தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவர், அந்துமணியின் அதி தீவிர வாசகி. ஏதோ ஒரு அசைன்மென்டுக்காக ஒரு பல்கலையில் இரண்டு நாட்கள் தங்கியுள்ளார்.

அங்கே தங்கிய அனுபவம் பற்றி எழுதிய கடிதத்தில், 'பல்கலைக்கழக வளாகம், ஒரு பாம்புக் கூடம்...' என எழுதி இருந்தார்.

கடிதத்தில் பாம்பு பற்றி குறிப்பிட்டதும், 'திட்டி விடம்' என்ற பாம்பு பற்றி நினைவு வந்தது.

பாம்புகளில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. விஷம் உள்ளவை, விஷமில்லாதவை என்று அறிஞர்கள் பிரித்திருந்தாலும், நமக்கு எந்த பாம்பைக் கண்டாலும் பயம் தான்.

எல்லா பாம்புகளுக்கும் பல்லில் தான் விஷம் இருக்கும்; ஆனால், திட்டி விடம் என்ற பாம்புக்கு, கண்ணிலேயே விஷமாம். அதன் பார்வை, நம் மீது பட்டாலே போதும்... விஷம் தாக்கிய துன்பம் உண்டாகுமாம்.

இந்த பாம்பு, முற்காலத்தில் பாலைவனங்களில் வாழ்ந்ததாக கவிஞர்கள் கூறுகின்றனர்.

மாசிலா கற்புடைய மங்கையரை, இந்த திட்டி விடம் பாம்புக்கு உவமையாக கூறியுள்ளனர் புலவர்கள்.

இந்தப் பாம்பை பற்றி கம்பரும் கூறியுள்ளார். சீதைக்கு தவறு இழைத்த ராவணனை நோக்கி, 'திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலையே...' என்று கும்பகர்ணன் கேட்பதாக குறிப்பிடுகிறார்.

இவ்வகைக் கொடிய பாம்பு, இந்தக் காலத்தில் வாழ்வதாகத் தெரியவில்லை. விலங்கியல் நிபுணர்கள் யாருக்கேனும் இது பற்றித் தெரிந்தால், எழுதுங்களேன்!

தற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் தான் சில நேரங்களில் பெரிய வெற்றியை தருகிறது. எவ்வளவோ திட்டமிட்டு செய்யும் சில செயல்கள், சில நேரங்களில் தவறாகி விடுவதும் உண்டு.

இப்படி ஒரு தற்செயல் சம்பவம், மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் வாழ்வில் நிகழ்ந்து, ஒரு பாடல் பெரிய அளவில் வெற்றியடைந்த நிகழ்ச்சி பற்றி கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அது:

காதலிக்க நேரமில்லை படத்திற்கான பாடல் காட்சி பற்றிய கலந்தாலோசனைக்காக வந்திருந்தார் கண்ணதாசன். கதாநாயகன், கதாநாயகியின் தந்தையை பார்த்து, கேலியாக பாட்டுப் பாடுவது போன்ற காட்சிக்கு, ஒரு பாடல் எழுதித் தரும்படி கண்ணதாசனிடம் சொன்னேன்.

அருகில் இருந்த இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் அவர், 'விஸ்வநாதா... வேலை வேணும்; உடனே டியூன் போடு...' என்றார். உடனே, விஸ்வநாதனும், வேடிக்கையாக, 'விஸ்வநாதன் வேலை வேணும், விஸ்வநாதன் வேலை வேணும்...' என்று பாடியபடியே டியூன் போட்டார்.

உடனே கண்ணதாசன், 'இதையே பல்லவியாக வைத்துக் கொள்ளலாமே! அது சரி, படத்தில் கதாநாயகியின் தந்தை பெயர் என்ன?' என்று என்னிடம் கேட்டார். அப்போது தான் எனக்கே தெரிந்தது. அந்த நேரம் வரை, கதாநாயகியின் தந்தை பாத்திரத்திற்கு பெயர் வைக்கவில்லை என்பது!

உடனே, கண்ணதாசனிடம், 'அந்த கதாபாத்திரத்திற்கு விஸ்வநாதன் என்றே பெயர் வைத்து விடுகிறேன். நீங்கள், 'விஸ்வநாதன் வேலை வேணும்...' என்றே பல்லவி எழுதி விடுங்கள்...' என்றேன். அப்படியே எழுதினார். அந்தப் பாடல், 'சூப்பர் ஹிட்' ஆனது!

விழா ஒன்றில், முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் பேசியபோது கேட்ட சமாசாரம் இது. வார இதழ் ஒன்றில், வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறி வந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தார்:

ஒரு வாரத்தில் கேட்கப்படும், 100 கேள்விகளில், 60 கேள்விகள் சொத்துகளைப் பற்றியதாக இருக்கும். 'என் அம்மாவின் மூத்த சகோதரியின் கணவருடைய அண்ணியின் சொத்தில் பங்கு கேட்க ஏதேனும் வழியுண்டா?' என்று கூடக் கேள்விகள் வந்திருக்கின்றன.

