
நூல் ஒன்றில், 'தரையில் இறங்கிய விமானங்கள்!' என்ற கட்டுரை கண்ணில் பட்டது. படிக்கும் காலங்களில் ஒவ்வொருவரும் என்னவெல்லாம் கோட்டை கட்டுகின்றனர்; பின்னர் நிதர்சனம் என்ன என்பது குறித்து, சுவைபட வெங்கடேஸ்வரன் என்பவர் (வணிகவரி துறை) எழுதியுள்ளார்.
கட்டுரையின் சில பகுதிகள்...
மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை மீறி, எப்போதுமே ஏதோவொன்றிற்காக அலைந்து கொண்டேயிருக்கிறான். அந்த ஏதோவொன்று வேறொன்றுமில்லை... சமூகத்தில் தனக்கென தனி அங்கீகாரம் வேண்டுமென்பதில் குறியாயிருந்து, அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறான்.
எண்ணிப் பாருங்கள்... எத்தனை பேர் உரிய அங்கீகாரம் பெற்றிருக்கின்றனர்? குறிப்பாய், இளைஞனாயிருந்த காலத்தில், நம் லட்சியங்கள் எதை நோக்கி இருந்தது, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? துளியும் தொடர்பில்லாது, ஏதோவொரு வெறுமை சூழ, இயந்திர வாழ்க்கையில் பயணப்பட்டு கொண்டிருக்கிறோம். நான் சொல்வது உண்மை தானே?
இருபத்தைந்து வயது வரை புரட்சியைப் பற்றிப் பேசாதவனிடத்திலும், 25 வயதிற்கு மேல் புரட்சியைப் பற்றி பேசுபவனிடமும் ஏதோவொரு குறையுண்டு என்றான் ஒரு ரஷ்ய அறிஞன்.
ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி என் நினைவுகளை செலுத்துகிறேன். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். பல்வேறு இலக்கிய வட்டங்களில் தொடர்பு ஏற்பட்டதன் மூலம், எதிர்காலம் பற்றிய கனவுகள் உச்சத்தில் இருந்தன.
இளைஞர்களுக்கு தன்னைப் பற்றிய அதிகப்படியான நம்பிக்கை உருவாகும் காலம் இளமைப்பருவம்; அதற்கு நானும் விதிவிலக்கல்ல.
பல்வேறு புத்தகங்களைப் படிப்பதில் வெறியே ஏற்பட்டிருந்தது. நூலகமே கதியாய் கிடந்து, சில புகழ்பெற்ற படைப்புகளைப் படித்ததில், சிந்தனையில் பல்வகை மாற்றங்கள் ஏற்பட்டது.
நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சிறு பத்திரிகை ஆரம்பித்து, 'அறிவு' என்று அதற்கு பெயர் வைத்தோம். ஆசிரியர் குழுவில் நானும் ஒருவனாக இருந்தேன். போதிய அளவு விற்பனை ஆகாததாலும், (படிக்கிற மாணவர்களான - எங்களிடம் ஏது காசு?) பத்திரிகைக்கான விளம்பரங்கள் வராததாலும், நிறுத்தி விட்டோம்.
ஆனால், அது ஒரு இனிய அனுபவமாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை. ஒரு முறை எங்கள் கல்லூரிக்கு, அங்கு படித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக டில்லியில் பணியாற்றும் ஒருவர், தன் குடும்பத்துடன் வந்து, அவர் படித்த வகுப்பறைகளை சுற்றி பார்த்துவிட்டுப் போயிருந்தார்.
'இனிமேல் இதுபோல் அதிகாரிகள் நம் கல்லூரியிலிருந்து உருவாகுவாரா...' என்று, பேராசிரியர்கள் ஏக்கத்தோடு பேசிய போது, 'ஏன் நம்ம பையன் இருக்கானே... இவன் கண்டிப்பா பெரிய ஆளா வருவான் பாருங்க...' என்றார் கல்லூரி முதல்வர் என்னை சுட்டிக் காட்டி!
பாவம், அவருக்கு நான், 'அரியர்ஸ்' வைத்திருந்தது தெரியாது. எனக்கு ரொம்ப பெருமையாக இருந்ததுடன், என் நம்பிக்கை துளிர்விட்டது.
