, 'டாக்டர்' என்றே அழைக்கவும்; அது தான் அவருக்கு மகிழ்ச்சியை தரும். அத்துடன், அவர் படித்த படிப்புக்கு, நாம் தரும் மரியாதை!
* அறுவை சிகிச்சை தான் தீர்வு என்று கூறினால், உடனே, ஒத்துக் கொள்ள வேண்டாம்; இன்னொரு மருத்துவரிடம் காட்டி, 'செகண்டு ஒபீனியன்' வாங்கவும்.
* நாம் உட்கொள்ளவிருக்கும் மருந்துகளுக்கு, ஏதேனும் பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டா என தெரிந்து கொண்டால், வீணாக பயப்பட வேண்டாம்.
* மருத்துவரிடம் கூற வேண்டிய விஷயங்களையும், சந்தேகங்களையும், தாளிலோ அல்லது மொபைல் போனிலோ, பதிவு செய்து கொள்வது நலம்.
* மருத்துவமனையில் காத்திருக்கும் போது, அங்குள்ள பத்திரிகைகளை, குறிப்பாக, பழையவற்றை எடுத்துப் படிப்பதைத் தவிர்க்கவும்; அதில், நோய் தொற்றுகள் இருக்க வாய்ப்புண்டு!
— ஆர் சாந்தா பாய், சென்னை.
மருத்துவமனையில் ஆண்டு விழா!
எங்கள் பகுதியில் உள்ள, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையிலிருந்து, சமீபத்தில் என் மொபைல் போனுக்கு, 'மெசேஜ்' வந்தது. அதில், 'எங்கள் மருத்துவமனை ஆரம்பித்து, 11வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எங்களிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு, 'பார்ட்டி' கொடுக்க முடிவு செய்துள்ளோம். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...' என்றிருந்தது.
எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். விழாவில், டீ, பப்ஸ் கொடுத்து வரவேற்றதுடன், தலைமை மருத்துவர், 'இந்த இரண்டு மணி நேரமும் உங்களுக்கானது; உங்கள் மனதில் ஏற்படும் மருத்துவ சந்தேகங்களை, எங்களிடம் தயங்காமல் கேட்கலாம்...' என்றார்.
நாங்களும் எங்களது சந்தேகங்களை கேட்டோம்.
நிகழ்ச்சி முடிந்ததும், வந்திருந்த அனைவருக்கும் உணவு அளித்து, இலவசமாக சுகர் டெஸ்ட் எடுத்து, உடனே ரிசல்ட்டும் கொடுத்தனர். அத்துடன், வேறு சில சலுகைகளையும் அறிவித்தனர்.
இறுதியாக, தலைமை மருத்துவர், 'இதுவரை நம்மிடையே டாக்டர் - பேஷன்ட் என்ற உறவு மட்டுமே இருந்தது. இப்போது, நாம் அனைவரும் நண்பர்கள்...' என்று கூறி, விடை பெற்றார். மன நிறைவுடன் திரும்பினோம்.
எல்லா மருத்துவமனைகளும் இதைக் கடைப்பிடிக்கலாமே!
—சுப்புலெட்சுமி சந்திரமவுலி, மடிப்பாக்கம், சென்னை
மருத்துவர்களே... கை கழுவுங்கள்!
முன்பெல்லாம், மருத்துவரின் அறையில், அவரின் வலப்புற மூலையில், மரம் அல்லது இரும்பாலான ஸ்டேண்டில், வட்ட வடிவ கோப்பையில், டெட்டால் கலந்த தண்ணீரும், அருகில், துண்டும் இருக்கும்.
மருத்துவர், ஒரு நோயாளியைத் தொட்டு, மருத்துவம் செய்த பின், இந்த டெட்டால் கலந்த நீரில் கைகளை கழுவி, துண்டில் துடைப்பார். இன்று, ஒரு சில பெரிய மருத்துவமனைகளைத் தவிர்த்து, பெரும்பாலான மருத்துவர்களின் அறைகளில், இதைக் காண முடிவதில்லை.
ஒரு நோயாளியை தொட்ட கைகளுடன், அடுத்த நோயாளியை மருத்துவர்கள் தொடுவதால் நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு அதிகம்.
இனியாவது மருத்துவர்கள் அருகிலேயே, 'லிக்விட் சோப்' பயன்படுத்தி, கைகளைச் சுத்தம் செய்யலாமே!
— சுப்பு.லட்சுமணன், பெருங்களத்தூர், சென்னை.
வித்தியாசமான வாழ்த்து!
சமீபத்தில், குழந்தை பிரசவித்திருந்த என் சித்தியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது, வயதான பெண் ஒருவர், தன்னை அறிமுகப்படுத்தி, 'பைண்ட்' செய்யப்பட்ட சிறு புத்தகத்தை சித்தியிடம் தந்தார்.
