PUBLISHED ON : ஜன 24, 2016

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
தெய்வம் படத்துக்கு, கண்ணதாசன் எழுதிய பாடல்களை படித்த குன்னக்குடி, 'அண்ணே... பாட்டெல்லாம் அருமையா வந்துருக்கு; வழக்கமா பாடுறவங்களுக்கு பதில், மதுரை சோமு, பித்துக்குளி முருகதாஸ், பெங்களூரு ரமணி அம்மாள், ராதா ஜெயலட்சுமி, சூலமங்கலம் சிஸ்டர்ஸ்ன்னு ஆளுக்கொரு வாய்ப்பு தரலாம்...' என்று கூறினார்.
மருதமலையில் கச்சேரி செய்திருந்தார் மதுரை சோமு. பெங்களூரு ரமணி அம்மாளின், புகழ்மிக்க நர்த்தன விநாயகர் பாடலான, 'பொம்ம பொம்ம தான் தைய தைய தான்...' பாடல், தேவருக்கு போட்டு காட்டப்பட்டது. சாமி பாட்டிலும், 'டப்பாங்குத்தா!' என்று தேவருக்கு ஆச்சர்யம்.
விஷயத்தை அறிந்ததும், படத்தில் பாடுவது மட்டுமல்லாமல், தங்களின் கச்சேரியும், முதன் முதலாக சினிமாவில் இடம்பெறுகிறதே என்று, கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அளவில்லா சந்தோஷம்.
'எல்லாம் சரிப்பா... எனக்கு டி.எம்.எஸ்., சீர்காழி பாட்டுக கண்டிப்பா வேணும்...' என்ற தேவர், அப்படத்தில் அவர்களையும் பாட வைத்தார்.
விஜயா கார்டன் ஒலிப்பதிவுக் கூடம்; தெய்வம் படத்தின் பாடல் பதிவு. 'முருகா முருகா...' என்ற படி, உள்ளும், புறமும் அலைந்தவாறு இருந்தார் தேவர்.
'மருதமலை மாமணியே முருகைய்யா...' பாடல், ஆறு நிமிடம், 48 நொடி ஓடக் கூடியது. அப்பாடலின் பதிவே, அதிக நேரத்தை எடுத்தது. மதுரை சோமுவும், அதற்கு முன் திரைப்படத்துக்காக பாடியது இல்லை.
ஒலிப்பதிவு கூடத்தை எட்டிப் பார்த்தார் தேவர்.
கடைசி சரணம் கேட்டது. 'வேலய்யா...' என்று, ஒவ்வொரு அட்சரமாக பாடி, பாடல் நிறைவு பெறும் போது, மயங்கி விழுந்தார் சோமு. அதைப் பார்த்ததும், 'அய்யோ முருகா... என்னை சோதிச்சுப்புடாதே...' என்றபடி, எல்லாரையும் தள்ளி, ஒலிப்பதிவு கூடத்திற்குள் ஓடினார் தேவர்.
'டேய் முருகா... உன் மேலே தானே அவரு உருக்கமா பாடினாரு; அவரை கீழே சாச்சுப்புட்டியே... சாமான்யமான ஆளா அவரு... நான் எல்லாருக்கும் பதில் சொல்ற நிலைமய உண்டாக்காதே; மொதல்ல அவரை எழுப்புடா பழனியாண்டி...' என்று பதறினார்.
குன்னக்குடிக்கு, தேவர் புதுசாக தெரிந்தார். 'இப்படி, ஒரு முருகன் பைத்தியமா...' என்று நினைத்தவர், மதுரை சோமு, மயக்கத்தில் இருந்து மீளாவிட்டால், அடுத்த திட்டு தனக்கும் விழுமோ என்று அஞ்சினார்.
ஒருவர் ஓடிப்போய், சோடா கொண்டு வந்தார். வேகவேகமாக அதை வாங்கி, சோமுவின் முகத்தில் அடித்தார் குன்னக்குடி. கண் விழித்த சோமு, பேய் அறைந்தவர் போல் நின்றிருந்த தேவரைப் பார்த்து, 'தேவரே... உங்களுக்கு என்னாச்சு... எம் பாட்டு பிடிக்கலியா...' என்று மெல்லக் கேட்டார்.
கலகலவென்று சிரித்து, 'மருதமலையை, உங்க குரலால எவ்வளவு உயர்த்தணுமோ அப்படி செஞ்சிட்டீங்க... இந்த பாட்டு ஒண்ணு போதும்; என்னிக்கும் சினிமாவுல உங்க பேரை சொல்ல...' என்றார் தேவர்.
