PUBLISHED ON : ஜன 24, 2016

சென்னை எத்திராஜ் கல்லூரியில், இந்த ஆண்டு பி.ஏ., படித்து முடித்தார் நண்பி ஒருவர். இவர், பெரிய தொழில் அதிபரின் மகள். தன் தந்தையின், பிசினசில் இறங்குமுன், சில நாட்கள் எங்காவது வெளிநாடுகளில் விடுமுறையை செலவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில், என்னிடம் ஆலோசனை கேட்டார்.
நான் அமைத்துக் கொடுத்த பயணத் திட்டத்தின்படி, அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் சென்று, சென்னை திரும்பியவர், சமீபத்தில் என்னை சந்தித்தார்.
அவரது பயண அனுபவங்களைக் கூறியவர், 'அந்து... நீ சொல்வது, நூறு சதம் உண்மை! என்ன தான் வெளிநாடு என்றாலும்: பட்டனைத் தட்டினால், காபி வருகிறது என்று சொன்னாலும், நம்மூரைப் போல ஆகாது...' என்ற, என் கருத்தை வலியுறுத்தினார்.
அவரைச் சீண்டி, மேலும் அவரிடமிருந்து விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவலில், 'மேடம்... நீங்க வசதி படைச்சவங்க... காரு, பங்களா, தோட்டம், எஸ்டேட், தொழிற்சாலைகள் உள்ளவங்க. நீங்க கூப்பிட்ட குரலுக்கு கைகட்டி சேவகம் செய்ய நூறு பேர் இருக்காங்க... என்னைப் போன்ற சாதாரண ஆளுக, நாலு காசு சம்பாதிக்கணும்... தலைக்கு மேலே ஒரு சின்னக் கூரை வேணும்ன்னு நினைக்கிறவங்க, நம்மூர் சம்பாத்தியத்திலே இதை நிறைவேத்த முடியுமா...' என்றேன்.
ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தவர், 'நீ சொல்றதும் உண்மை தான்...' என்றார்.
பின், வேறு எங்கெங்கோ, 'சப்ஜெக்ட்' சென்றது. மீண்டும் சிந்தனை வயப்பட்டவராகி, சிறிது நேரத்திற்குப் பின், ' நம்ம நாட்டு அறிவாளிங்க, விஞ்ஞானிங்க, டாக்டருங்க, இன்ஜினியருங்க எல்லாம் வெளிநாட்டுக்கு... குறிப்பா, அமெரிக்காவுக்கு ஓடிப் போயிடுறாங்கப்பா!
'இங்கிருந்து, 'மேனுவல் லேபரர்'களான எடுபிடி, கொளுத்து வேலைகள், டிரைவர்கள், மெக்கானிக்குகள் போன்றோர் வெளிநாடு சென்று சம்பாதிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்ல...' என்றதும், நான்,'மேனுவல் லேபரர்கள் வெளிநாடு செல்லலாம்; சம்பாதிக்கலாம். ஆனால், நம்மூர் டாக்டர்கள், இன்ஜினியர்கள் போறதப் பற்றி கவலைப்படுறீங்களே... இது எந்த விதத்தில் நியாயம்? அவர்களுக்கு இங்கு படிப்பை முடித்ததும், அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம், 20,000 முதல், 30,000க்குள் தானே கிடைக்குது... இதுவே, ஒரு டாக்டர் வெளிநாடு சென்று வேலை பார்த்தால், மாதம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்; ராஜ வாழ்க்கை வாழலாமே...' என்றேன்.
'நீ சொல்றது உண்மைதான். அமெரிக்காவில் இருந்து திரும்பும்போது, தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர், என்னுடன் பயணித்தார். அவர், ஒரு டாக்டர்; இப்போ, அமெரிக்காவில் வேலை செய்றாராம். 'இனி, எக்காரணம் கொண்டும் இந்தியா வந்து தொழில் செய்ய மாட்டேன்; அமெரிக்காவில் மாதம், பல லட்சம் சம்பாதிக்கிறேன். இது, அமெரிக்க வாழ்க்கைத் தரத்தையும், வருமானத்தையும் கணக்கில் கொள்ளும்போது மிகக்குறைந்த வருமானம் தான். ஆனாலும், என்னால் இங்கு கார் வைத்துக் கொள்ள முடிகிறது... நீண்ட நாள் கடன் பெற்று, மூன்று ஏக்கர் பரப்பளவு நிலத்தில் வீடு வாங்கிட்டேன். 'ஏசி' டபுள் டோர் பிரிட்ஜ், வாஷிங்மிஷின், மைக்ரோவேவ் அவன், 480 வாட், 'நாக்கா மிக்சி', ஸ்டீரியோ வித், 'சிடி' நாலு ரூமில், நாலு ஆள் உயர, எல்.ஈ.டி, 'டிவி'ன்னு வாங்கிட்டேன்... இந்தியாவில் என்னை போன்ற டாக்டர்களால், அதுவும் விழுப்புரம், விருத்தாசலம், தூத்துக்குடி போன்ற ஊர்களில், 'பிரைவேட் பிராக்டீஸ்' செய்தால் இவ்வளவு வசதியாக வாழ முடியுமா...' என்றார்.
'நான், அப்போதே அவரிடம், 'நறுக்'கென்று நாலு கேள்வி கேட்டிருப்பேன்; ஆனால், இன்னும், 10 மணி நேரம் அவருடன் பயணம் செய்யணுமே... கசப்பான அனுபவத்துடன் பயணத்தைத் தொடரவேணாம்ன்னு முடிவு செய்து, பேசாம இருந்துட்டேன்..' என்றார்.
