தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்!

அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்!

அலட்சியம் எனும் அற்புத ஆயுதம்!


PUBLISHED ON : ஜன 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் நண்பரின் மகள், மிக அழகாக இருப்பாள். சாதாரண அழகல்ல, தேவதை மாதிரி என்று கூட கூறுவேன். இவள் என்னிடம் கூறிய செய்தி...

'அங்கிள்... இது வரை, 22 ப்ரப்போஸ்களை அதாவது, 'நான் உன்னை காதலிக்கிறேன் கண்ணே...' என்ற கோரிக்கைகளை நிராகரித்திருப்பேன், தாங்க முடியலை இந்தப் பசங்களோட தொல்லை! அசடு வழிஞ்சவங்க பட்டியல், இன்னும் அதிகம்...' என்று கூறிய போது, அசந்து போனேன்.

சென்னையில் உள்ள பிரபலமான தொழிற் கல்லூரியில், நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி இவள். இவளது அழகிற்கு இருக்கும் ஆற்றலை விட, முகத்தில் அமிலம் வாங்காமல், 22 ஆண்களின் காதல் கணைகளை நிராகரித்து விட்ட வெற்றிகரமான செயல் தான், என்னை அதிகம் வியக்க வைத்தது.

இவளது அழகு, இவளின் முதல் ஆயுதம் என்றால், செய்த அலட்சியம், இரண்டாவது ஆயுதம். இவ்வளவு இளம் வயதில், அலட்சியம் எனும் பொல்லாத ஆயுதத்தை என்னமாய் கையாண்டிருக்கிறாள்...

காரணம், அலட்சியப்படுத்துவது என்பது, பிறரைக் காயப்படுத்தும் செயல். ஆனால், இதை காயப்படாமலும், காயப்படுத்தாமலும் கையாண்ட அழகு தான், இவளது அழகைவிட, மேலான அழகு என்பேன்.

ஒரு பெண், ஓர் ஆணின் செயல்களை, காதல் முயற்சிகளை அல்லது வார்த்தைகளை பொருட்படுத்துகிறாள் என்கிற போதுதான், இந்த ஒருதலைக் காதலனின் ஊக்கம் அதிகமாகிறது. உதாசீனப்படுத்தும் போது, 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்...' என்று எட்டாத திராட்சையை, நிராகரிக்கிற நரி போல், அவன் ஆகி விடுகிறான்.

காதல் விவகாரம் மட்டுமல்ல, நம்மை சீண்டிப் பார்க்கிறவர்களையும், நாம் மென்மையாக உதாசீனப்படுத்தும் போது தான், 'சே... இவன் நம்மைக் கண்டுக்கவே மாட்டேன் என்கிறானே...' என்று இவர்கள் சோர்வு அடைய ஆரம்பிக்கின்றனர்.

தம் செயல்களால், பிறர் பாதிக்கப்படுகிறார், எரிச்சலடைகிறார் என்று அறிகிற போது, இதை, நம் எதிராளிகள், பெரிய தூண்டுதலாக எடுத்து, மேலும் துன்புறுத்த ஆரம்பிக்கின்றனர். மாறாக, 'உங்களுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை; உங்களுக்கு ஈடு இணை இல்லை: உங்களுக்கு ஒருபோதும் நான் சமமாவேனா... உங்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா... நான் தானா அகப்பட்டேன்... என்னை விட்டு விடுங்கள்...' என்று மன்றாடுகிற போது தான், 'அப்படி வா வழிக்கு...' என்று குரூர சந்தோஷம் அடைந்து, நம்மை துன்புறுத்தும் பட்டியலிலிருந்து நீக்கி விட முன் வருகின்றனர்.

அதேநேரத்தில், எப்போது மண்டியிட, நாம் தயாரில்லையோ, அப்போதே, நாம் அலட்சியத்தை, ஆயுதமாக எடுத்துக் கொள்வதைக் தவிர வேறு வழியில்லை. நாம், இவர்களை அலட்சியப்படுத்துவது என, முடிவு செய்து விட்டால், அலட்சியப்படுத்துகிறோம் என்பது, வெளிப்படையாக தெரியாதபடி நடந்து கொள்ள வேண்டும்.

இதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பது, மிக முக்கியம்.

இவருக்கும், நமக்கும் இடையே, பொதுவான மனிதர்கள், அவ்வப்போது நம்மைக் கடந்து போவர். இவர்களிடம், 'உங்கள் ஆள், என்னை சும்மா சீண்டிப் பார்க்கிறார்; இது, என்னிடம் நடக்காது. அந்தாளை, நான் சட்டை செய்யவே மாட்டேன் தெரியும்ல... உங்கள் ஆளின் பாச்சாவெல்லாம், என்னிடம் பலிக்காது தெரிஞ்சுக்குங்க; சொல்லியும் வையுங்க...' என்பது போல், ஏதும் பேசி வைக்கக் கூடாது. இது, 'வா... இன்னும் எனக்குத் தொந்தரவு கொடு...' என்று சிவப்புக் கம்பளம் விரித்து, பன்னீர் தெளித்து, சாமரம் வீசி, வெற்றிலை, பாக்கு வைத்து, வரவேற்பதற்கு சமம்.

மாறாக, 'அவரெங்கே... நானெங்கே...' என்று அடக்கி வாசித்து விட வேண்டும். மாறாக, 'ஐ டோன்ட் கேர்...' என்று மட்டும் கூறி விட்டால் போச்சு! ஓய்ந்து கிடந்த தொந்தரவுகள், புதுப்பிக்கப்படும். பரணில் கிடந்த கோப்புகள், மேஜைக்கு வந்து விடும்.

'என்னய்யா இந்தாளு... எதுன்னாலும் கண்டுக்கவே மாட்டேங்குறான். இவன் போக்கே புரியலையே... இந்தாளோட கொள்கையே, கொஞ்சம் கூட பிடிபடலையே... இடிச்ச புளி மாதிரி இருக்கானேய்யா...' என்று எதிராளியை புலம்பவும், குழப்பவும் வைத்து விட வேண்டும். இதிலேயே முக்கால்வாசிப் பணி முடிந்தது.

லேனா கூறிவிட்டார்... 'இனி, அலட்சியமே என் வாழ்வின் பிரதானக் கொள்கை...' என்று எவரும் புறப்பட்டு விடக் கூடாது. கீழ்க்கண்ட வாக்கியம் தான், இக்கட்டுரையிலேயே, அடிக்கோடு இடப்படவேண்டிய செய்தி...

குடும்பம், தொழில், கடமை, புகழ், பொருள், உடல்நலம், சமூக அக்கறை மற்றும் மனிதநேயம் இவையே நம் லட்சியம்; மற்றவையெல்லாம் நமக்கு அலட்சியம்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us