PUBLISHED ON : ஜன 24, 2016

மனைவி சகுந்தலாவுடன், நீண்ட நாட்களுக்கு பின், தன் சொந்த கிராமத்திற்குப் போவதற்காக, விருதுநகர் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தான் பெருமாள். தூரத்தில், நாலைந்து வயதுடைய குழந்தையின் கையைப் பிடித்தபடி நின்றிருந்த தனலட்சுமியைப் பார்த்ததும், ''சகுந்தலா... அவங்க தான் தனலட்சுமி... நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல...'' என்றான் பெருமாள்.
அவளுக்கு ஞாபம் வந்தது. முதலிரவில், புது மனைவியிடம், என்ன பேசுவது என்று தெரியாமல், தன் முதல் காதலைப் பற்றிச் சொன்ன முட்டாள் புருஷனாயிற்றே! அவ்வளவு சுலபமாக, தனலட்சுமி என்கிற பெயரை, அவளால் மறக்க முடியுமா!
பெருமாளுக்கு, தனலட்சுமியைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மேலோங்கியது.
வெளியூரில், ஹாஸ்டலில் தங்கி, ப்ளஸ்1 படித்துக் கொண்டிருந்த பெருமாள், கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தான்.
மரங்கள் அடர்ந்த கருப்பசாமி கோவில் திடலில், காளிராஜ், மகாலிங்கம், அய்யாதுரை என, அவன் சக வயது நண்பர்களுடன் ஏதேதோ கதை பேசி, சிரித்தபடி அமர்ந்திருந்தான் பெருமாள். அப்போது, நான்கைந்து பெண்கள் கூட்டமாய் அவர்களைக் கடந்து சென்றனர். அவர்களில், ஒல்லியாய், 'வெடவெட'வென்று, புது நிறமாய் இருந்தவளைப் பார்த்து, 'யாருடா அவ...' என்றான் பெருமாள்.
'மொட்டையா யாருன்னா... நக்கலைக் கோட்டைக்காரிங்க நாலைஞ்சு பேர் போறாளுக. அவளுகள்ல யாரக் கேட்கிறே...' என்றான் மகாலிங்கம்.
'ஒசரமா, ஒடிஞ்சு விழுகுற மாதிரி, கறுப்புத் தாவணி கட்டியிருக்காளே... அவ தான்...' என்றான் கிறக்கத்துடன்!
'அது, தனலட்சுமிடா... நெசமாவே உனக்கு, அவள அடையாளந் தெரியலயா... நம்ம பள்ளிக் கூடத்துல தான் ஆறாப்புலருந்து, எட்டாப்பு வரைக்கும் படிச்சா. நமக்கு ஒரு வருஷம் ஜூனியர்டா...' என்றான்.
இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. அவளைப் பல முறை பார்த்துள்ளான். ஆனால், இன்றைக்கு அவள் புத்தம் புதிதாக தெரிந்தாள்.
அவளைப் பார்த்ததும், அவனுக்குள் என்னன்னவோ ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து, அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று ஆசை கிளர்ந்தது.
'எங்கடா போறாளுக...' என்றான், ஆர்வத்துடன்!
'எங்க போவாளுக... நம்ம ஊர் டூரிங் கொட்டகைக்கு சினிமா பார்க்கப் போவாளுக. இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லயா... படம் மாத்தியிருப்பானுங்க; அதான் புறப்பட்டுடாளுக...'என்றான்.
'நாமளும் போகலாண்டா...'
'ஏய்... அவளுக ஆம்பளத் துணை இல்லாம, தனியா வந்திருக்க மாட்டாளுக... அவளுகளுக்கு முன்னாலயோ, பின்னாலயோ, அவனுங்க வருவானுங்க... நாம அவளுகளப் பின் தொடர்ந்தது தெரிஞ்சது அவ்வளவு தான்... நம்ம எலும்ப எண்ணாம விட மாட்டானுங்க...' என்றான் மகாலிங்கம்.
'அதெல்லாம் பாத்துக்கலாம்; கிளம்புங்கடா...' என்று படுத்தி எடுத்தான் பெருமாள். உடனே, மகாலிங்கம், 'என்ன படம் போட்டுருக்கான்னு யாருக்காவது தெரியுமாடா...' என்று கேட்டான்.
