PUBLISHED ON : ஜன 24, 2016

சபாஷ்... அருமையான கல்லூரி!
தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறாள், என் தோழி. அவள் வேலைக்கு சேர்ந்த புதிதில், கல்லூரி நிர்வாகம், அவளது தாயாரின் முகவரி, அலைபேசி எண்ணை கேட்டு வாங்கி, ஒவ்வொரு மாதமும், தோழியின் சம்பளத்திலிருந்து, 1,000 ரூபாயை, 'மதர்ஸ் பண்ட்' என்று பிடித்தம் செய்து, அவளது அம்மாவின் முகவரிக்கு, அனுப்பி வருகிறது.
இப்படி எல்லா பணியாளர்களின் தாயார்களுக்கும் மாதா மாதம் பணம் அனுப்புகின்றனர்.
இது, பாராட்டும்படியான முயற்சி. வயதான காலத்தில், பெற்றோர், பணத்துக்கு கஷ்டப்படாமல் இருக்க அருமையான திட்டம். பணம் அனுப்புவது கல்லூரி நிர்வாகம் என்பதால், 'ஏன் உன் அம்மாவுக்கு, 1,000 ரூபாய் அனுப்பினாய்...' என, கணவன்மார்கள் தகராறும் செய்ய முடியாது அல்லவா!
— எஸ்.வடிவு, சென்னை.
'வார்டன்' நினைத்தால்...
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். பகல் முழுவதும் ஆளரவமற்று கிடந்த எதிர் வீடு, மாலையில் ஒரே ஆரவாரமாக இருந்தது. இது குறித்து என் உறவினரிடம் கேட்ட போது, 'அது, வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கியிருக்கும் விடுதி; நாலஞ்சு மாசத்துக்கு முன், இந்த விடுதி இருக்கிறதே தெரியாது; இப்போ புதுசா ஒரு, 'வார்டன்' வந்திருக்காங்க; அவங்க வந்த பின் மொத்தமா மாறிடுச்சு...' என்றதோடு, என்னை, அங்கே அழைத்துச் சென்று, வார்டனிடம் அறிமுகப்படுத்தினார்.
அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், அங்கே தங்கியிருப்பதாக கூறினார் வார்டன். அப்போது, 'என்ன மேடம்... வார்டன்னா ஒழுக்கம், கண்டிப்பு, கட்டுப்பாடுன்னு மத்தவங்களோடு ஒட்டாம இருப்பாங்க; நீங்க அப்படியே, 'உல்டா'வாக இருக்கீங்களே...' என்றேன்.
அதற்கு மென்மையாக, 'இவங்க யாரும் சின்னப் பிள்ளைங்க கிடையாது; எல்லாரும் வேலைக்கு போய் சம்பாதிக்கிறவங்க. தவிர, தனி மனித ஒழுக்கம் பற்றி அவ்வப்போது ஆலோசனை தருவோம். இங்கே கண்டிப்புன்னா அது, 'ஆண்களுக்கு அனுமதியில்லை' என்பது மட்டும் தான்! மற்றபடி, பக்கத்து வீட்டு மாணவியர், பெண்கள் இங்கு வந்து, இவர்களோடு பேசிப் பழக தடை போடுறதில்ல. அதோட இவங்க விருப்பப்பட்டா குழந்தைகளுக்கு டியூஷன் நடத்துவது, கதை - பாட்டு போட்டிகள் நடத்துவதற்கு கூட, இரவு, 8:00 மணி வரை அனுமதிக்கிறோம்.
'இதனால, வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தம் குறைவதோடு, வீட்டைப் பிரிந்து இருக்கும் தனிமை உணர்வும் அகன்று, புத்துணர்வுடன் இருக்கிறாங்க...' என்றார்.
வார்டனின், 'பாசிட்டிவ்' அணுகுமுறையின் பலனை, அங்கு தங்கியிருந்த பெண்களிடம் காண முடிந்தது. இதுபோன்ற வார்டன்களை விடுதிகளில் பணி நியமனம் செய்தால், தனிமை, தற்கொலை, தவறான தொடர்புகள் போன்ற எண்ணமே மனதில் தோன்றாது.
— எல்.முத்தம்மாள், மதுரை.
'கோலம்' போடுவது அலங்காரம் மட்டுமல்ல...
சமீபத்தில், எதிர்வீட்டு அக்கா, வாசலில் கோலம் போட, அதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த வெளிநாட்டு தம்பதியர், கோலம் போடுவதை பார்த்து நின்று, ரசித்ததுடன், தம்முடன் வந்த வழிகாட்டியிடம் அது பற்றிய விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.
அத்துடன், 'தமிழக பெண்களிடம் உள்ள ஓர் அற்புத கலை இது...' என்று புகழ்ந்ததோடு, அருகிலிருந்த வழிகாட்டியிடம் ஏதோ கேட்க, அவர், அக்காவிடம், 'நீங்கள் எவ்வளவு காலமாக கோலம் போடுகிறீர்கள், எத்தனை விதமாக கோலம் போடத் தெரியும், கோலம் போட மூலப் பொருளாக எதையெல்லாம் பயன்படுத்துவீங்க. கோலம் போடும் போது உங்க மனநிலை எப்படியிருக்கும்...' என்றெல்லாம் கேட்க, அதற்கு பதில் சொன்னார் அக்கா.