நண்பர்கள் அனைவரும் இரவு இரண்டு, மூன்று மணி வரை , சமூகத்தின் பல்வேறு கூறுகளை எங்கள் அறிவிற்கு எட்டியவரை அலசுவோம். இச்சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும்; அதற்கு, பொது வாழ்க்கையில் இறங்க வேண்டும் என்றெல்லாம் கனவுகள் கண்டோம்.
ஒரு முறை வாணியம்பாடியில், கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் பேராசிரியர் அப்துல் காதர் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சியில், எங்கள் ஐவருக்கும் பேச வாய்ப்பு கிடைத்தது. 10 ஆயிரம் பேர் திரண்டிருந்த அந்த கூட்டம், வெகு சிறப்பாக மகிழ்ச்சியுடன் நிறைவுற்றது.
பயணியர் விடுதியில் ஓய்வில் இருந்த அப்துல் ரகுமானை நாங்கள் ஐவரும் சந்தித்த போது, அவர், 'நீங்கள் ஐவரும் மிக நன்றாகப் பேசினீர்கள்; வருங்காலத்தில், தமிழகமே உங்களை தாங்கப் போகிறது...' என்று புகழ்ந்தார்.
எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
பொது வாழ்வில் ஈடுபட நானும், என் அப்பாவிடம் எவ்வளவோ வாதிட்டுப் பார்த்தேன். அவர் சராசரி நடுத்தரக் குடும்பத்து தகப்பனாராக நடந்து கொண்டார். 'தி இந்து' ஆங்கில நாளேட்டில், பணியாற்ற வாய்ப்பு வந்த போதும் தடுத்து விட்டார்.
என் கனவுகள் அவருக்குத் தெரியும் என்றாலும், அவை நடைமுறையில் சாத்தியப்படாது என்ற எண்ணத்தில் அவர் உறுதியாக இருந்தார். நான் அப்பா பிள்ளை என்பதால், என் துக்கத்தை மறைத்து, அவர் சொன்னபடியே செய்தேன்.
மூன்றாமாண்டு கல்லூரித் தேர்வுகள் முடிந்ததும், அப்பாவின் மனதை எப்படியாவது சரிக்கட்டலாம் என்று மனப்பால் குடித்த சமயம், இரண்டாமாண்டு படிக்கும் போது எழுதிய தேர்வாணைய தேர்வு முடிவுகள் இடியென வெளியாகின; நான் பாஸ் செய்திருந்தேன். உடனடியாக பணியில் சேர வற்புறுத்தினார் அப்பா; அவ்வாறே செய்தேன்.
இன்று, என்பால் அன்பு கொண்டிருந்த பலரது நம்பிக்கைகள் குலைந்து, என் முகம் தெரியாமல், இன்னும் சொல்லப் போனால், என் சுயத்தை இழந்து, பத்தோடு பதினொன்றாய், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரும் பஞ்சப் படிக்காகவும், ஆண்டுக்கொரு முறை வரும் ஊக்கத் தொகைக்காகவும் காத்திருக்கும் பரிதாப அரசு ஊழியனாக மாறியிருக்கிறேன்.
இது, என் வீழ்ச்சி என்றே கருதுகிறேன்.
என்னைப் போல் எத்தனை பேர் - இன்னும் பன் மடங்கு திறமையாய், நம் துறை (வணிக வரித்துறை)யிலும், ஏன் இன்ன பிற துறைகள் மற்றும் தொழில்களிலும், நம்முடைய வரிச் சட்டத்தில் வரும் என்ட்ரி, 67டி போல் எதிலும் சேராமல், பிறரால் குறிப்பிடப்படும் அளவிற்கும் இல்லாமல் - உயரப் பறந்த, பறக்கத் துடித்த விமானங்கள் இன்று தரையில் கிடக்கின்றனவோ!
- கட்டுரை ஆசிரியரின் கருத்தைப் படித்தபின், நான் கட்டிய ஆகாயக் கோட்டைகள் ஒரு கணம் என் முன், தோன்றி மறைந்தன!