'அழியாத கோலங்கள்ன்னு ஏதோ ஒரு படம். போஸ்டர்ல கமல்ஹாசன் படத்த தான் பெரிசா போட்டுருக்கான்; மத்தவங்க எல்லாமே புது முகங்களாகத் தெரிஞ்சது...' என்றான் அய்யாத்துரை.
கமல்ஹாசன் என்றதும் காளிராஜ் மட்டும் பெருமாளுடன் கிளம்பினான். மகாலிங்கமும், மற்றவர்களும், 'நமக்கு அடி தாங்காது மாப்ள...' என்று ஒதுங்கிக் கொண்டனர்.
அழியாத கோலங்கள் திரைப்படத்தில், கமல்ஹாசன், ஆரம்பக் காட்சியில், சில நிமிடங்கள் வந்து, கதையை பிளாஷ்பேக்கில் நகர்த்தி விட்டு காணாமல் போனதில், காளிராஜுக்கும், பெருமாளுக்கும் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. ஆனால், தொடர்ந்து பார்க்க பார்க்க, அந்தத் திரைப்படம் அற்புதமான அனுபவமாக இருந்தது.
திரைப்படத்தில் வந்த ஆசிரியை பாத்திரம், அவனின் சிறு வயது ஞாபகங்களைக் கிளறின.
அவனுடைய வாழ்க்கையிலும், அப்படிப்பட்ட அன்பான ஆசிரியை ஒருத்தி, கடந்து போயிருந்தாள்.
அவன் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, மூன்றாம் வகுப்பு ஆசிரியரைப் பார்த்தாலே அவனுக்கு பயமாக இருக்கும். அவருக்கு பயந்து, 'இரண்டாம் வகுப்பில் பெயிலானால் கூட பரவாயில்ல...' என்று நினைப்பான். காரணம், அந்த வகுப்பிலிருந்து தான், ஆங்கிலம் ஒரு பாடமாக அறிமுகமாகிறது. மூன்றாம் வகுப்பு ஆசிரியர் ஆங்கிலத்தைப் போதிக்கும் போது, பிள்ளைகளுக்கு பேதியாகி விடுகிறது என்றும், அவர் பிள்ளைகளை அடித்துத் துவைத்து, காயப் போட்டு விடுகிறார் என்றும், உடன் படிப்போர் அவனுக்கு திகிலூட்டியிருந்தனர்.
அவரின் அடிக்குப் பயந்தே, நிறைய மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் பாதியோடு படிப்பை நிறுத்தி, ஆடு, மாடு மேய்க்கப் போய் விடுவர். அதனால், கோடை விடுமுறை முடிந்த பின், முதல் நாள் பயந்தபடியே பள்ளிக் கூடத்துக்குப் போனான் பெருமாள்.
ஆனால், ஆங்கில வாத்தியார், ஆறு மாத விடுப்பில் போயிருக்கும் விஷயம் தெரிந்ததும் சந்தோஷமடைந்தான். சிறிது நேரத்திலேயே, 'சீக்கிரம் புது வாத்தியார் வந்துடுவார்...' என்றதும், அவனுக்கு கலக்கமாக இருந்தது.
அடுத்த சில நாட்களில், தேவதை மாதிரி ஒரு ஆசிரியை, ஆங்கிலம் போதிக்க வகுப்பிற்கு வந்தாள்.
அவள், தன்னை அமுதவல்லி என்று அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு மாணவனின் பெயரையும், நிதானமாக விசாரித்தாள். அவள் வந்ததும், பள்ளிக்கே தேஜஸ் வந்தது போல் இருந்தது. பக்கத்து ஊரான மெட்டுக்குண்டிலிருந்து வந்திருந்த அவள், அப்போது தான், படித்து முடித்து, பணிக்கு வந்திருந்ததால், இளம் பெண்ணாக இருந்தாள்.
அவள் குடை பிடித்து, ஒயிலாக நடந்து வரும் அழகும், பிறந்த குழந்தைக்கு சங்கில் பால் புகட்டுவது போல், பொறுமையாக ஆங்கிலம் கற்பித்த விதமும் அவ்வளவு அழகு. அத்துடன், அமுதவல்லி டீச்சர் யாரையும் அடிக்கவோ, ஏன் அதட்டக் கூட மாட்டாள்.
பொறுமையின் சிகரமாக இருந்தாள். அவ்வப்போது வகுப்பில் மாணவர்களுக்கு பென்சில், ரப்பர், பலப்பம் என்று சிறு பரிசுகள் தந்து உற்சாகப்படுத்துவாள். அவற்றை வாங்குவதற்காகவே, ஆர்வமாக ஆங்கிலத்தைப் படித்தனர் மாணவர்கள்.