கோலத்தை, முழுமையாக போட்டு முடித்ததும், வெள்ளைக்காரப் பெண்மணி அவரை கை கொடுத்து பாராட்டி, 'இது உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகவும், தினசரி செயலாகவும் இருக்கலாம்; ஆனால், இதில் ஒரு கணக்கு உள்ளது, அறிவியல் அடங்கியிருக்கிறது, கலை நுட்பம் வெளிப்படுகிறது, ஒற்றுமை விளங்குகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அதிகாலையில், ஓசோன் வாயுவை நம் உடல் ஈர்க்க வழி செய்கிறது. அதோடு நல்ல உடற்பயிற்சியும் கூட...' என்று ஆங்கிலத்தில் கூறியதை, வழிகாட்டி எங்களிடம் விளக்கினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.
விடை பெற்று செல்லும் முன், அந்த அக்காவுக்கு நினைவுப் பரிசாக, 120 ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய ஒரு பெட்டி காலண்டரைக் கொடுத்து, 'இந்த கலையை உங்களது பிள்ளைகளுக்கும் மறக்காமல் கற்றுக் கொடுங்கள்; இது நல்ல விஷயம்...' என்றனர்.
கோலம் போடுவதன் சிறப்பும், அதன் பெருமையும் அன்று தான், எனக்கு முழுமையாக விளங்கிற்று.
— ஆர்.திவ்யா, பசுமலை.
பயனுள்ள, 'மிஸ்டு கால்!'
நாங்கள் புதிய வீட்டிற்கு குடிவந்த பின், சமீபத்தில் எங்கள் வீட்டு முகவரிக்கு, திருமண அழைப்பிதழ் தபாலில் வந்தது. அதை தந்த தபால்காரர், 'நீங்க இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கீங்களாம்மா...' என்று கேட்டதோடு, என் கணவர் பெயர், அவர் பார்க்கும் தொழில் மற்றும் வீட்டில் உள்ள நபர்கள் பற்றி விசாரித்தார். நான் விபரங்களை சொல்லத் தயங்கிய போது, பக்கத்து வீட்டு பெரியவர், 'சும்மா பயப்படாம சொல்லும்மா; இவரு ரொம்ப வருஷமா, நம்ம ஏரியாவுக்கு தபால் கொண்டு வர்றவரு. நீ, அவருகிட்ட விபரத்தை சொன்னா, கொஞ்சம் முன்னே, பின்னே முகவரி இருந்தாலும், ஞாபகமா தந்திடுவாரு...' என்று கூறினார்.
எனக்கும் நம்பிக்கை வந்து, குடும்ப நபர்களை பற்றி கூறினேன். அவர், 'உங்க மொபைல் எண் அல்லது உங்க கணவர் மொபைல் எண்ணை சொல்லுங்க. நீங்க வீட்ல இல்லாத நேரம் தபால் வந்தா, 'மிஸ்டு' கால் தர்றேன். நீங்க எங்கிட்ட அதுகுறித்த தகவல தெரிஞ்சுக்கலாம்...' என்றார்.
என் கணவரின் மொபைல் எண்ணை தந்ததும், பதிவு செய்து கொண்டார்.
தபால்காரர் போன பின், பக்கத்து வீட்டு பெரியவர், 'இனிமே நீ வீட்ல இல்லைன்னா கூட உனக்கு தபால் வந்தா, 'மிஸ்டு' கால் குடுப்பாரு. நீ போன் செய்து, தபாலை யாருக்கிட்ட தரச் சொல்றியோ, அங்க தந்திடுவாரு...' என்றார்.
'மிஸ்டு'கால் என்றால் முகம் சுளிக்க வைக்கும் நிலையில், அந்த தபால்காரரின் பொறுப்பான செயலை எண்ணி, மகிழ்ந்தேன்.
— எஸ்.அஸ்வினி, சென்னை.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க!
சமீபத்தில், நடுத்தர ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எதிரே சுவற்றில், 'உங்கள் காசேயானாலும், உணவுப் பொருட்களை வீணாக்காதீர்...' என்று எழுதப்பட்டிருந்தது. நிச்சயம், அவ்வாசகம் ஒரு சிலரையாவது சிந்திக்கத் தூண்டும்.
பில் கொடுப்பதற்காக வந்த போது, பெரிய அண்டாவில், சாதம் வடித்த கஞ்சியை தூக்கிச் சென்றனர் இருவர். கல்லாவில் இருந்தவரிடம், 'அந்த கஞ்சியை எங்கே கொண்டு போறாங்க...' என்று கேட்டேன்.
'சாலையில் திரியும் மாடுகளுக்காக இதை கொண்டு போறாங்க...' என்றார். இதைக் கேட்டதும் நெகிழ்ந்து போனேன். எல்லா ஓட்டல்களிலும் கழிவு நீரோடு கலந்து சாக்கடையில் ஊற்றப்படும் கஞ்சியை வீணாக்காமல், வாயில்லா ஜீவன்களுக்கு ஊற்றி, அதன் பசியை போக்குகின்றனரே... என்று பெருமிதம் கொண்டேன்.
திருமண மண்டபம் மற்றும் உணவு விடுதிகளில் சோறு வடிக்கும் கஞ்சி மற்றும் காய்கறி கழிவுகளை சேகரித்து, இதுபோல் வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்க வழி செய்யலாமே!
— எஸ்.பூவேந்தரசு, கம்பை நல்லூர்.