'அவரை தரிசிக்க வேண்டும்' என்பது சினிமா உலகில் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., உட்பட அனேக வி.ஜ.பி.,களின் ஆசை. அத்தகைய மகானே ஒருநாள், தேவரை வரக் கூறியிருந்தார். ஆன்மீக ஆலமரத்தின் அருள்பார்வை தன் மீது விழாதா என்று, அனைவரும் ஏங்கித் தவிக்கையில், தேவருக்கே முதல் அழைப்பு!
புனிதம் என்பதற்குரிய அர்த்தத்தையே அவரை பார்த்த பின் தான் தெரிந்து கொண்டார் தேவர். திருப்பாதம் விழுந்து தொழுதவர், தன் குறையை கூறினார்.
'உடம்பு முடியலிங்க சாமி, சர்க்கரை...' என்றார்.
புன்னகைத்தார் அந்த மகான். அவர் சிரித்தது உதயசூரியன் போல் இருந்தது. அவரது முக தேஜசில், தேவருக்கு கண்கள் கூச, கை கூப்பி நின்றார்.
'நீ ஏன் கவலப்படற... உனக்கு தான் காவலாளி மாதிரி முருகன் இருக்கானே...' என்றார்.
தேவரின் மனதுக்குள், 'நான்' என்கிற அகம்பாவமோ, எல்லாம் என் காசு என்கிற சுயநலமோ, எதுவோ ஒன்று அறுந்தது; உடைந்து போனார் தேவர். எத்தனை பெரிய வார்த்தை; இந்த பாமர வியாபாரிக்கு தகுமா...
கைகளை உயர்த்தி, ஆசி கூறினார் காஞ்சி மகாபெரியவர்!
பொத்திய கரங்களை எடுக்க மனசில்லாமல் திரும்பினார் தேவர்.
மவுனம் தெய்வாம்சம்; சத்தம் அசுரத் தாண்டவம்!
கடந்த, 1972ல் தீபாவளி அன்று, தெய்வம் படம் வெளியானது. 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்...' பாடல் ஒலிக்காத ஊர் இல்லை. 'மருதமலை மாமணியே...' கேசட், தினமும் விற்று தீர்ந்தது. 'ரிகார்ட் பிரேக்...' என்றனர். வெலிங்டன் தியேட்டர், ஐயப்ப சுவாமிகளால் நிரம்பியது. 'வசந்த மாளிகைக்கு அடுத்து, தெய்வம் 1972 - 73ல் ஆறு மாதங்களுக்கும் மேல், வசூலில் சிறப்பிடம் பெறும்...' என்று, ரிப்போர்ட் வந்தது.
'பரவாயில்லப்பா...
எம்.ஜி.ஆர்., இல்லன்னாலும், ஜனங்க விரும்புற மாதிரியான சினிமாவ எடுத்துடறோம்...' என்றார், தேவர் சந்தோஷத்துடன்!
மருதாசல மூர்த்தியை தரிசிக்க கிளம்பினார் தேவர். காஞ்சி சங்கர மடத்திலிருந்து ஆள் வந்திருப்பதாக கூறினர்; அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
'தெய்வம் படத்தில் இடம்பெற்ற அறுபடை வீடு முருகன் சிலைகள் காஞ்சிக்கு எழுந்தருள வேண்டும்; காஞ்சி குமர கோட்டத்தில், கந்தர் சஷ்டி விழாவில், பக்தர்கள் தரிசனத்துக்கு தேவைப்படுது; மகா பெரியவர் விருப்பம்...' என்றதும், காஞ்சி மகானை எண்ணி கை தொழுதார். அவர் கண்களிலிருந்து நீர் பெருகியது. 'இது என் பாக்கியம்... கனவுலயும் இதை நான் நினைச்சு பாக்கல...' என்று கூறியவர், வாகினி ஸ்டுடியோவிற்கு விரைந்தார்.
தானே முன் நின்று, ஆறுமுகனின் தெய்வீக வடிவங்களை, லாரிகளில் ஏற்றி, காஞ்சிக்கு அனுப்பினார்.
வாகினியின், ஆறாவது தளம்; அனைவரிடமும் ஒரு பரபரப்பு தென்பட்டது. காரணம், வெள்ளிக் கிழமை விரதம் பட ஷூட்டிங்!
