தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாண்டோ சின்னப்பா தேவர் (23)

சாண்டோ சின்னப்பா தேவர் (23)

சாண்டோ சின்னப்பா தேவர் (23)


PUBLISHED ON : ஜன 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —

பிரபல இந்தி இசையமைப்பாளர்கள் லட்சுமிகாந்த் மற்றும் பியாரிலாலைக் கண்டு மிரண்டு விட்டார் தேவர். அவர்களது ஆளுமையும், தோரணையும் இசை அமைக்க ஒப்புக் கொள்வார்களா என்ற சந்தேகத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. அவர்களிடம் பேசிய பாலு, 'அண்ணே... இரண்டு வருஷம் காத்திருக்கணுமாம். இப்ப அவங்க கைவசம் அதிகப் படங்கள் இருக்காம்...' என்றார்.

'பாலு... விளக்கிச் சொல்லுப்பா. அவங்க சொல்ற பீரியடுக்குள்ள, நான், ஆறு படம் ரிலீஸ் செய்துடுவேன்னு! வேகமா வேலை செய்யணும். அதுக்காக கூடுதலா கேட்டாலும், ஒரு தொகை தனியாவே கொடுத்துடலாம்...' என்றார் தேவர்.

அவரது எதிர்ப்பார்ப்புக்கு, மசியவில்லை லட்சுமிகாந்த்; ஏமாற்றத்தோடு ஓட்டலுக்கு திரும்பினர். இரவில் தூக்கமே வரவில்லை. 'முருகா... பம்பாயில கூட உனக்கொரு கோவில் கட்டறேன். எடுத்த வேலையை முடிக்காமப் போனா அசிங்கம். ஏதாவது அதிசயம் செஞ்சு, அவங்க ஒத்துக்கற மாதிரி செய்யக் கூடாதா...' என்று புலம்பினார்.

மாலை வெயில்; கண்ணாடி ஜன்னல்களையும் கடந்து, முகத்தில் சுளீரென்று அடித்தது. கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தார் பாலு. வீனஸ் பிக்சர்ஸ் கார் டிரைவர் நின்றிருந்தார்; அவரை உற்சாகமாக வரவேற்ற தேவர், 'தம்பி... இப்ப எந்தப் படம் நல்லா ஓடுது. நான், 'ரீ - மேக்' செய்ற மாதிரி ஏதாவது படம் பாக்கப் போகலாமா...' என்றார்.

'நான் படம் பாக்க வரல சார்... சாயந்தரம் லட்சுமிகாந்த் வீட்ல, அவங்க பையனுக்கு பர்த்டே பார்ட்டி; அங்கே போறேன். உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா?' என்று கேட்டார் வீனஸ் பிக்சர்ஸ் கார் டிரைவர்.

உடனே, வேகமாக குளித்து, பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், சந்தன வாசத்துடன் பக்திப் பழமாக தயாரான தேவர், பாலுவிடம், 'இசையமைப்பாளர்களை பாக்கப் போகலாம்; லட்சுமிகாந்த் குழந்தைக்கு நம்மால முடிஞ்ச மரியாதையைச் செய்யலாம்...' என்றார்.

பாலு தயங்கியபடியே, 'அண்ணே... பத்திரிகை கூட இல்லாம எப்படி... அவங்களே ரொம்ப பந்தா பார்ட்டியா தெரியறாங்க...' என்றார்.

'ஆசீர்வாதம் செய்யணும்ன்னு மனசுல தோணுச்சு; முருகன் என்ன வழி விடறான்னு போய்த்தான் பாக்கலாமே...' என்றார் தேவர்.

விழாவில், தேவரை எல்லாரும் அதிசயமாகப் பார்த்து, 'யார் இவர், எப்படி வந்தார்...' என்று, 'குசுகுசு'வென்று தங்களுக்குள் பேசியபடி, கோப்பைகளுடன் நகர்ந்தனர்.

சுற்றும் முற்றும் பார்த்து, 'பர்த்டே யாருக்கு?' என்று கேட்டார் தேவர்; குழந்தையை காட்டியதும், 50 தங்க காசுகளை அள்ளி, குழந்தையின் தலைமேல் பொழிந்து வாழ்த்தியவர், 'முருகா...' என்றபடி புறப்பட்டு விட்டார்.

