sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 12, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவையான கொள்கை பிடிப்பு!

பிள்ளைகளின் உயர் கல்விக்காக, அவர்கள் படிக்கும் பள்ளியின் அருகிலேயே வாடகைக்கு குடிபோக நினைத்தார் என் சகோதரி. அதனால், வாடகைக்கு வீடு விசாரிக்க, சகோதரியுடன் நானும் சென்றிருந்தேன்.

ஆறு குடியிருப்புகள் கொண்ட காம்பவுண்டில், 'டூ - லெட்' பலகை தொங்கியது. அவ்வீட்டின் உரிமையாளரான பெண்ணைச் சந்தித்து, விபரத்தை கூறினோம். அதற்கு அந்த அம்மா, 'எங்க காம்பவுண்டுல மொத்தம் ஆறு வீடுகள் இருக்கு; இங்கு குடியிருக்கிறவங்க யாருக்குமே மது அருந்தும் பழக்கம் கிடையாது. அதையும் மீறி குடிச்சிட்டு வந்தது தெரிஞ்சால், அடுத்த நிமிஷமே, உங்க, 'அட்வான்ஸ்' பணத்தை வாசல்ல வச்சிடுவேன்; மறுநாளே வீட்டை காலி செய்துடணும்...' என்று கண்டிப்புடன் கூறினார்.

அதற்கு என் அக்கா, 'என் வீட்டுக்காரருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; உங்க கண்டிஷனுக்கு சம்மதிக்கிறேன்...' என்று கூறி, முன்பணம் கொடுத்தாள்.

மறுவாரம் குடியேறிய பின், அப்பெண்ணிடம், 'நீங்க சொல்ற இந்த கட்டுப்பாட்டை எல்லா வீட்டுக்காரர்களும் கடைப்பிடிச்சாலே மது அருந்தும் பழக்கம் குறைஞ்சுடும்...' என்று என் அக்கா சொல்ல, அதற்கு அப்பெண், 'எங்க வீட்ல குடியிருக்கிற ஒவ்வொருத்தரும் நல்லா சம்பாதித்து, சேமித்து, நல்ல நிலைமைக்கு வரணும்ங்கிறது தான் எங்க ஆசை; குடிப்பழக்கம் இருக்கிறவங்களால முன்னுக்கு வரவே முடியாது. அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத பிரச்னைகளும் முளைக்கும். அதனால் தான், நாங்க இந்த விஷயத்தில கண்டிப்பா இருக்கோம்...' என்றார்.

இவரைப் போன்றே, அந்த ஏரியாவில், இன்னும் சில காம்பவுண்டுகளிலும், மது அருந்துவதற்கு, 'தடா' போட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.

நல்ல விஷயம் தானே!

— ஜி.எலிசபெத் ராணி, பழைய விளாங்குடி.

இதில் சகிப்புத்தன்மை வேண்டாமே!

என் உறவினரின் மகளுக்கு, சில நாட்களுக்கு முன் தான், திருமணம் முடிந்தது. இருவரும், சில ஆண்டுகளாக காதலித்து, பின், இரு வீட்டாரின் சம்மதத்துடன், நடந்த திருமணம் அது.

திருமணமான மூன்றே நாட்களில், புதுப்பெண், பிறந்த வீட்டிற்கு தனியே வந்ததோடு, தாம்பத்யத்தில் தன் கணவரின் இயலாமையை கூறி, அழுதுள்ளாள்; இதனால், உடனடியாக விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், கொடுமை என்னவென்றால், திருமணத்தன்றே தன் காதல் கணவரிடம், 'உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் சொல்லுங்க; டாக்டரிடம் போகலாம்...' என்று கூறியுள்ளாள். அவனோ, 'எனக்கு, 'அதில்' விருப்பம் இல்லை; நீ என்னை விரும்பினாயா அல்லது என் உடம்பை காதலித்தாயா...' என்று, பேசியுள்ளான்.

பெண்களே... காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, தாம்பத்யத்திற்கு தகுதியில்லாதவனை மட்டும் எந்த வகையிலும் சகித்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் தான், பின்னாளில், 'சாடிஸ்ட்டு'களாக மாறுகின்றனர் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொள்வது தான், இதற்கு தீர்வு!

கவிதா ராஜன், மதுரை.

பெற்றோரே... ஏன் இந்த எதிர்பார்ப்பு?

சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, உறவினரின் இரு மகன்களும் முணுமுணுத்தவாறு, புத்தகங்களை புரட்டியபடி இருந்தனர். உறவினப் பெண்ணிடம் விசாரித்த போது, அவள், தன் மகன்கள் படிப்பில் முழு ஈடுபாடு காட்டவில்லை என்று குறைபட்டுக் கொண்டாள். உடனே, சிறுவர்களுள் ஒருவன், 'நாங்க நல்லாத் தான் படிக்கிறோம்; ஆனா, எங்களால இவ்வளவு மார்க் தான், எடுக்க முடியுது. அதுக்கு நாங்க என்ன செய்றது...' என்றான்.

அவனிடம் எவ்வளவு மதிப்பெண் என்று கேட்டதற்கு, இருவரும் முதல் கட்ட மதிப்பெண்களை கூறினர். ஆச்சரியமடைந்த நான், 'இன்னும் உனக்கு என்ன கவலை?' என்றேன். உடனே சிறுவர்கள் முந்திக் கொண்டு, 'இவங்களுக்கு நாங்க, 'ஸ்டேட் பஸ்ட்' மார்க் எடுக்கணுமாம்; அம்மா... உங்களுக்கு அவ்வளவு ஆசை இருந்திருந்தா நீங்க படிக்கும் போது, 'ஸ்டேட் பஸ்ட்' வாங்கி, டாக்டர் ஆகியிருக்கலாம்ல... எங்கள ஏம்மா, 'நொய் நொய்'ன்னு 'டார்ச்சர்' செய்றீங்க...' என்றனர்.

பெற்றோரே... பிள்ளைகளிடம் உங்கள் கனவுகளையும், விருப்பங்களையும் சொல்லி ஊக்கப்படுத்துங்கள். ஆனால், அவற்றை அவர்களுக்குள் திணிக்க முயலாதீர்கள். இதனால், குழந்தைகள் வெறுப்படைவதோடு, நிம்மதியையும் இழப்பர்.

அதை உணர்ந்து செயல் படுங்கள் பெற்றோர்களே!

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.






      Dinamalar
      Follow us