தமிழ் மீடியத்தில் படித்த பெருமாள், மேல்நிலைக் கல்வி முடிந்து, இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்த போது, அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் நடத்தப்பட, மற்றவர்கள் எல்லாம் படிக்க திணறிய போது, அவன் கொஞ்சமும் பயமின்றி, பாடங்களை எதிர்கொண்டான். காரணம், அமுதவல்லி டீச்சர் கற்றுக் கொடுத்திருந்த அரிச்சுவடி ஆங்கிலம்!
மாணவர்களின் கல்வி அறிவில் அஸ்திவாரத்தை பலமாக போட்ட அமுதவல்லி டீச்சருக்கு, ஆயுள் ரேகை தான், மிகவும் பலவீனமாக இருந்தது.
ஆறு மாதம் லீவு போஸ்டில் பணியாற்றிய அமுதவல்லி டீச்சருக்கு, அதன்பின், சிறிது தொலைவில் உள்ள கிராமத்தில் நிரந்தர வேலை கிடைத்தது. விடுமுறையில் அவள் வீட்டிற்குச் சென்று, ஆங்கிலம் மட்டுமல்லாது, மற்ற பாடங்களையும் கற்கத் துவங்கினான் பெருமாள்.
அவன் எட்டாவது படிக்கும் போதுதான், திடீரென்று ஒருநாள் அமுதவல்லி டீச்சர் இறந்து போனாள். அவளின் மரணத்திற்கான காரணம், அரசல் புரசலாக வெளியே தெரிய வந்த போது, பெருமாளுக்கு மட்டுமல்ல, அந்த கிராமத்திற்கே அதிர்ச்சியாக இருந்தது.
அமுதவல்லி புதிதாய் வேலைக்கு சேர்ந்த இடத்தில், சக ஆசிரியர் ஒருவரைக் காதலித்து, அதைப் பற்றி வீட்டில் சொல்லியிருக்கிறாள். ஆனால், அந்த ஆசிரியர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவளின் திருமணத்திற்கு அவள் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இதனால், அவனுடன் ஓடிப் போய் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளாள். இதையறிந்த அவள் குடும்பத்தார், உணவில் விஷம் வைத்து, அவளைக் கொன்று விட்டனர். பெற்ற பெண்ணின் உயிரை விட, ஜாதியும், கவுரவமும் தான் அவர்களுக்கு பெரிதாய் இருந்துள்ளது.
அன்று படம் முடிந்ததும், நற்கலைக்கோட்டைப் பெண்களைத் தேடினான் பெருமாள். அவர்கள் உறவினர்களுடன் சைக்கிளில் கிளம்பிப் போயிருந்தனர்.
அன்றிலிருந்து, தனலட்சுமியைக் காதலிக்கத் துவங்கினான் பெருமாள். அவன் மனதுக்குள், அமுதவல்லி டீச்சர் வந்து எச்சரித்தாள். அவளுக்கு நேர்ந்தது, அவனுக்கோ அல்லது தனலட்சுமிக்கோ நேர்ந்து விடுமோ என்று, ஒரு கணம் பயந்தான். காரணம், தனலட்சுமி மேல் ஜாதி; பெருமாள் அவர்களை அண்டிப் பிழைக்கும் அடிமட்ட ஜாதி!
ஆனாலும், இளமை, அவனின் பயத்தை வென்று விட, அவளைக் காதலிப்பது என்று தீர்மானித்தான். எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி, வீட்டிலிருந்தாள் தனலட்சுமி.
அதனால், அவள் வெளியே வரும் தருணங்கள் அபூர்வம்; திருவிழா, சினிமா, தோழிகள் வீட்டு விசேஷங்கள் என்று எப்போதாவது தான் வெளியே வருவாள். அவள் வரும் தகவல் கிடைத்ததுமே, ஓடிப் போய் நிழல் போல தொடர்ந்து, தூரத்திலிருந்தபடி அவளை பார்த்து விட்டு திரும்புவான்.
அதன் பின்பும், விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது, வாடகை சைக்கிளை எடுத்து, அவள் ஊருக்குப் போய், அவள் தெருவில் அலைவான். அவள் தற்செயலாக வீட்டிற்கு வெளியே வரும் போது, பார்த்து, சந்தோஷமாய் வீடு திரும்புவான்.