வயதுக்கு மீறிய துணிச்சலுடன், கட்டிலில் படுத்திருந்தார் ஜெயசித்ரா. 'எதிர்பார்த்தபடி நடிப்பாரா...' என்ற சந்தேகம் தேவருக்கு!
கோமாதா என் குலமாதா படப்பிடிப்பின் போது, தேவரிடம் வாய்ப்பு கேட்டார் ஜெயசித்ரா. ஏற்கனவே, பொண்ணுக்கு தங்க மனசு மற்றும் சொல்லத்தான் நினைக்கிறேன் படங்கள் மூலம் பிரபலமாகியிருந்தார் ஜெயசித்ரா. இதனால், தன் புதிய படமான, வெள்ளிக் கிழமை விரதம் படக் கதையைக் கூறி, 'தைரியமா நடிப்பியா?' என்று கேட்டார் தேவர். அவர் வேகமாக தலையாட்டவும், அவரை ஒப்பந்தம் செய்தார்.
'மஸ்தான்... கொடுத்து வைத்தவள் பட ஷூட்டிங்கில், எம்.ஜி.ஆரை பாம்பை வைச்சு, கொத்த வைச்ச ஆளு நீ... 'பாம்புக்கு என்ன தெரியும்... மஸ்தானை அடிக்காதீங்க...'ன்னு உன்னை மன்னிச்சு விட்டாரு எம்.ஜி.ஆர்., இப்ப, இங்க புதுப்பொண்ணு நடிக்குது. ஜெய்சங்கர், ஒரு டஜன் படத்துல, இந்த அம்மாவ ஒப்பந்தம் செய்து வெச்சுருக்காரு. பார்த்து ஜாக்ரதையா பாம்பை விடு...' என்றார் தேவர்.
கேமரா ஓடியபடியே இருந்தது. மஸ்தான், சிவப்பு துணியை, ரயில்வே கார்டு போன்று ஆட்டினார். ஜெயசித்ராவின் பாதத்திலிருந்து மேலே ஏறிய பாம்பு, மார்பு பகுதிக்கு வந்தது. அடுத்து, ஜெயசித்ராவின் உதடுகளில், முத்தமிட வேண்டும்.
நாகத்துக்கு, ஜெயசித்ராவின் வாசம் பிடிக்கவில்லை போலும், மெல்ல நகரத் துவங்கியது.
பதறிய தேவர், 'முருகா... பாம்ப முத்தமிடச் சொல்லு...' என்று சீறியவர், 'கேமராவ நிறுத்தாம ஓட்டுங்கப்பா...' என்றார்.
சினிமா பாம்பு, இயக்குனர் கூறியபடி கேட்குமா? தேவரை எல்லாரும் பரிதாபமாக பார்த்தனர். அவரும், எத்தனை முறை தான் முருகனை அழைப்பார்!
பயந்து நடுங்கினார், பாம்பு பயிற்சியாளர் மஸ்தான், 'அல்லா... பாம்பு நல்லபடியா நடிக்கணும்; பக்ரீத்துக்கு எல்லாருக்கும் குர்பானி கொடுக்கறேன்...' என்று வேண்டினார்.
சிறிது நேரத்தில், ஜெயசித்ரா உதடுகளின் ஈரம் சுவைத்தது பாம்பு. பதற்றப்படாமல், அதை அனுபவித்த ஜெயசித்ரா, கண்களை லேசாக திறந்தார். ஷாட், முடிந்தது. 'ஓ.கேவா... எழுந்துக்கலாமா...' என்றபடி தேவரை தேடினார்.
ஜெயசித்ராவின் உடல் அசைந்ததும், புஸ்ஸென்று சீறியது பாம்பு. 'அய்யோ... எம் பொண்ணை, பாம்பை விட்டு கொத்த விட்டுட்டீங்களே...' என, அலறினார் ஜெயசித்ராவின் தாய். கேமராவை நிறுத்த சொல்லி, பாம்பை பிடித்து தூர எறிந்தார் தேவர்.
'அப்பாடா... எம் மருதமலையான் காப்பாத் திட்டான்; நானும், பானுமதியில ஆரம்பிச்சு எத்தனையோ நடிகைகளை பாத்துருக்கேன்; நீ துணிச்சல்கார பொண்ணும்மா... பயப்படாம நடிச்சே...' என்று பாராட்டினார் தேவர்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்