தேவரது பெருந்தன்மையில் பணிந்த இந்தி இசையமைப்பாளர்கள், உடனடியாக, மெட்டுப் போட சம்மதித்தனர். மன நிறைவோடு சென்னை திரும்பினார் தேவர்.

கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தேவர் படங்களுக்காக, விலங்குகளுக்கு பயற்சி அளித்தவர், ஹூசேன் பாய்! மும்பை குதிரை பந்தய மைதானங்களில், 'ஜாக்கி'யாக இருந்தவர், யானைப்பாகன் படத்துக்காக, 'மூன்று மாதங்கள் மட்டுமே வேலை செய்வேன்...' என்கிற நிபந்தனையுடன், சென்னை வந்தவர், தேவரது அன்புக்கு கட்டுப்பட்டு, தேவர் பிலிம்ஸ் ஊழியரானார்.

ஹூசேன் பாய், விலங்குகளுக்கு பயிற்சி அளிக்கும் போது, தேவரும் ஆர்வமாக கூடவே இருப்பார். குழந்தைகளைப் போன்று விலங்குகள் அனைத்தும், ஹூசேன் பாய்க்கு பணிந்து நடக்கும்.

பசியோடு இருக்கும் வேளைகளில் மட்டுமே, யானை, குதிரை மற்றும் நாய் நன்றாக ஒத்துழைக்கும். அச்சமயங்களில், அவற்றை நன்றாக வேலை வாங்கி விடுவார் ஹூசன் பாய். வேலை முடிந்த பின், குதிரைக்கு கேரட்டும், யானைக்கு வாழைப்பழமும், நாய்க்கும் மற்ற விலங்குகளுக்கும், அவை விரும்பும் உணவுகளை கொடுப்பார்.

நாய்களுக்கு மட்டும் பயிற்சியளிக்க, ராஜன் என்பவர், தேவர் பிலிம்சில் பணியாற்றினார். இவர்கள் இருவரைத் தவிர, சென்னை சர்க்கஸ் கம்பெனி ஆட்களும் அவ்வப்போது, பயிற்றுவித்தனர்.

ஹாத்தி மேரா சாத்தி படத்துக்காக, ஓரியன்டல் சர்க்கசின் ரிங் மாஸ்டர் டி.கே. ராவ் வரவழைக்கப்பட்டார். இவர், ராஜேஷ் கன்னாவின் கையாலேயே தினமும் யானைகளுக்கு வெல்லம், கரும்பு மற்றும் பழங்களை கொடுக்க செய்தார். ராஜேஷ் கன்னாவுடன் அவை நன்கு பழகிய பின்னரே, ஷூட்டிங்குக்கு தயாரானார் தேவர்.

ராஜேஷ் கன்னாவிடம், தன் தம்பி திருமுகத்தை அறிமுகப்படுத்திய தேவர், 'இவர் தான், ஹாத்தி மேரா சாத்தி படத்தை இயக்கப் போறார்...' என்றார்.

அதற்கு ராஜேஷ் கன்னா மறுப்பு தெரிவித்ததும், 'எனக்கு இது தேவையா... நானா கேட்டேன் உன்னிடம்... இந்திக்காரன் முன், என் மானத்தை வாங்கிட்டயே...' என்று தேவரிடம் குமுறினார் திருமுகம்.

அவரை சமாதானப்படுத்திய பாலுராவிடம், 'விலங்குகளக் கூட, கஷ்டப்பட்டு நடிக்க வைச்சுடலாம்; எங்க அண்ணன சமாளிக்கவே முடியாது. தெரியாத மொழி; கேலி செய்ற இந்தி நடிகர்கள். தமிழ் படங்களுக்கு கொடுக்கிற நேரத்தையே, இந்திக்கும் தந்து, அரை நாள்ல, 'டூயட்' எடுத்து முடிக்கணும்ன்னு சொல்வாரு. என்னால இந்தப் படத்த இயக்க முடியாது...' என்று, கறாராக மறுத்து விட்டார் திருமுகம்.

இவ்விஷயத்தை தேவரிடம் கூறியதும், 'அவன விட்டா, ஊருல இயக்குனர் கிடைக்க மாட்டானா...' என்றார்.

பாலுவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. தன்னால், உறவுகளுக்குள் விரிசல் வந்துவிட்டதோ என்று தவித்தார். மீண்டும் திருமுகத்திடம் சென்றவர், 'தேவர் பிலிம்ஸ் இல்லன்னா, நம்ம குடும்பம் சோத்துக்கே கஷ்டப்படும். 'அப்பா காலமான பின், எங்க அண்ணன் தான் எனக்கு தாய், தகப்பன், தெய்வம்'ன்னு பேட்டி எல்லாம் கொடுக்கறீங்க. அது நிஜம்ன்னா, படத்தை ஒத்துக்குங்க. நீங்க விலங்குகள் பக்கமே வர வேணாம்; நான் அந்த யூனிட்டை பாத்துக்குறேன். என்ன சொல்றீங்க...' என்றார்.

உறவுகள் தோற்ற இடத்தில், நட்பு ஜெயித்தது. 'சரி' என்று கூறிய திருமுகம், 'எனக்கு நெருக்கடி கொடுக்கவோ, மனசை வேதனைப் படுத்தவோ கூடாது...' என்று நிபந்தனை விதித்து, ஒத்துக் கொண்டார்.

பாலுராவின் முயற்சி வெற்றி பெற்றது.

ராஜேஷ் கன்னாவின் பேச்சு, தேவர் - திருமுகத்தை காயப்படுத்தி இருந்தாலும், தேவரால், ராஜேஷ்கன்னாவை விட்டுவிட முடியவில்லை. அதனால், 'ஒரு வாரத்திற்கு ஷூட்டிங் நடக்கட்டும். எடுத்தவரை, எடிட் செஞ்சு காட்ட சொல்றேன்; உங்களுக்கு, விருப்பம் இல்லேன்னா, ஆளை மாத்திடலாம்...' என்றார்.

திருமுகத்துக்கு, அது சுய கவுரவ சீண்டல். இந்திப்பட கதாநாயகன் முன், தமிழன் ஜெயித்துக் காட்ட வேண்டிய நிர்பந்தம்; களமிறங்கினார்.

ஷூட்டிங் ஆரம்பமானது; 'குளோசப்' காட்சிகள், டிராலி ஷாட்கள் மற்றும் ஆல்டர்நேட் ஷாட்கள் என்று, நிறையவே எடுத்து தள்ளினார். 'குளோசப்' காட்சிகள் எடுக்கப்பட்ட போதெல்லாம், ராஜேஷ் கன்னா தன் தலையில் அடித்துக் கொண்டார்.

ஆனால், தான் எடுத்தவற்றை, 'எடிட்' செய்து, அதை ராஜேஷ் கன்னாவிற்கு போட்டுக் காட்டிய போது, திருமுகத்தை கட்டி அணைத்து, தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். படம் முடிவதற்குள், தேவரும், திருமுகமும் சமாதானமாயினர். அதுதான் சாக்கு என்று, அரை நாளில் ராஜேஷ் கன்னா - தனுஜா ஜோடியை வைத்து, 'டூயட்' பாடல் காட்சியை எடுக்கச் சொன்னார் தேவர்.

எடுத்தவரை படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள், 'என்ன... சர்க்கஸ் காட்சிகளை, பிலிம் ரோல்ல அடைச்சு வெச்சிருக்கீங்க...' என்று, கிண்டல் செய்தனர்.

இதனால், படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், வாகினியில் நடந்த ஷூட்டிங்குக்கு வராமல், டிமிக்கி கொடுத்தார் ராஜேஷ் கன்னா.

தேவரும் எவ்வளவோ பொறுமை காட்டினார்; ஆனாலும், பணியவில்லை. தன் பாணியில் எடுத்து கூறினார். ஆனாலும், நள்ளிரவு வரையில், விலங்குகளோடு நடிக்க மறுத்த ராஜேஷ் கன்னா, 'தூங்கும் போது கூட சிறுத்தையின் சிறுநீர் நாற்றம் தான் நினைவுக்கு வருகிறது...' என, மூக்கை மூடி சைகையில் காட்டியவர், 'பத்து மணிக்கு மேல் நடிக்க கூப்பிடாதீங்க...' என்றார்.

'அரை நாள் வேலை செஞ்சா படம் முடியாது; கொடுத்த கால்ஷீட்டில் நடிக்க முடியாதுன்னா, புதிய தேதிகள் கொடு. ஒப்பு கொண்டபடி, படத்தை முடிக்கலன்னா, பிலிமையே எரிச்சுடுவேன்...' என்று முழங்கினார் தேவர்.

— தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

பா. தீனதயாளன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us