PUBLISHED ON : ஜன 24, 2016

ம.சுஜாதா, வீரபாண்டி: பக்கத்து வீட்டு பெண்களிடம், குடும்ப பிரச்னைகளை, கவலைகளை மனம் விட்டு பேசலாமா?
'வேலியில் போற ஓணானை எடுத்து...' இந்த பழமொழி முழுமையாகத் தெரியும் தானே உங்களுக்கு... அது போல அவஸ்தைப்பட விரும்புகிறீர்களா? அப்படியே யாரிடமாவது, 'ஷேர்' செய்யும் எண்ணம் இருந்தால், பேப்பர், பேனாவை எடுத்து, மனதில் உள்ளதை எழுதி, பல முறை படித்துப் பார்த்தபின், கிழித்துப் போட்டு விடுங்கள்!
எம்.வித்யாசாகர், பெரியகுளம்: வறுமையில் கொடுமை எது என நினைக்கிறீர்கள்?
வயிற்றுக்காக உடலை விற்பது... அதுவும், அறியாப் பருவத்தில் இக்கொடுமையில் தள்ளப்படுவது! இந்தியாவில், 20 லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டு இருப்பதாக மனிதவள மேம்பாட்டு துறை கூறுகிறது. இவர்களில், 100க்கு 15 பேர் சிறுமியர். மும்பையில், இத்தொழிலில் ஈடுபடும் ஐந்து பேரில் ஒருவர், 12 வயதுக்குட்ட சிறுமியர்... கொடுமை!
எஸ். ஜெயராமன், சென்னை: அமெரிக்கர்களின் ஆர்வம், இப்போது எதன் மீது திரும்பியுள்ளது?
தம் மூதாதையர் யார் என்பதை அறிந்து கொள்வதில், மிகுந்த ஆர்வத்துடன் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம். நம்மில் பலருக்கு தாத்தா - பாட்டி யார் என்றே தெரியாத நிலை அல்லவா இருக்கிறது... ஒவ்வொருவரும் குறைந்தபட்சம், தம் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறையினரையாவது தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதே அந்த ஆராய்ச்சியில் இறங்குங்கள்... பல அரிய தகவல்கள் கிடைக்கலாம்!
டி.திருகுமரன், திருவொற்றியூர்: பெண்கள் கவர்ச்சி ஆடைகள் அணிவதால் தானே, அவர்களுக்கு ஆபத்து நேருகிறது?
அப்படித்தான் நீதிபதிகள் கூறுகின்றனர்; டில்லியை சேர்ந்த அமைப்பு ஒன்று, நீதிபதிகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், 'தூண்டி' விடும்படியான ஆடைகளை பெண்கள் அணிவதாலேயே, 'செக்ஸ்' குற்றங்கள் நடக்கின்றன என, 68 சதவீத நீதிபதிகள் கருத்துக் கூறியுள்ளனர்!
கெ.ஸ்ரீனிவாசன், மதுரை: காதல் திருமணம் செய்து கொள்வோர் பெண் போலீசாக இருந்தாலும், பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் இருப்பது ஏன்?
என்னதான் சம்பாதித்தாலும், உயர் பதவியில், அதிகாரத்தில் இருந்தாலும், சுயகாலில் நின்றாலும், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில், மன திடம், உறுதி இன்னும் பெண்ணுக்கு வளரவில்லை!
சி.என்.ஜாபர், கடலூர்: சென்னைக்கு வந்தால் பிழைக்கலாமா?
புத்திசாலித்தனமாக உழைக்கும் திறமை இருந்தால், உங்க ஊரிலேயே பிழைக்க முடியும். சென்னைக்கு வரவே வராதீர்கள்... இங்கே குடியிருக்க இடமேயில்லை!
கே.இனியவன், புதுச்சேரி: நன்றி மறந்தவர்களை தண்டிப்பது எப்படி?
தண்டனை கொடுக்க நாம் யார்? நன்றி மறந்தவருக்கு தண்டனை கொடுப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே இருந்தால், நம் நிம்மதி குறையும். பல தொல்லைகளும் வந்து சேரும். அவரவருக்குக் கிடைக்க வேண்டியது, அந்தந்த நேரத்தில் கிடைத்தே தீரும்.நிம்மதியாக மற்ற வேலைகளைப் பாருங்கள்!