'அந்த நாலு, 'நறுக்'கேள்வி என்னங்கிறத நான் தெரிஞ்சுக்கலாமா?' என்று கேட்டேன்.
'உன்னிடம் சொல்வதற்கு என்ன... இவர் படிச்சது யார் வீட்டுக் காசாம்? சாதாரண மக்கள் முதல், மாத வருமானம் ஈட்டுவோரிடமிருந்து பலவிதத்திலும் வசூலிக்கப்படும் வரி பணத்தில் தானே அரசாங்கம் இவருக்கு பாடம் கற்றுக் கொடுத்து, பட்டமும் அளித்தது. ஆக, இவர் படிப்புக்கு செலவு செய்வது, இங்குள்ள சாதாரண குடிமகன்... தன் படிப்புக்கு பணம் கொடுத்தவனுக்கு சேவை செய்யாமல், தன் சொந்த நலனில் அக்கறை கொண்டு, வெளிநாடுகளுக்கு ஓடுவது எந்த விதத்தில் சரி?
'இன்று ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்களில், 90 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஓடிடுறாங்க; இவங்க படிச்சது எல்லாம் நம் வரிப்பணத்தில்! இதை எப்படி அனுமதிப்பது...' என நீண்ட, 'லெக்சர்' கொடுத்தார்.
'சரி... இதற்கு என்ன தான் தீர்வு சொல்றீங்க?'
'போதும்பா... தெருவுக்கு நாலு டாக்டர்கள்... மூன்று இன்ஜினியர்கள் என்றாகி விட்டது. போட்டி அதிகமானதால், ஒருத்தருக்கும் சரியான வருமானமும் இல்லாம போயிடுது. அதனால, அடுத்த ஐந்து வருஷத்துக்கு அரசு, எல்லா மெடிக்கல், இன்ஜினியரிங் காலேஜுகளை மூடிடணும் அல்லது வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாயை படிப்புக் கட்டணமாக வசூலிக்கணும்...' என்றார் ஆவேசத்துடன்!
பேச்சு மிக சுவாரசியமாகவும், சூடாகவும் நீண்டு கொண்டிருந்தது. கடைசியாக, அவரது, 'ஐடியா'வை ஒட்டியே, நானும் ஒரு கருத்து கூறினேன்...
'வருஷத்திற்கு ரெண்டு லட்சம், ஒரு லட்சம் ரூபாய்ன்னு வசூலித்தால், உங்கள மாதிரி பணக்காரங்க மட்டுமே இந்தப் படிப்புகளை படிக்க முடியும்ங்கிற நிலை உருவாகிடும்.பணம் இல்லாத ஒரே காரணத்தால், நன்கு படிக்கக் கூடிய ஏழை, நடுத்தர வர்க்கத்து மாணவர்களுக்கு இழைக்கும் துரோகமாக இது மாறிடும்.
'அதனால, அரசு செலவில் படித்து, வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் டாக்டர்கள், இன்ஜினியர்களிடம், 10 லட்ச ரூபாய்க்கோ அல்லது அவர்கள் படிப்பிற்கு அரசு செலவிட்ட தொகைக்கோ கடன் பத்திரம் பெற்றுக் கொண்டபின், அவர்களை வெளிநாடுகளில் வேலை செய்ய அனுமதிக்கலாம். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள், கடன் தொகையை திருப்பித் தராவிட்டால், அதற்கு தகுந்தாற்போல் கடும் நடவடிக்கை எடுக்கும் விதியையும் ஏற்படுத்தலாம்...' என்றேன்.
'நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியது தான்...' எனக் கூறினார் நண்பி. வாசகர்களின்
கருத்து என்னவோ?
'சமண மதத்தைத் தோற்றுவித்தவர் மகாவீரர் தானே...' என்று குப்பண்ணாவிடம் கேட்டார் அன்வர் பாய்.
'இல்லயில்ல; மகாவீரருக்கு முன்பே சமண மதம் இருந்தது...' என்றார் குப்பண்ணா தொடர்ந்து...
'சமண மதத்தை இந்தியாவெங்கும் பரப்பியவர் தான் மகாவீரர். அவருடைய இயற்பெயர் வர்த்தமானர். இன்று பீகார் என அழைக்கப்படும் மகத நாட்டில், பாடலிபுத்திரத்திற்கு அருகில், குண்டலபுரம் என்ற ஊரில், கி.மு., 599ல் பிறந்தார்.
'இவருடைய தந்தை ஒரு சிற்றரசர்; தன், 30வது வயதிலேயே தம்முடைய செல்வத்தையெல்லாம் மக்களுக்கு வழங்கி, துறவியானார் மகாவீரர். கடுந்தவத்தால் விருப்பு, வெறுப்புகளை வென்றதால், இவரை, மகாவீரர் என்றனர்.
'சமண மதத்தின் கொள்கைகளை வகுத்தவர்கள் தீர்த்தங்கரர்கள்; இவர்கள், 24 பேர். இவர்களில் முதலாமவர் ரிஷபதேவர். தீர்த்தங்கரர்களின் வழி நின்று மக்களுக்குப் போதித்தார் மகாவீரர். இவரை கடைசி தீர்த்தங்கரர் என்பர்.
'தம் 72ம் வயதில் பவாபுரி என்னும் இடத்தில் மறைந்தார் மகாவீரர்...' என, விளக்கம் கொடுத்தார்.
அன்வர் பாய்க்கும், எனக்கும் புரிந்தது!