நற்கலைக்கோட்டையில் பெரும் பணக்காரர் ஒருவரின் ஒரே மகன், சில ஆண்டுகளுக்கு முன், தேள் கடித்து இறந்து போனான். அவனுக்கு பெரிய சமாதி கட்டி, ஆண்டுதோறும் அவன் நினைவு நாளை, திருவிழா மாதிரி கொண்டாடினர்.
பகலில் அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள், இரவில் நாடகம், சினிமா என்று அமர்க்களப்படும். இத்திருவிழாவில், தனலட்சுமியைப் பார்ப்பதற்காகவே, ஏதோ ஒரு காரணம் சொல்லி, பள்ளிக்கு விடுப்பு போட்டு, ஊருக்கு வந்திருந்தவன், மகாலிங்கத்தையும் அழைத்துக் கொண்டு, நற்கலைக்கோட்டைக்குப் போயிருந்தான் பெருமாள்.
ஆனால், திருவிழாத் திடலில் தேடியும், அவள் தெருவில், திரும்பத் திரும்ப அலைந்தும், அவள் தென்படவேயில்லை. கடைசியில், தைரியத்தை வரவழைத்து, அவள் வீட்டு வாசலில் நின்று, குரல் கொடுத்தனர். 'யாரு...' என்றபடியே வெளியே வந்தார் அவளுடைய அப்பா.
அவருடைய ஆஜானுபாகுவான தோற்றத்தைப் பார்த்ததும், பயத்தில் மிரண்டு நின்றனர்.
தனலட்சுமியோ, அவள் அம்மாவோ தான் வருவார்கள் என நினைத்து குரல் கொடுக்க, கொஞ்சமும் எதிர்பாராமல், அவள் அப்பா வந்து, 'என்ன வேணும்...' என்று அதிகாரமாய்க் கேட்கவும், இருவரும் நடுநடுங்கிப் போயினர்.
மகாலிங்கம் தான் தைரியத்தை வரவழைத்து, 'நாங்க பக்கத்தூர்லருந்து திருவிழாப் பாக்க வந்துருக்கோம்; குடிக்கக் கொஞ்சம் தண்ணி வேணும்...' என்றான்.
'பக்கத்து ஊருன்னா நீங்க யாருடா ...' என, மறுபடியும் அதட்டினார்.
'நான் எங்க ஊர்ப் பள்ளிக்கூடத்து தாளாளர் பையன்...' என்று நடுங்கியபடி சொன்னான் மகாலிங்கம். அவர் சமாதானமாகி, தனலட்சுமிக்கு குரல் கொடுத்து, தண்ணீர் கொண்டு வரச் சொல்ல, அவளும் கொண்டு வந்து கொடுத்தாள்.
நடுங்கிக் கொண்டே, 'மடக்மடக்'கென்று தண்ணீரைக் குடித்தான் மகாலிங்கம். அவளை ஆசை தீர பார்த்தான் பெருமாள். அவள் அப்பா அருகில் இல்லாத தைரியத்தில், மெதுவாக, 'நீங்க திருவிழா பாக்க வர மாட்டீங்களா...' என்று கேட்டான் மகாலிங்கம்.
'எங்கப்பாவுக்கு அதெல்லாம் புடிக்காது. அனுப்ப மாட்டார்; ஏன் கேட்குறீங்க...' என்றாள்.
'சும்மா தான் கேட்டேன்; அப்ப ராத்திரிக்கு சினிமா பாக்கவும் போக மாட்டீங்களா...' என்றான் தொடர்ந்து!
'எங்கப்பா ராத்திரி காவலுக்குக் கிளம்பிப் போன பின், நானும், எங்கம்மாவும் சினிமாப் பாக்கப் போவோம்...' என்று சொல்லி சிரித்தபடியே வீட்டிற்குள் சென்றாள்.
தனலட்சுமியின் அப்பா, ஊர் பொதுவில் நியமிக்கப்பட்ட காவல்காரர். இரவில் காடு, கழனிகளில் அலைந்து கொண்டிருப்பார்.
அவள் சினிமாப் பார்க்க வரும் வரை காத்திருந்து, அவள் வந்ததும், தூரத்தில் அமர்ந்து அவளையே ரசித்தான் பெருமாள்.