மற்றவர் உழைத்தோ, உழைக்காமலோ, நல்ல வழியிலோ, தீய வழியிலோ சேர்த்த சொத்துகளில், பங்கு கேட்பதில் செலவிடும் நேரத்தையும், மூளையையும், பணத்தையும் சரியான, ஆக்க வேலையில் செலவிட்டால், உங்களுக்கு, நீங்களே ஒரு நல்ல எதிர்காலத்தை தேடிக் கொள்ள முடியும்.

பரம்பரைச் சொத்து, சாதாரணமாக உறவினர்களுக்குள் இருக்க வேண்டிய பாச உணர்ச்சிகளையும், நிலவ வேண்டிய அமைதியையும், எவ்வளவு குடும்பங்களை சீர் குலைத்துள்ளது என்பதை இத்தகைய கேள்விகளால் உணர முடிகிறது...

- இப்படி வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

அவர் வருந்தி என்ன பயன்? பணம் என்றால், பிணமும் வாயைப் பிளக்கும் காலத்தில் அல்லவா வாழ்ந்து வருகிறோம்!

அன்று, குப்பண்ணா வீட்டிற்கு போயிருந்தேன். வீட்டில், புதிதாக பெயின்ட் பூசியிருந்ததால், அதன் நெடி மூக்கைத் துளைத்தது.

'புது வர்ண நெடியைப் போக்க, பெயின்ட் பூசப்பட்ட அறையில், சில வெங்காயங்களை இரண்டாக வெட்டி வையுங்க. வர்ணப் பூச்சின் நெடியை கிரகித்து விடும் சக்தி, வெட்டிய வெங்காயத்திற்கு இருக்கு...' என்று அவருக்கு, 'ஐடியா' கொடுத்தேன்.

உடனே குப்பண்ணா, 'நாங்க, வெங்காயம், பூண்டு சேக்கறது இல்லே... இருந்தாலும், வெங்காயத்தைப் பற்றி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கேன்; கேட்டுக்கோ...' என்றபடியே ஆரம்பித்தார்...

'வெங்காயம், 'லில்லி' இனத்தைச் சேர்ந்ததுன்னும், இதில், 500க்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கிறதுன்னும் தாவரவியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க.

'வெங்காயத்தை, சமையற்கட்டை அரசாளும் ராஜா என்றாலும் தகும். ஆசியப் பகுதியில், 5,000 ஆண்டுகளுக்கு முன், கண்டுபிடிக்கப்பட்டது தான் வெங்காயம்!

'வெங்காயத்தை ஆங்கிலத்தில், 'ஆனியன்' என்கிறோம். இது லத்தீன் வார்த்தையான, 'யூனியோ' என்பதிலிருந்தும், பிரெஞ்சு சொல்லான, 'ஆன்னான்' என்பதிலிருந்தும் தோன்றியது.

'முதன் முதலில், சக்திமிக்க மருத்துவ மூலிகையாக அறிமுகம் ஆனது வெங்காயம். இது, நல்ல கண் பார்வையை பெற, உதவுவதாக நம்பினார், மருத்துவ தந்தையான, ஹிப்போகிரேடஸ். 1596ல் வெளியிடப்பட்ட, 'இறந்த மூலிகைகள்' என்ற நூலில், வழுக்கைத் தலையில் முடி வளர, வெங்காயச் சாறு உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'வெங்காயம், வலிப்பு நோயைக் குணப்படுத்தும், ஜலதோஷத்தைப் போக்கும், மூட்டுவலி மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை குறைக்கும். மேலும், உடலின் அதிகபட்ச கொழுப்பை நீக்குறதுடன், அஜீரணத்தையும் போக்கும் என்றும், ஆயுர்வேத மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இதில், கால்ஷியம், இரும்பு சத்து, புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் நிறைய உள்ளன.

'வெங்காயத்தின் மகாத்மியத்தை நன்றாக அறிந்திருந்தனர் பண்டைய எகிப்தியர்கள். எகிப்திய பிரமிடுகளை உருவாக்கிய அடிமைகளுக்கு சக்தியூட்ட, வெங்காயத்தையே முழு உணவாக அளித்ததுடன், அதை, புனிதப் பொருளாகவும் கருதினர்.

'தான் இனிய குரலைப் பெற்றதற்கு, வெங்காயமே காரணம் எனப் புகழ் பாடியுள்ளான் ரோம் மன்னன் நீரோ. மத்திய கால ஐரோப்பியர்கள் திருமணப் பரிசாக, வெங்காயத்தை அளித்து வந்தனர்.

'இவ்வளவு புகழும், பலனும் உள்ள வெங்காயத்தை, ஆத்துக்குள் (வீட்டிற்குள்) சேர்க்க விட மாட்டா எங்காத்து மாமி... 'அது ராட்சஷ குணத்தை கொடுக்கும்; சேக்கப்படாது...' என்று சொல்லி விடுவாள். அவளுக்கு தெரியாம, ஓட்டல், நண்பர்கள் வீடுகளில் வெங்காய சாம்பார், சட்னி, வெங்காய பஜ்ஜின்னு வெளுத்துக் கட்டுறேன்...' என முடித்தார்.

- நமக்கு இந்தத் தொல்லை இல்லை என எண்ணியபடியே நடையைக் கட்டினேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us