அப்புத்தகத்தில், பல வார இதழ்களில் வெளிவந்த குழந்தை வளர்ப்பு, தாய்ப்பால் கொடுப்பது மற்றும் தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை போன்ற பல அரிய தகவல்கள் இருந்தன. அத்துடன், அப்பெண் வசம்பு துண்டை சித்தியின் கையில் கட்டி, வாழ்த்தினார்.
அவர் சென்ற பின், நர்சிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். அந்த மருத்துவமனையில், யாருக்கு பிரசவம் நடந்தாலும், வாழ்த்தி, புத்தகம் தரும் பழக்கம் உள்ளவர் என்பதை கூறினார்.
அன்று முதல், என் அம்மாவும், வார இதழில் வரும் குழந்தை வளர்ப்பு பற்றிய குறிப்பை, நகல் எடுக்க ஆரம்பித்து விட்டார். நல்ல யோசனை தானே!
— எஸ்.ராஜமித்ரன், ராஜபாளையம்.
குழந்தைகளை விளையாட விடுங்கள்!
சமீபத்தில், நண்பரின் மகன் கீழே விழுந்ததில், அவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட, எலும்பு சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றார். 'நீங்க அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறீங்களா? என்று கேட்டுள்ளார் டாக்டர். அதற்கு, நண்பர், 'எப்படி கண்டுபிடிச்சீங்க...' என்று ஆச்சரியப்பட்டு கேட்க, 'இப்போ கட்டப்படும் அடுக்குமாடி வீடுகள்ல சூரிய வெளிச்சம் உள்ளே வர்ற மாதிரி ஜன்னல்கள் வைக்கப்படுறதில்ல. அப்படியே ஜன்னல்கள் இருந்தாலும், அது, அடுத்த வீட்டு ஜன்னல் அருகே இருப்பதால், பெரும்பாலானோர், ஜன்னல்களை திறக்கிறதேயில்ல. இதனால், சூரிய ஒளி நம் மீது படும் வாய்ப்பு குறைஞ்சுடுது.
'சூரிய ஒளியில், எலும்புகளை வலுவாக்க உதவும், விட்டமின் டி இருக்கு. முன்பெல்லாம், மாலையில் குழந்தைங்க விளையாடுவாங்க. இப்போ, பள்ளியிலிருந்து வந்தவுடன், வீடியோ கேம்ஸ், 'டிவி' இன்டர்நெட்ன்னு வீட்டுக்குள் முடங்கிடுறாங்க.
'இதனால், குழந்தைகளோட எலும்புகள் பலவீனமடைந்து, சிறு விபத்து ஏற்பட்டாலே, எலும்பு முறிவு ஏற்படுது. குழந்தைகள் மேல் வெயில் படணும்...' என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
குழந்தைகளை வெயில் படாமல் பொத்தி, வளர்ப்பவரா நீங்கள்... ஆம் என்றால், உடனே மாறுங்கள்!
— ஜெ.கண்ணன், சென்னை.
நோயாளிகளுக்கு 'பொக்கே' வேண்டாமே!
அண்மையில்,அறுவை சிகிச்சை செய்து, மருத்துவமனையில் இருக்கும் நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். எனக்கு முன் அவரது குடியிருப்பை சேர்ந்த சிலர், அவரைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் கைகளில் பூங்கொத்துகள் இருந்தன. அதை அவரிடம் கொடுத்து, நலம் விசாரித்தனர்.
அவர்கள் சென்ற பின், 'தாங்கள் பூரண நலம் பெற என் வேண்டுதல்கள்...' என்றபடியே, கையில் இருந்த வாழ்த்து அட்டையை கொடுத்தேன். வாங்கியவர், 'இந்த மலர்க் கொத்துகளை, உங்க வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்க; பூக்களை பார்க்கும் போது, மனம் லேசாகி, தெம்பு வருவது உண்மைன்னாலும், பூக்களின் வாசனை, சில நோயாளிகளுக்கு, ஒவ்வாமையை ஏற்படுத்தி, கூடவே ஜலதோஷம், தொடர் தும்மலை ஏற்படுத்தும்.சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...' என்று நீங்க அளித்த வாழ்த்து அட்டை அருமை. இதைப் பார்க்கும் போது, இதைக் கொடுத்தவர், தங்களோடு இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். ரொம்ப நன்றி...' என்றார்.
அவர் கூறுவதிலும் உண்மை உள்ளது. வாசகர்களே... நோயாளியை பார்க்கச் செல்லும் போது, 'பொக்கே' வேண்டாமே!
— கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.