படித்து முடித்து, நல்ல வேலையில் அமர்ந்த பின், தன் காதலைச் சொல்லிக் கொள்ளலாம் என்றும், ஊர் காவலரான அவள் அப்பாவை, எளிதில் சமாதானப்படுத்தி விடலாம் என்றும் நினைத்திருந்தான் பெருமாள். ஆனால், அவன் கல்லூரியில் படிக்கும் போதே, தனலட்சுமிக்கு கல்யாணமாகி, அவனுடைய ஒருதலைக்காதலும் மனசுக்குள்ளேயே முறிந்து போனது.
பஸ்சிலிருந்து இறங்கிய போது தான், பெருமாளைப் பார்த்தாள் தனலட்சுமி. ஆர்வமாய், அவளாகவே வந்து, அவனிடம் நலம் விசாரித்தாள். கிராமத்திற்கு போவதற்காக, கண்மாய்க் கரை மேட்டில், எல்லாரும் சேர்ந்து நடந்த போது, தனலட்சுமியிடம் சகஜமாகப் பேசத் துவங்கினாள் சகுந்தலா.
ஒரு கட்டத்தில் சிரித்தவாறு, ''இவர் என்கிட்ட சொல்லியிருக்காரு... சின்ன வயசுல உங்களத் தீவிரமாய் காதலிச்சாராம்... தெரியுமா?'' என்றாள் சகுந்தலா.
''தெரியாம என்ன... அவ்வளவு சின்ன ஊருல ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வர்றப்ப, தெரியாமப் போகுமா...'' என்றாள் அவளும் சிரித்துக் கொண்டே!
இதைக் கேட்டதும், பெருமாளுக்கு சிலீரென்று இருந்தது.
''நீயும், பெருமாளைக் காதலிச்சியா தனலட்சுமி...'' குறுகுறுப்புடன் கேட்டாள் சகுந்தலா.
''பெருமாளக் காதலிச்சனா இல்லையான்னு எனக்குத் தெரியல; ஆனா, அந்த காதல், அவரோட வாழ்க்கையையே காலி செய்துடும்ங்கிற உண்மை மட்டும் தெரியும். பெருமாள் என் கூட பேசுறதப் பாத்தாலே, எங்க ஜாதி சனம் வெட்டி பொலி போட்டுரும்.
''படிப்பு வாசனை இல்லாத, வெறும் ஜாதியை மட்டுமே பெரிசா நினைச்சு வாழற மூட சமூகம் எங்களோடது! அதனால, நல்லாப் படிக்கிற ஒருத்தரோட வாழ்க்கை, காதல்ங்குற பேரால அழிஞ்சு போக வேணாமேன்னு தான், அவர என்னை நெருங்க விடாம, விலகிப் போயிட்டேன்.
''அதென்ன... அவருக்கும், எனக்கும் காதலிக்கிற வயசா அது! கல்யாணம் செய்றதுக்கு சாத்தியமே இல்லாத, அப்படியே செய்துகிட்டாலும், வாழ்க்கை முழுக்க இந்த சமூகத்தோட போராடிக்கிட்டே இருக்க வேண்டிய காதலால எப்படி சந்தோஷமா வாழ முடியும்... நான் பெருமாள சட்டை செய்யாததால தான், அவர் இப்ப பி.இ., படிச்சு, பெரிய வேலையில இருக்கார். இல்லன்னு சொல்ல முடியுமா...'' என்று கூறி சிரித்தாள் தனலட்சுமி.
அவள் சொன்னது எத்தனை நிஜம். அமுதவல்லி டீச்சர் என்ன தவறு செய்தாள்... மனதுக்குப் பிடித்தவனைக் காதலித்ததை தவிர! அதற்காக தன் குடும்பத்தாராலேயே விஷம் வைத்து கொல்லப்பட்டாளே...
ஆனால், தனலட்சுமி எத்தனை விவேகமாக செயல்பட்டு, தன்னைக் காப்பாற்றியிருக்கிறாள் என நினைத்த போது, பெருமாளுக்கு அழுகை முட்டியது. தனலட்சுமியின் ஆழமான காதலை அறிந்து அவன் மனசுக்குள், பூக்கள் பூத்துக் குலுங்கியது.
தனலட்சுமியின் மகனின் தலையைப் பிரியமாய் தடவியபடி, ''உன் பேரென்னப்பா...'' என்றாள் சகுந்தலா.
''மை நேம் இஸ் பெருமாள்; ஐ ஆம் ஸ்டடியிங்...'' என்று ஆரம்பித்ததுமே, பெருமாளுக்கு கண்ணீர் முட்டி, அழுகை வெடித்தது.
சில்வியா மேரி
