
இளைஞர் சக்தியை ஒருமுகப்படுத்துவோம்!
எங்கள் ஊரில் இளைஞர்கள் சிலர், எப்போதும், கால்வாய் தடுப்பு சுவரில் அமர்ந்து, வம்பு பேசிக் கொண்டிருப்பர். படிப்பும் ஏறாமல், வேலை செய்வதிலும் அக்கறை இல்லாமல் வீண் பொழுதுபோக்கும் இவர்களை பார்க்கும் போதெல்லாம், என் மனம் சங்கடப்படும். அந்த கோஷ்டியில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவனும் இருந்தான். ஒருநாள், அவனை தனியாக அழைத்து, 'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வெட்டிப் பேச்சு பேசி, பெத்தவங்க உழைப்பில் வாழ்வீங்க... ஒரு வேலையை பாத்தோமா, வாழ்க்கையில் முன்னேறினோமான்னு இருக்கக் கூடாதா?' என்றேன்.
அதற்கு அவன், 'வேலை செய்ய ஆசை தான்; ஆனா, எங்களுக்கு படிப்பு ஏறல; தொழிற்கல்வி கற்க, ஐ.டி.ஐ., சேர்ந்தோம். அதுவும் சரிப்படல. நாங்க என்ன தான் செய்றது...' என்றான்.
'சரி அதை விடு... எலக்ட்ரிஷியன், பிளம்பர், தச்சர், இரு சக்கர வாகன மெக்கானிக் போன்ற எத்தனையோ வேலைகள் இருக்கு. அதுவும் கடினம்ன்னா, பெயின்டர் வேலைய கத்துக்கலாம். பிரஷ்ஷையும், பெயின்டையும் கையாள கத்துக்கிட்டாலே, தினமும், 700 ரூபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கலாம். சென்னை போன்ற பெருநகரங்கள்ல, பெயின்டர்கள் அதிக அளவுல தேவைப்படுறாங்க...' எனக் கூறி, எனக்கு தெரிந்த பெயின்ட் டீலர் ஒருவரிடம் அவனை அறிமுகப் படுத்தினான்.
அவர், அவனுக்கு, பயிற்சி கொடுத்ததோடு, இன்னும் சிலரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். வீண் பேச்சுக்கு விடை கொடுத்த அவனும், அவனது நண்பர்களும் இன்று தினம், 800 ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
இளைஞர்களிடம் ஏராளமான சக்தியும், திறமையும் ஒளிந்துள்ளது. அந்த திறமை என்ன என்று அடையாளம் கண்டு, அத்துறையில் அவர்களது சக்தியை ஒருமுகப்படுத்தினால், அவர்கள் உயர்வுக்கு உத்தரவாதம் உண்டு. இதை, நம் தலைவர்கள் செய்தால், நம் இந்தியா, விரைவில் வல்லரசாவது உறுதி. இத்தகைய இளைஞர்களை, அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டு நலனுக்காக பயன்படுத்துவது நம் தலைவர்களின் தலையாய கடமை. செய்வரா!
— ஆர்.ஆர்.தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மாமியாரை புரிந்து கொண்டால் போதுமே!
சமீபத்தில், எங்கள் வீட்டு மாடியில் குடியிருப்போரின் மருமகளுடன் பேசியபடி, மொட்டை மாடியில் வடகம் மற்றும் வற்றல் காயப் போட்டு கொண்டு இருந்தேன். அப்போது அப்பெண்ணின் மாமியார், 'தொணதொண'வென்று பேசியபடியும், சில சமயம் அதட்டி திட்டவும் செய்தார்.
அதனால், அப்பெண்ணிடம், 'எதுக்கெடுத்தாலும் உன் மாமியார் குற்றம் சொல்லி, திட்டிக்கிட்டே இருக்காங்களே... நீ ஏன் பேசாம அமைதியா இருக்கே...' என்றேன். அதற்கு, 'அவங்க சுபாவமே அப்படித்தான்க்கா... அவங்க பேசும் போது, பதில் பேசவோ, மறுப்போ சொல்லக் கூடாது; அப்படி செஞ்சா, எதிர்த்து பேசறதா நினைச்சுப்பாங்க. மத்தபடி, உள்ளுக்குள்ள என்மேல பாசமா தான் இருப்பாங்க. நான் எங்கேயாவது ஷாப்பிங், கோவில்ன்னு வெளிய போனா, போன் செய்து, 'வெயில்ல அலையாதே, ஜூஸ் குடி'ன்னு, 'அட்வைஸ்' செய்வாங்க. அதையுமே அதட்டலாத் தான் சொல்வாங்க.
'சிலசமயம், 'டிவியில உனக்கு பிடிச்ச பாட்டு ஓடுதுன்னும், வந்து பாரு என்றும், பொரியல் டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாத்து சொல்லு'ன்னு, உரிமையும் கொடுப்பாங்க. அதனால, அவங்க பேசுறத பெரிசா எடுத்துக்க மாட்டேன். என் மேல பாசம் காட்டுறவங்களுக்கு, கோபப்படுறதுக்கு மட்டும் உரிமையில்லையா என்ன...' என்றாள்.
மாமியாரின் குணம் மற்றும் பழக்க வழக்கத்தை நன்கு புரிந்து, பொறுமை காட்டினாலே போதும்; தேவையில்லாத சண்டை, தனிக்குடித்தனம், முதியோர் இல்லம் போன்ற கவலைகளே இருக்காது என்பது புரிந்தது!
— என்.தனலட்சுமி, தஞ்சாவூர்.
நடைபாதைக் கடையில் தர்பூசணி வாங்குகிறீர்களா?
கோடை வரும் முன்பே தர்பூசணி மற்றும் பலாப்பழ சீசன் களை கட்டுகிறது. ஈக்கள் மொய்க்காமல் இருக்க, கண்ணாடி பெட்டிகளுக்குள் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பலாச்சுளைகளையும், தர்பூசணி கீற்றுகளையும் வாங்கி சாப்பிடுவோருக்கு அன்பான வேண்டுகோள்...
நடைபாதை வியாபாரிகளில் சிலர், பலாச்சுளைகளுக்கும், தர்பூசணி கீற்றுகளுக்கும் சுவை ஏற்றுவதற்காக, 'சாக்ரீன்' என்ற செயற்கை இனிப்பு கலந்த தண்ணீரை, 'ஸ்பிரே' செய்வதாக தகவல் கசிந்துள்ளது.
சாக்ரீன் பயன்படுத்துவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். இதை எத்தனை இடங்களில் சுகாதார ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என தெரியாது. எனவே, நம் பாதுகாப்பிற்கு பலாப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை முழு பழமாக வாங்குவது நல்லது. சிறிய குடும்பமாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரருடன் கூட்டணி அமைத்து வாங்குவது சிறந்தது.
— பொன். கருணாநிதி, பொள்ளாச்சி.

